“2025 குரு பெயர்ச்சி”- நன்மைகளை மட்டுமே தரப்போகும் குரு பகவான்..ராஜா ஆகப்போகும் ராசிக்காரர்கள்!

“யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ ” எந்த ராசிக்காரர்களுக்கு, என்ன மாற்றம் நடக்கும் என்று ஒவ்வொரு ராசியாக விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.
குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள்
Published on
Updated on
9 min read

“குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்” ஒருவர் மீது குரு பார்வை பட்டால் அவர் வாழ்க்கையில் கல்வி, வேலை,குடும்பம் என அனைத்துமே சிறப்பாக இருக்கும். எனவே மக்கள் குருவை மிகுந்த பக்தியுடன் வணங்குவதை நம்மால் பார்க்க முடியும்.

அப்படிப்பட்ட குரு பகவான். இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, மே மாதம் 11-ஆம் தேதியும் திருகணிதத்தின் படி, மே 14 -ஆம் தேதியும் பெயர்ச்சியடையுள்ளார்.எனவே இந்த ஆண்டு குரு பெயர்ச்சியால் எந்த ராசியினருக்கு என்ன நன்மை என்பதை சிறப்பாக கணித்து சொல்லியிருக்கிறார்.நம் “யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ ” எந்த ராசிக்காரர்களுக்கு, என்ன மாற்றம் நடக்கும் என்று ஒவ்வொரு ராசியாக விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும் ஏழாம்பார்வை தனுசு ராசியிலும் ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது.

மேஷம் ராசியினரே!

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்த குரு பகவான், தற்போது மூன்றாம் இடத்துக்குச் செல்கிறார். அவரது ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஏழு, ஒன்பது, பதினோராம் இடத்தில் பதிகின்றன. இந்த அடிப்படையில் தற்போதைய குரு பெயர்ச்சி உங்களுக்கு சகலவிதத்திலும் சந்தோஷத்தை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். அதேசமயம், சோம்பலை உதறுவதும், தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சிகளைச் செய்வதும் சிறப்பான பலன்களை தொடரச் செய்யும்.

அலுவலகத்தில் இதுவரை அனுபவித்த சங்கடங்கள் நீங்கி, பலவிதத்திலும் நன்மைகள் ஏற்படத் தொடங்கும். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் வீண்பழி ஏற்ற நிலை மாறும். மேலதிகாரிகளால் உங்கள் திறமைகள் உணரப்படும். இழந்த பெருமைகள் திரும்பக் கிடைக்கும். இதுவரை வேலை தேடுவதே வேலையாக இருந்தவர்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிட்டும். தடைப்பட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் புதிய பணி மாற்றத்தால் உயர்வுகளும் பெருமையும் வந்து சேரும்.

வீட்டில் மகிழ்ச்சி மலரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் சுமுகமாகக் கைகூடும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தரவோ, பெறவோ வேண்டாம்.வாரிசுகளிடம் வீண் கடுமை வேண்டாம். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். புதிய முயற்சிகளில் அவசரம் கூடாது. வங்கிக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவது முக்கியம்.

அரசியலில் இருப்பவர்களுக்கு திடீர் பதவி, பெருமைகள் கிடைக்கும். அதேசமயம் வார்த்தைகளில் நிதானம் முக்கியம். யாருக்காகவும் ஜவாப், ஜாமீன் தரவேண்டாம்.அரசாங்கப் பணிகளில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடியுங்கள். ஏற்றம் வரும் சமயத்தில் கர்வத்தை சுமப்பதைத் தவிருங்கள். சினிமா, நாடகம், கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத்தொடங்கும். இந்த சமயத்தில் சஞ்சலம் சபலம் தவிர்ப்பது முக்கியம். படிப்பில் முழு கவனம் செலுத்துவது மாணவர்களுக்கு முக்கியம். அவசரமும் அலட்சியமும் வேண்டவே வேண்டாம்.

ஆரோக்யத்தில் நரம்பு, கண்கள், அடிவயிறு பிரச்னைகள் வரலாம். தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது மிகமிக அவசியம். வாகனத்தை ஓட்டும்போது நிதானம் முக்கியம். எப்போதும் முருகன் வழிபாடு செய்வது, அபிராமி அந்தாதியில் உள்ள 40,59,75 வது பாடல்களைக் கேட்பது, சொல்வது சிறப்பான நற்பலனைத் தரும். திருவெண்காடு தலத்துக்கு ஒரு முறை சென்று வருவது, குருபெயர்ச்சி காலகட்டத்தை தித்திக்க வைக்கும்.

