“மாமியார் வீட்டிற்கு செல்லும் அம்மன்” - கோடிக்கணக்கான மக்கள் தரிசிக்கும் சிரசு திருவிழா.. மூன்று நாட்கள் ஊர் மக்கள் செய்யும் அன்னதானம்!

ஆனால் குடியாத்தம் திருவிழாவிற்கு ஒரு தனி சிறப்பு இருக்கு முத்தியாலம்மன் கோயில் கங்கை அம்மனுக்கு மாமியார்
“மாமியார் வீட்டிற்கு செல்லும் அம்மன்” - கோடிக்கணக்கான மக்கள் தரிசிக்கும் சிரசு திருவிழா.. மூன்று நாட்கள் ஊர் மக்கள் செய்யும் அன்னதானம்!
Published on
Updated on
4 min read

திருவிழா என்றாலே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தான் நினைவுக்கு வரும், பெரியவங்களுக்கு சொந்தக்காரங்களை எல்லாம் திரும்ப சந்திக்க போகிறோம் என்ற சந்தோஷம். குட்டி குட்டி, சுட்டி வாலு  பசங்களுக்கு  திருவிழாவிற்கு வாங்க போற புது ஆடைகளையும், எல்லாரும் வாங்கி தர போற பொம்மைகளையும்  நெனச்சு சந்தோஷம். வெளியூரில் தங்கி வேலை செய்யுற இளைஞர்களுக்கு திருவிழாவுக்கு ஊருக்கு போகப் போறோம் என்ற சந்தோஷம்,  இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு வகையான மகிழ்ச்சியை தருவது தான்  ஊர்  திருவிழா.

அம்மனுக்கு நடக்கும் திருவிழாக்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடக்கும் கங்கை அம்மன் திருவிழாவை கேள்விப்பட்டு இருக்கீங்களா? பால் கொம்பு நடுவதில் தொடங்கி பல்லக்கு தூக்கும் வரைக்கும் தினம் தினம் கொண்டாட்டம் தான். ஏப்ரல் 30ம் தேதி காப்பு கட்டி தொடங்கப்படும் இந்த திருவிழா மே 22 ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெறும்.  

திருவிழா உருவான வரலாறு: 

வழக்கமாக  சிரசு திருவிழா என்றாலே, எல்லா ஊர்லயும் ரேணுகா தேவி ஜமதக்னி முனிவர் மற்றும் பரசுராமன் கதையை மையமாக வைத்து மட்டும் தான் திருவிழா நடக்கும். ஆனால் குடியாத்தம் திருவிழாவிற்கு ஒரு தனி சிறப்பு இருக்கு முத்தியாலம்மன் கோயில் கங்கை அம்மனுக்கு மாமியார் வீடு என்றும்.கங்கை அம்மன் கோயில் தாய் வீடு என்றும் ஒரு ஐதீகம் இருக்கு.

கங்கை அம்மன் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் அம்மா வீட்டிற்கு செல்வார்களாம். அந்த ஒரு நாள் தான்  எங்கள் ஊரில் சிரசு திருவிழாவாக  கொண்டாடப்படுகிறது, என்பது முன்னோர்கள் சொன்ன புராண கதை.

கூழ் வார்த்தல்:

காப்பு  கட்டி முடிந்த மறுநாள் தொடங்கி சிரசு திருவிழா நடக்குறவரைக்கும். தினம் தோறும் அம்மனுக்கு  ஊர் மக்கள் கூழ் வார்த்து வழிபாடு நடத்துவாங்க,அதிலும் அந்த கும்ப சோறு சுவை இறுக்கே, இப்ப நினைத்தாலும் நாக்கு ஊருது.  மந்தாரை இலையில் படையல் போட்ட சாதம், கருவாடு குழம்பு, கொழுக்கட்டை, முருங்கைக்கீரை இவற்றை எல்லாம் ஒண்ணா சேத்து பிணைந்து கூழோட சாப்பிடும் போது சொர்க்கம் மாதிரி இருக்கும்.

அடித்தண்டா போடுதல்:

அடித்தண்டா என்பது ஒரு வேண்டுதல் முறை, காப்பு கட்டும் நாளில் தொடங்கி திருவிழா முடியும் வரை, கங்கை அம்மன் கோவில் வளாகத்தில் தேங்காய் உருளும் சத்தம் கேட்டு கொண்டே  இருக்கும்.

