ஆயிரம் கண்ணுடையாள் அண்டங்களுக்கும் அரசியானவள், கணுவிற்குள் கணுவாகி கரும்புக்குள் சுவையானவள், கருணைக்கு எல்லையானவள், விண்ணும் மண்ணும் ஒளியானவள், வேதத்தின் மூலமானவள், பக்தர்களுக்கு அன்னையாவள் என அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியான இருக்கன்குடி மாரியம்மன் கோவில், வருடம் முழுவதும் விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது என்றால் இந்த அம்மனின் சக்தி உலக மக்களை ஈர்த்து தன்னுள் வசப்படுத்தி வைத்துள்ளது என்பது தான் உண்மை.
இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த அம்மன் ஆலயம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் அமைந்து அளவில்லா ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறது.
மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
அம்பாளின் தரிசனம் வேண்டும் என்பதற்காக சதுரகிரி மலையில் நீண்ட நாள் தவமிருந்த சித்தருக்கு, அர்ஜுன ஆற்றுக்கும், வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதியில் அம்பாள் காட்சி அளித்தாள். அதனைக்கண்ட சித்தர் அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்ததோடு அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார். பின்னர் இயற்கை சீற்றத்தினால் அச்சிலை ஆற்று மண்ணில் புதைந்து போன நிலையில், சில காலங்கள் கடந்து ஒரு சிறுமியின் கண்களில் தென்பட்டு அங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் எழுப்பப்பட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
சிவயோக ஞானசித்தர், தான் சித்தியாகும் இடத்தில் மாரியம்மன் கோயில் கொண்டு அருளவேண்டும் என்று பிரார்த்தனை செய்ததால், காலங்கள் கடந்தாலும் சித்தரின் விருப்பத்திற்கேற்ப அம்மன் இங்கு கோவில் கொண்டு இருப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக மற்ற அம்மன் ஆலயங்களில் சக்தி தேவி இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும் நிலையில்,இந்த இருக்கன்குடி மாரியாம்மனோ, வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு சர்வமும் நானே என்பது போல் கட்சியளிக்கிறாள்.
இந்த அம்மனின் தோற்றம் எக்கோவிலிலும் காணப்படாத காட்சியாகும் என்பதோடு இதுவே இருக்கன்குடி மாரியம்மன் ஆலயத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கருவறையில் வீற்றிருக்கும் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கும்போது மாரியம்மனின் கருணை மிகுந்த கண்கள் நம்மை பார்ப்பது போல இருப்பதாக பக்தர்கள் மெய்சிலிர்த்து கூறுகின்றனர்.
அம்மன் நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக திகழும் இக்கோவிலில் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல் வருடம் தோறும் விழாக்கோலமாகவே காட்சியளிக்கிறது.
பொதுவாக அனைத்து கோவில்களிலும் உற்சவரும், மூலவரும் ஒரே இடத்தில் இருப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், இக்கோவிலில் உற்சவரும், மூலவரும் தனித்தனி கோவிலில் வீற்றிருக்கின்றனர்.
அம்மன் சன்னதியை சுற்றிலும் பரிவார தேவதைகள் காணப்படுவதோடு சன்னதிக்கு பின்புறம் வடக்கு வாயில் செல்வி வெயிலுகந்தம்மனும், அரச மரத்தடியில் சித்தி விநாயகரும் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனா். அருகே வாழவந்தம்மனும், மேற்கே ராக்காச்சி அம்மனும், வடமேற்குப் பகுதியில் பேச்சியம்மனும், முப்பிடாரி அம்மனும் அதற்கு கிழக்கே காத்தவராயனும், வயிரவமூர்த்தியும் எழுந்தருளியிருக்கின்றனர்.
பழனி கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை செல்வது போல தை மாதம் விரதம் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து இரு நதிகளில் நீராடி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்தும், ஆயிரங்கண் பானை எடுத்தும் கோவிலை வலம் வந்து வழிபடுவதோடு, குழந்தையில்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர்.
உடல் குறைபாடு உள்ளவர்கள் உடல் உறுப்புகள் போல உருவம் செய்து வைத்து வழிபடுவதோடு, கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்ற பிரார்த்தனைகளில் ஈடுபட்டு அம்மனை தரிசித்து வருகின்றனர்.
எந்த அம்மன் தலத்திலும் ஆடு, கோழி பலியிடாதபோது இருக்கன்குடியில் ஆடி மாத விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கோயிலில் வெட்டப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனா்.
அம்மன் தோன்றிய இடத்தில் கோவிலின் தல விருட்சம் இருப்பதால் இந்த மரத்திற்கு தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், வயிற்றுவலி குணமாக அம்மனை மனதார வேண்டிக்கொண்டு நோய் குணம் ஆனதும் கோவிலுக்கு வந்து மாவிளக்கு போட்டு அம்மனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இந்தக் கோவிலில் வந்து தங்கியிருந்து அபிஷேக தீர்த்தத்தை தினமும் குடித்து குணமாகும் அதிசயம் அனுதினமும் நடந்து வருகிறது.
கண்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோவிலில் வந்து 11, 21, 31, 41 நாட்கள் என தங்கி அம்மனின் அபிஷேகத்தை கண்டு தீர்த்தத்தை அருந்தினால் விரைவில் கண்நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இப்படி எண்ணற்ற அருளும், அதிசயமும் நிறைந்த இக்கோயிலுக்கு சென்று அம்பாளை நாமும் தரிசிப்போம், அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்.
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக சாத்தூா் செய்தியாளா் அருண்பாண்டியனுடன், கலைமாமணி நந்தகுமார்..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்