ரிஷபம் ராசியினரே!

இதுவரை உங்கள் ஜன்ம ராசியில் இருந்த குருபகவான், தற்போது இரண்டாம் இடமான மிதுனத்திற்குச் செல்கிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஆறு, எட்டு, பத்தாம் இடத்தில் பதிகின்றன. இந்த அடிப்படையில் தற்போதைய குரு பெயர்ச்சி உங்களுக்கு உன்னதமான காலகட்டமாக இருக்கும். அதேசமயம் வார்த்தைகளில் நிதானமும், உடல்நலத்தில் அக்கறையும் மிகமிக முக்கியமானதாக இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகள் உருவாகும். எந்தச் செயலையும் திட்டமிட்டு நேரம்தவறாமல் செய்வது நல்லது. பொறுப்புகளைப் பற்றி சுமையாகப் பிறரிடம் புலம்ப வேண்டாம். இடமாற்றம், பதவி மாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம்.புறம் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

குடும்பத்தில் இனிய சூழல் உருவாகும். உறவுகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சுபகாரியத்தடைகள் தெய்வ வழிபாட்டால் நீங்கும். வீடு, வாகனச் சேர்க்கையில் நிதானம் அவசியம். தம்பதியர் உடல்நலத்தில் பரஸ்பரம் அக்கறை அவசியம். பூர்வீக சொத்து சார்ந்த வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும். வர்த்தகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ப லாபம் வரத்தொடங்கும். முதலீடுகள் எதையும் யோசித்து செய்யுங்கள்.

அரசியல் சார்ந்தவர்களுக்கு நிதானமே நிலையான ஏற்றம் தரும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். அரசாங்க உத்தியோகம் செய்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் நிதானமும் நேர்மையும் தவறாமல் இருப்பது முக்கியம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். சினிமா, மியூசிக், நாடகம், கலைத்துறையினரின் வாய்ப்புகள் தேடி வரும்போது வார்த்தைகளில் நிதானம் முக்கியம். மாணவர்கள் சோம்பல் தவிர்ப்பது அவசியம். படித்ததை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள்.

உடல்நலத்தில் ரத்த அழுத்த மாற்றம் கொலஸ்ட்ரால், ரத்த நாள உபாதைகள் வரலாம்.. உணவை முறைப்படுத்துங்கள். பயணத்தில் வித்தைகாட்டல் கூடாது. எப்போதும் மகாலக்ஷ்மி வழிபாடு மங்களம் சேர்க்கும். சுக்ரனுக்கு உரிய தலமான கஞ்சனூர் சென்று வழிபட்டு வருவது, உங்கள் வாழ்க்கையை சுபிட்சம் நிறைந்ததாக்கும்.

மிதுனம் ராசியினரே!

இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் இருந்த குருபகவான், தற்போது உங்கள் ஜன்மராசியான மிதுனத்திற்கே வருகிறார். அவரது விசேஷப் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஐந்து,ஏழு, ஒன்பதாம் இடங்களிலேயே பதிகின்றன. இந்த சமயத்தில் யாராவது ஜன்மத்தில் குரு வந்தால், எல்லாமே சங்கடம்தான் என்று சொன்னால் நம்ப வேண்டாம். உங்கள் ராசிநாதனான புதன், குருவின் நட்பு கிரஹம். எனவே நட்பு வீட்டுக்கு வரும் குரு நல்லதையே செய்வார். இந்த அடிப்படையில் இது உங்களுக்கு உழைப்புக்கு ஏற்ப உயர்வுகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் முயற்சிகளில் முடக்கம் கூடாது. மேலதிகாரிகளுடன் வீண் தர்க்கம் வேண்டாம். உடன் இருப்போர் குறைகளை பெரிதுபடுத்திப் பேசுவது கூடாது. பொறுப்புகளைத் திட்டமிட்டுச் செய்துமுடித்தால், படிப்படியாக பதவி,பொறுப்பு உயர்வுகள் வரும். புதிய வேலைக்காக காத்திருப்போர் நேர்வழியில் முயற்சிப்பதே நல்லது.