தண்ணீரில் உடலை முழுக்க நனைத்து கொண்டு, அம்மன் சன்னிதானத்தில் நின்று தேங்காயை உருட்டி விட வேண்டும். அந்த தேங்காய் நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் தரையில் விழுந்து தேங்காயை தொட்டு வணங்கி மீண்டும் எடுத்து உருட்டி விட வேண்டும்.இப்படி அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மூன்று முறையோ அல்லது ஐந்து முறையோ கோயில் வவளாகத்தை  சுற்றி வருவார்கள்.

இது போல ஆண்டுதோரும் வேண்டுதலை வைக்கும் பக்தர்களும்  வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும் ஆயிரக்கணக் கணக்கில்  அம்மனுக்கு அடித்தண்டா  செலுத்துகின்றனர்.   

தேர் திருவிழா:

சாலையில் எறும்பு மாதிரி ஊர்ந்து போற மக்கள். கம்பீரமாக காட்சியளிக்கும் தேர், தேரில் காட்சிதர அம்மனை மட்டும் இல்லாம கிழத்தியர்களை காண வரும் ஆடவர் கூட்டம் என களைகட்டும்.

அம்மன் தேர் கடந்து போற வழியில இருக்குற மசூதிக்கு அருகில் இனம் மதம் வேறுபாடு பாக்காம இஸ்லாமியர்கள்  அம்மனை கண்டு ரசிக்குற அழகு குடியாதத்தோட நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.

அம்மன் தேர் மேல நினைத்தது நடக்க, பக்கதர்கள் வேண்டிக்கிட்டு தெளிக்குற உப்பும் மிளகும். தேர் அந்த இடத்தை விட்டு நகரத்து போன பிறகு வெயிலில் பட்டு மினுமினுக்கும் உப்பு வைரம் போல் காட்சியளிக்கும்.இது போல தேரின் மீது  உப்பு மிளகும் தெளித்து வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஏராளம்.

ratham
ratham

சிரசு திருவிழா:

குடியாத்தத்தில் இருந்து எந்த காரணத்துக்காக வெளியூருக்கு சென்றவர்களாக இருந்தாலும் இந்த (வைகாசி 1) நாள் மட்டும் மிஸ் பண்ணாம ஊருக்கு வந்துடுவாங்க. கரணம் இது குடியாத்தம் மகாராணியின் திருநாள்.

கடல் அலை போல அலைமோதும் மக்களுக்கு மத்தியில் ஏழு குடைகள் பின் சூழ சிரித்த முகத்தோடு காட்சியளிக்கும் அம்மனை பார்க்க இரண்டு கண்கள் போதாது. காலையில் சிரித்த முகத்தோடு தாய் வீட்டிற்கு வேகமாக செல்லும் அம்மன் இரவில் வாடிய  முகத்தோடு மெதுவாக மீண்டும்  மாமியார் வீட்டிற்கு செல்வர். காலையிலும் பார்க்கும் அம்மன் முகத்திற்கும் மாலையில் இருக்கும் அம்மன் முகத்திற்கும் நன்றாகவே வேறுபாடு தெரியும்.

அம்மனின் ஊர்வலத்துக்கு பின்னாடி வர கலை குழுக்களின் கூட்டம் குடியாத்தம் இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்துற விதமா அமைந்து இருக்கும். சிலம்பாட்டம்,சுருள் வித்தை, புலியாட்டம் என தமிழரின் அத்தனை பாரம்பரிய கலைகளையும் உங்களால ஒரே இடத்தில் பார்க்கமுடியும்.

அம்மன் கோவிலை சென்று அடைந்த பிறகு  தொடங்கி மீண்டும் அம்மனை வெளியில் எடுத்து வரும் வரை, எண்ணில் அடங்காத பூமாலைகளை ஆடவர்கள்  கூட்டம் கூட்டமாக சேர்ந்து தரை தப்பட்டை முழங்க ஆடல் பாடல்களுடன் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து,கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். அம்மனை கோவிலில் இருந்து வெளியே எடுக்கும் போது  ஒவ்வொரு ஆண்டு கண்டிப்பாக மழை வந்துவிடும். இதை மீண்டும் மாமியார் வீட்டிற்கு செல்லும் அம்மன் தாய் வீட்டை பிரிய முடியாமல் கண்ணீர் விடுவதாக மக்கள் கருதுகின்றனர்.