வீட்டில் விட்டுக்கொடுத்துப் போவது முக்கியம். தம்பதியர் இடையே மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். இளம்வயதினர் திடீர் முடிவுகளை எடுப்பதைவிட, குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவதே நல்லது. பொது இடங்களில் வீண் ஆடம்பரங்களைத் தவிருங்கள். அநாவசியக் கடன்கள் வாங்கவேண்டாம். செய்யும் தொழில் சீரான வளர்ச்சிபெறும். உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் தரத்தில் கவனம் முக்கியம்.

அரசியலில் இருப்பவர்கள் அகலக்கால் வைப்பது கூடாது. மேலிடத்தின் அனுமதி இல்லாமல் எந்தச் செயலையும் செய்யவேண்டாம்.பிறருக்காக வக்காலத்து வாங்குவதைத் தவிருங்கள். அரசுப்பணிகளில் இருப்பவர்களுக்கு ஏற்றத்தின் அளவுகோல் அதிகரிக்கும். புறம்பேசுவது, கேட்பதைத் தவிருங்கள். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். கலை படைப்புத் துறையினருக்கு முயற்சிகள் பலிதமாகும். பலகாலக் கனவுகள் நனவாகும். மாணவர்களுக்கு சீரான உயர்வுகள் கிட்டும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள்.

கடகம் ராசியினரே!

இதுவரை உங்கள் ராசிக்குப் பதினோராம் இடத்தில் இருந்த குருபகவான், தற்போது பன்னிரண்டாம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். அதேசமயம் அவரது விசேஷ பார்வைகளான ஐந்து, ஏழு,ஒன்பதாம் பார்வைகள், உங்கள் ராசிக்கு முறையே நான்கு, ஆறு, எட்டாம் இடத்தில்பதிகின்றன. இத்தகைய அமைப்பின் காரணமாக இது உங்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதேசமயம் எதிலும்முழுகவனம் முக்கியமாகத் தேவைப்படும்.

அலுவலகத்தில் உங்கள் திறமை மதிக்கப்படும். உரிய பாராட்டுகள் கிட்டும். அதேசமயம் ஒருபோதும் அவசரமும் அலட்சியமும் கூடாது. மேலதிகாரிகள் அனுமதி இல்லாத எந்தச் செயலையும் செயல்படுத்த வேண்டாம். புதிய வாய்ப்புகள் சிலருக்குத் தேடிவரும். அதில் வறட்டு கௌரவம் பார்க்க வேண்டாம்.

குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்.தம்பதியருக்குள் தர்க்கம் தவிர்த்தால், அன்யோன்யம் உருவாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் சுலபமாக பைசலாகும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். செய்கிற தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம். யாருக்காகவும் தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். பங்குவர்த்தகம், சூதாட்டம், பந்தயங்களில் முதலீடு தவிருங்கள்.

அரசியலில் இருப்பவர்களுக்கு அமைதியான செயல்கள் முக்கியம். யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் தொடர்ச்சியாக வரும்.பணி சார்ந்த கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலைபடைப்புத் துறையினருக்கு அரசுவழி பாராட்டு, பெருமைகள் கிட்ட வாய்ப்பு உண்டு. மாணவர்கள் மறதியை மறக்க எதையும் அர்த்தம் உணர்ந்து படிப்பது அவசியம்.

இரவுநேரப் பயணங்களில் இருட்டான இடங்களில் தனியே இறங்க வேண்டாம். ஆரோக்யத்தில் தோள்பட்டைவலி, முதுகுத்தண்டுவட உபாதை, தூக்கமின்மை பிரச்னைகள் வரலாம். இஷ்டமகானை எப்போதும் கும்பிடுங்கள். தென்குடித் திட்டை திருத்தலம் சென்று ஆராதித்து வருவது வாழ்வை தித்திக்கச் செய்யும்.

சிம்மம் ராசியினரே!

குருபகவான், இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்தார். அவர் இப்போதைய பெயர்ச்சியில் பதினோராம் இடத்திற்கு வருகிறார். அதோடு அவரது சிறப்புப் பார்வைகளான ஐந்து,எழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே மூன்று, ஐந்து, ஏழாம் இடங்களில் பதிகின்றன. இது சிறப்பான அமைப்பாகும். இந்த அடிப்படையில் இது உங்களுக்கு அல்லவை குறைந்து நல்லவை அதிகரிக்கத் தொடங்கும் காலகட்டமாக இருக்கும். அதேசமயம் எந்த சமயத்திலும் விட்டுக்கொடுத்தலும், நிதானமும் முக்கியமாக இருக்கும்.

அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். அதேசமயம், பதவி, இடமாற்ற உயர்வுகள் பெற காத்திருப்போர்,. திட்டமிட்டு, நேரம் தவறாமல் உழைத்தால் அந்த உயர்வுகளை சீக்கிரமே பெறலாம். மேலதிகாரிகளுடன் வீண் தர்க்கம் தவிருங்கள். சக ஊழியர்கள் ஆதரவு மனமகிழ்ச்சி தரும்.

குடும்பத்தில் வசந்தகாலம் வரத்தொடங்கும். அதை உங்கள் வீண் வாதத்தால் விரட்டிவிட வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை உருவாகும். அதைத் தக்க வைக்க, வீண் வாக்குவாதம் தவிருங்கள். குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். கொடுக்கல்,வாங்கலை உடனுக்கு உடன் குறித்து வையுங்கள். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்.

அரசுப்பணி செய்பவர்களுக்கு துணிவை விட பணிவே நல்லது. அரசியல்துறையினர் முகஸ்துதி நபர்களை உடனே உதறுவது உத்தமம். பொது இடங்களில் வாக்குறுதி எதுவும் தரும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். கலை படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும்.எதிர்பாலருடன் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும்.

உடல்நலத்தில் அடிவயிறு, மூட்டுகள், தலைவலி, ரத்த அழுத்த மாற்றப் பிரச்னைகள் வரலாம். வாகனத்தில் செல்லும்போது கவனச் சிதறல் கூடாது. எப்போதும் அனுமனைக் கும்பிடுங்கள். திருநள்ளாறு திருத்தலம் சென்று ஆராதித்து வருவதும், கோளறு பதிகத்தினை எப்போதும் கேட்பதும் வாழ்வை வசந்தமாக்கும்.

 கன்னி ராசியினரே!

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்திற்கு வருகிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே இரண்டு, நான்கு, ஆறாம் இடங்களில் பதிகின்றன. இந்த அடைப்படையில் விட்டுக்கொடுத்தலும் வார்த்தைகளில் நிதானமும் இருந்தால், இது உங்களுக்கு உயர்வுகளைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதேசமயம் பொறுப்புகளில் முழுகவனம் முக்கியம். உங்கள் தனிப்பட்ட பணிகள் எதையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகள் ஆதரவு அதிகரிக்கும். சக ஊழியர்களில் எவரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.

வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். அது நிலைக்க உங்க வார்த்தைகளில் நிதானமும், செயல்களில் விட்டுக்கொடுத்தலும் அவசியம். மூன்றாம் நபர் முன்னிலையில் குடும்ப உறுப்பினர்கள் எவரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். வாகனம், வீடு மாற்ற வாய்ப்பு உண்டு. பெற்றோர் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். செய்யும் தொழிலில் யாருடைய கட்டாயத்தாலும் சட்டப்புறம்புக்கு இடம்தரவேண்டாம். புதிய முயற்சிகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள்.

அரசியல்சார்ந்தவர்களின் பெருமை நிலைக்கும். அதேசமயம் உடனிருப்போர் சூழ்ச்சியால் நீங்கள் தலைகுனிய நேரிடலாம், கவனம் முக்கியம். அரசுத்துறையினர், அலுவலக ஃபைல்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். மேலிட அனுமதி இன்றி நகலெடுக்கவோ,பிறரிடம் பகிரவோ வேண்டாம். கலைஞர்கள், சினிமாத்துறையினர்க்கு வாய்ப்புகள் முயற்சிக்கு ஏற்ப வரத்தொடங்கும். மாணவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. அயல்நாட்டுக் கல்வியில் அவசரம் வேண்டாம்.

உடல்நலத்தில் கழிவு உறுப்பு உபாதை, அஜீரணம், இடதுபக்கப் பிரச்னைகள் வரலாம். வாகனத்தில் வேகம் அறவே கூடாது. பைரவரை எப்போதும் கும்பிடுங்கள். திருக்கொள்ளிக்காடு திருத்தலம் சென்று ஆராதிப்பதும், கோவிந்த நாமாவளியினை எப்போதும் கேட்பதும் வாழ்வை செழிக்க வைக்கும்.