வாணவேடிக்கை: 

அம்மன் மீண்டும் தனது மாமியார் வீட்டிற்கு செல்லும் போது, மாமியார் வீட்டினர் வெடி வெடித்து வரவேற்கும் விதமாக, லட்சக்கணக்கில் செலவு செய்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்த படுகிறது.

இதை காண்பதற்கு சுற்றுவட்டாரத்தில் இருந்தும். உள்ளூரில் இருந்து வரும் மக்களை கட்டுப்படுத்தவே நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்படுவார்கள்.  உலகமே இருட்டான வானத்தை பார்க்கும் போது அன்று ஒரு நாள் மட்டும் வண்ணமான வானத்தை குடியாத்தம் மக்கள் ரசிப்பார்கள்.

crackers
crackers

பூ பல்லக்கு:

சிரசு முடிந்த மூன்றாம் நாள் இரவு குடியாத்தம் பகுதியில் உள்ள முக்கிய கோவில்களின் சார்பாக பூ பல்லக்கு ஊர்வலம் நடைபெறும். வித விதமாக அலங்கரிக்கப்பட்ட  பல்லக்குகளில் சாதாரண கடவுள் சிலைகள் இல்லாமல், புத்திலிருந்து அம்மன் வருவது போல, சிவ லிங்கத்திற்கு விநாயகர் நீர் ஊற்றுவது போல் என வித விதமாக தெய்வங்கள் காட்சியளிக்கும்.

அன்று இரவு முழுவதும் கரகாட்டம் பாட்டுக்கச்சேரி என தூங்கா நகரமாக குடியாத்தம் மாறிவிடும். பூ பல்லக்கு ஊர்வலத்தின் போதும் வாணவேடிக்கைகள் வெடிக்கப்படும்.

அன்னபூரணியாக மாறும் ஊர்:

தேர் திருவிழா, சிரசு திருவிழா மற்றும் பூ பல்லக்கு என மூன்று நாட்களும் கையில் ஒரு ரூபாய் இல்லை என்றாலும், திருவிழாவை பார்த்துவிட்டு வயிறு நிறைய தேவையானதை சாப்பிட்டு போகலாம் குடியாதத்தில்.

ஒவ்வொரு வீதியிலும் கடைகளிலும். இட்லி, பொங்கல், பூரி என தொடங்கி சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, லெமன் சாதம், தயிர் சாதம், ஜூஸ் ,ஐஸ் கிரீம் என அனைத்தையும் அன்னதானமாக வழங்குவார்கள்.

திருவிழா கடைகள்:

கங்கை அம்மன் திருவிழாவை ஒட்டி, கோவிலுக்கு அருகில் உள்ள கவுண்டன்ய மகாநதியில் போடப்படும் கடைகளில் இல்லாத பொருள்களே இல்லை அத்தியாவசியத்தி தொடங்கி ஆடம்பர பொருட்கள் என்று அனைத்தும் கிடைக்கும். கிட்ட தட்ட ஒரு 200 மற்றும் 300 கடைகள் இருக்கும்.

கடைகள் ஒரு புறம் எனில் மறு பக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமடையும் ரைடுகள் இருக்கும். ஜெயிண்ட் வீல், டிராகன், கார் ரைட், பைக் ரைட், என தீம் பார்க்கில் உள்ள அனைத்து விதமான ரைடுகளும் இருக்கும்.

என்ன இப்படி பட்ட ஒரு திருவிழாவை மிஸ் பண்ணிட்டோம் என கவலை படுறீங்களா? தேர் சிரசு எல்லாம் முடிஞ்சி போச்சி அதை அடுத்த வருஷம் மிஸ் பண்ணாம  பாருங்க. ஆனா திருவிழாக்கடை ஒரு மாதம் இருக்கும்  போக முடிஞ்சவங்க போயிட்டு நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com