 துலாம் ராசியினரே!

குருபகவான் இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் முறையே உங்கள் ஜன்ம ராசியிலும் மூன்று, ஐந்தாம் இடங்களிலும் பதிகின்றன. இது மிகவே விசேஷமான அமைப்பு எனவே சகல விதத்திலும் எற்றங்கள் ஏற்படும். அதே சமயம், பொறுமை இருந்தால்தான் பெருமைகள் நிலைக்கும்..

அலுவலகத்தில் அனுகூலமான சூழல் நிலவும். உடனிருப்போர் ஆதரவு ஊக்கம் தரும். மேலதிகாரிகளிடம் பேசும்போது பணிவே நல்லது. இடமாற்றம், பதவி மாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது நல்லது. பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச்சிதறல் கூடாது.

வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விலகி இருந்த நட்பும் உறவும் வீடுதேடி வரும். யாரிடமும் கடுஞ்சொல் பேசவேண்டாம். குழந்தைகளால் பெருமை சேரும். வாழ்க்கைத்துணையுடன் அன்யோன்யம் உருவாகும். செய்யும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் அவசரம் வேண்டாம்

அரசியல்சார்ந்தோர்க்கு அனுகூலக்காற்று வீசும். சிலருக்கு பதவி, பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. அரசுத்துறையில் இருப்போர். எதையும் திட்டமிட்டு நேரம்தவறாமல் செய்தால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. சினிமா, நாடகம், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முயற்சிகள் பலன் தரும். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் அறிவுரைகளை அவசியம் கேளுங்கள். இரவில் அதிகநேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள்.

உடல்நலத்தில் அல்சர், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, உணவு எதுக்களிப்பு உபாதைகள் வரலாம். இயன்றவரை இரவுநேரப் பயணம் தவிருங்கள். விநாயகரைத் துதியுங்கள். ஆலங்குடி திருத்தலம் சென்று ஒருமுறை தரிசித்து வருவதும், எப்போதும் இஷ்டமகான் துதிகளைக் கேட்பதும் வாழ்வில் ஆனந்தம் நிறையச் செய்யும்.

விருச்சிகம் ராசியினரே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருந்த குருபகவான், தற்போதைய பெயர்ச்சியில் எட்டாம் இடத்திற்கு வருகிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பன்னிரண்டு, இரண்டு, நான்காம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பின்படி உங்கள் மனதில் இருந்த வீண் பயங்கள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதேசமயம் அதனை தலைகனமாக மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் உயர்வுகள் நிலைக்கும்.

அலுவலகத்தில் ஏற்றத்துக்கான வாய்ப்புகள் வரும். எந்த சமயத்திலும் தலைகனம் தவிர்த்து தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயண வாய்ப்பு வரலாம். பணியிட விஷயங்களை பிறரிடம் பேசுவதைத் தவிருங்கள்.

இல்லத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளிடையே உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதம் கூடாது. தேவையற்ற ஆடம்பரக் கடன்களைத் தவிருங்கள். சுபகாரியங்கள் ஈடேற குலதெய்வ வழிபாடு முக்கியம். செய்யும் வர்த்தகத்தில் உழைப்பே உயர்வுதரும். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம்.

அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான போக்கு நிலவும். ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அடக்கமும் அமைதியும் அவசியம். அரசுத்துறையில் உள்ளவர்கள் பணியிடத்தில் வீண் பேச்சு, அரட்டையடிப்பதைத் தவிருங்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். கலைஞர்கள், சினிமா, டிராமா துறையினர் முயற்சிகளில் முடங்குவது கூடாது.. மாணவர்கள் படிப்பில் தளரா உழைப்பே தலை நிமிரச் செய்யும்.

ஆரோக்யம் சீராக இருக்க சிறுசிறு உடற்பயிற்சிகளாவது அவசியம். தலைவலி, கண்கள், அடிவயிறு, முதுகு உபாதைகள் வரலாம். இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்குவதைத் தவிருங்கள். முருகப்பெருமானை கும்பிடுங்கள். முன்னேற்றம் வரும். ஒரு முறை பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை ஆராதித்து வருவதும், இஷ்ட அம்மன் துதிகளைக் கேட்பதும் வாழ்வை துளிர்க்கச் செய்யும்.

தனுசு ராசியினரே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போதைய பெயர்ச்சியில் ஏழாம் இடத்திற்கு வருகிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் றாசிக்கு முறையே பதினோறாம் இடம், உங்கள் ஜன்மராசி, மற்றும் மூன்றாம் இடங்களில் பதிகின்றன. இதில் குருபார்வை உங்கள் ராசியில் பதிவது விசேஷம். இந்த அமைப்பு உங்களுக்கு உன்னதங்கள் அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். அதேசமயம் செயல்களில் நிதானமும் வாக்கில் இனிமையும் முக்கியம்.

பணியிடத்தில் எதிர்பார்த்த மேன்மைகள் வரும். சிலருக்கு அயல்ப்நாட்டு வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம், அது நன்மைக்கே..பொறுப்புகளில் நேரம் தவறாமை முக்கியம்.

அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். அதேசமயம் புதிய பொறுப்புகளும் அதிகரிக்கும். திட்டமிட்டு நேரம் தவறாமல் செய்து முடிப்பது முக்கியம். மூன்றாம் நபர் விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். பலகாலக் கனவுகள் நிறைவேறும். அதேசமயம் தம்பதியர் உடல் நலத்தில் பரஸ்பரம் அக்கறை முக்கியம். வாரிசுகளால் பெருமை உண்டு. தேவையற்ற தர்க்கம் யாருடனும் வேண்டாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.

செய்யும் தொழிலில் சேதாரம் குறையும். புதிய ஒப்பந்தக்களில் அவசரம் வேண்டாம். பிறர் கட்டாயத்திற்காக முதலீடு செய்வது கூடாது. அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். சிலருக்கு திடீர்ப் பொறுப்புகள் திக்குமுக்காடச் செய்யும். அரசுத் துறையினருக்கு செல்வாக்கு உயரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் அதனால் ஆதாயமும் வந்து சேரும். கலைஞர்கள், படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

வாகனத்தில் பழுதிருப்பின் உடனே கவனியுங்கள். குல தெய்வ யாத்திரையில் ஆடம்பரம் வேண்டாம். கழுத்து, முதுகு, அடிவயிறு, இடுப்பு உபாதைகள் வரலாம். கோமாதாவை எப்போதும் கும்பிடுங்கள். கும்பகோணம் சார்ங்கபெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்குவதும், நரசிம்மர் துதிகளைக் கேட்பதும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

மகரம் ராசியினரே!

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த குருபகவான், தற்போதைய பெயர்ச்சியில் ஆறாம் இடத்திற்குச் செல்கிறார். அவரது விசேஷ பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு முறையே பத்து, பன்னிரண்டு, இரண்டாம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பின் காரணமாக இது உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். அதேசமயம், நாவடக்கமும், உடல்நலத்தில் அக்கறையும் முக்கியம்.

அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடவேண்டாம். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். குடும்பத்தில் குதூகலம் இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். தரல், பெறலில் நிதானம் தேவை. சகோதர உறவுகளிடம் வீண் சர்ச்சை வேண்டாம். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அயல்நாட்டு வர்த்தகத்தில் அலட்சியம் கூடாது. தரக்கட்டுப்பாட்டில் கவனம் தேவை.

அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி நிச்சயம் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்திப் பேசவேண்டாம். அரசியலில் உள்ளோர் ஏற்றம் பெறுவீர்கள். மேலிடத்தின் ஆதரவு கிட்டும். பொது இடங்களில் வார்த்தைகளில் நிதானம் மிகமிக முக்கியம். கலைஞர்கள், படைப்புத் துறையினர், கணிசமான வளர்ச்சி பெறுவீர்கள். செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை மதியுங்கள்.

மாணவர்கள் சோம்பலை விரட்டினால், சாதனை செய்யலாம். வாகனத்தில் வேகம் கூடவே கூடாது. பயணப்பாதை உணவைத் தவிருங்கள். அடிவயிறு, கழுத்து,முக உறுப்பு உபாதைகள் வரலாம். பெருமாள், தாயார் வழிபாடு பெருமைகள் சேர்க்கும். திருவெண்காடு திருத்தலம் சென்று அங்குள்ள அகோரமூர்த்தியை ஆராதித்துவிட்டு வருவதும், எப்போதும் பெருமாள் துதிகளைக் கேட்பதும் வாழ்வை சந்தோஷமயமாக்கும்.

கும்பம் ராசியினரே!

இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான், தற்போது ஐந்தாம் இடத்திற்குச் செல்கிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஒன்பது, பதினோராம் இடங்களிலும் உங்கள் ஜன்மராசியிலும் பதிகின்றன. இது உங்களுக்குப் பலவிதத்திலும் ஏற்றம் தரும் அமைப்பு. அதேசமயம் எதிலும் வீண் தர்க்கமும் வேண்டாத ரோஷமும் தவிர்த்தால், நன்மைகள் நீடிக்கும்.

பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். உயரதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். புதிய பணி வாய்ப்பு கைகூடாமல், இருப்பதை உதற வேண்டாம். பிறர் கட்டாயத்துக்காக அலுவலகப் பணி ரகசியம் எதையும் பகிர வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும். மூன்றாம் நபர் தலையீட்டை முழுமையாகத் தவிருங்கள். பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுங்கள். பழைய கடன்களை பசிஅல் செய்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடி வரும். செய்யும் தொழிலில் ஏற்ற, ஏற்படும். சலியாமல் உழைத்தால் சரியாமல் வளர்ச்சி தொடரும்.

அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்த இனம்புரியாத பயம் நீங்கும். எதிர்பாராத இடமாற்றம், உயர்வுகள் வரலாம். அரசியலில் இருப்போரின் வாக்குக்கு மதிப்பு அதிகரிக்கும். உடனிருப்போர் ஆதரவு உற்சாகம் தரும். முகமூடி நட்புகளிடம் கவனமாக இருங்கள். கலைஞர்கள்,படைப்பாளிகள் திறமை வெளிப்படும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள்.

பயணத்தில் பிறர் தரும் உணவு பானம் ஏற்க வேண்டாம். உணவை முறைப்படுத்துங்கள். அடிவயிறு, கீழ்முதுகு, பாதம், நரம்பு உபாதைகள் வரலாம். சிவன், பார்வதி வழிபாடு வாழ்வை சிறக்கச் செய்யும். ஒருமுறை திங்களூர் திருத்தலம் சென்று ஆராதித்து வருவதும், சிவன் - பார்வதி துதிகளைக் கேட்பது, சொல்வதும் சிறப்பான நன்மை தரும்.

மீனம் ராசியினரே!

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்த குரு பகவான், தற்போது நான்காம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகளான ஐந்து, ஏழு, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே எட்டு, பத்து, பன்னிரண்டாம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பு சாதகங்கள் அதிகரித்து சங்கடங்கள் குறையும் என்பதைக் காட்டுகின்றன. அதேசமயம் உங்கள் செயலிலும் வார்த்தையிலும் நிதானம் இருந்தால்மட்டுமே நல்லவை நிலைக்கும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். நேரான உழைப்பும், நேரடி கவனமும் இருந்தால், எதிர்பார்க்கும் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும். யாருடைய தனிப்பட்ட தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். அனுபவம் மிக்கவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சங்கடங்கள் தீரும். வரவு சீராகும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

செய்யும் தொழிலில் வளர்ச்சி ஏற்படும். நேரடி கவனமும் நேர்மையும் மிகமிக முக்கியம். வர்த்தகக் கடன்களில் அலட்சியம் கூடாது. அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவும். மேலதிகாரிகளிடம் பேசும்போது வீண் ரோஷம் தவிருங்கள். அரசியலில் உள்ளோர் அகலக்கால் வைக்க வேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் தரும் முன் பலமுறை யோசியுங்கள். புறம்பேசுவோரைப் புறம்தள்ளுங்கள். கலைஞர்கள் படைப்பாளிகள் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிறிய பொறுப்பானாலும் சின்சியராகச் செய்யுங்கள். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள்.

வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம், ரத்த அழுத்த மாற்ற உபாதைகள் வரலாம். மாருதி வழிபாடு மகிழ்ச்சியை நிலைக்கச் செய்யும். சூரியனார் கோயில் சென்று ஆராதிப்பதும், அனுமன் துதிகளை அனுதினமும் கேட்பதும் வாழ்வை வெளிச்சமாக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com