திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரியக்காண்டியம்மன் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர் எனும் போர்களம் கண்ட பூமியாகும்..இங்கு நடந்த வரலாற்று சம்பவங்களும் அதில். உருவான போர்களால் சிந்தபட்ட ரத்தமும் இன்னும் மறையாமல் ரத்தக் கற்களாய் காட்சி தருகிறது
கிபி 13 ஆம் நூற்றாண்டில் இங்கு பொன்னர் சங்கர் சகோதரர்கள் ஆட்சி செய்ததாவும் மாக பாரதத்தில் வரும் தர்மரே பொன்னராகவும், அர்ச்சுனனே சங்கராகவும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
நல்லாட்சி நடத்திய பொன்னர் சங்கர் சகோதரரகளை, சூழ்ச்சியால் பிரித்த வஞ்சக நெஞ்சம் படைத்தவர்கள், சகோதரன் சங்கரை அம்பெய்தி கொன்று விட அதனையறிந்த பொன்னரும் தன்னை வெட்டி கொண்டு இதே மண்ணில் சாய்ந்தார்.
போர்கல பூமியிலே தன் உடன் பிறந்தோரை தேடி வந்த தங்கை அறுகாணி அழுது புலம்ப அருகே மலையில் பெரிய காண்டியம்மனாக வீற்றிருந்து பார்வதி தேவி அறுகாணியை கண்டதும் சாப விமோச்சனம் பெற்றதாக கூறப்ப்டுகிறது
இது கதையல்ல நிஜமென நம்பிக்கை கொண்ட மக்கள் இந்த வீர பூமியிலே பெரிய காண்டியம்மன், பொன்னர் சங்கர், தங்கை தங்காள், மகாமுனி, வீர மகாமுனிக்கும் சிலைகள் அமைத்து வருடம் தோறும் சிறப்பாய் வேடபரி எனும் விழா எடுத்து சிறப்பாய் கொண்டாடி வருகின்றனர்.
வீரப்பூர் கோவிலில் மாசி திருவிழா சிவராத்திரிக்கு அடுத்த நாள் கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் காப்பு கட்டுதல், படுகளம், வேடபரி, தேரோட்டம் என பலவேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக வருடம் தோறும் 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை ஒட்டி கொங்கு மண்டலப் பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நெல்லி வளநாட்டில் கூடி அருள் பெற்று வருகிறார்கள்.
குறிப்பாக எட்டாம் நாள் வேடபரி திருவிழாவில் எதிரிகளை அழிக்கக் கோயிலுக்குத் தென்மேற்கேயுள்ள ஆணியாப்பூர் எல்லைக்குக் குதிரை ஏறிச் செல்லும் பொன்னர், அங்கு கட்டப்பட்டுள்ள வாழைமரத்தை நோக்கி அம்பு எய்வார். . அம்பு பட்ட இடத்தில் இருந்து பால்போல் நீர் வந்தால் அந்த வருடம் நாடு, நகரம் சுபிட்சமாக இருக்கும். மாறாக கறுப்பு நிறத்தில் நீர் வந்தால் அந்த வருடம் பஞ்சமும், பட்டினியும் தலைவிரித்தாடும் என்பது ஐதீகம் இருந்து வருகிறது.
இந்த பத்துநாள் திருவிழாவின்போது பெரிய காண்டியம்மன் கோயில் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் யாரையும் விஷ ஜந்துக்கள் தீண்டுவதில்லை. அப்படியே தீண்டினாலும் விஷம் ஏறாது என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து, தேரோட்ட திருவிழாவின் போது கோவில் முன்பு உள்ள பெரிய தேரில் பெரியக்காண்டியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். தொடர்ந்து, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேரோட்டம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறுகிறது.
பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவிற்கு வரும் பெரும்பான்மையான மக்கள் அந்த பத்து நாட்களும் இப்பகுதிகளிலேயே தங்கியிருந்து திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இலட்சக்கணக்கில் கூடும் மக்கள் கூட்டத்தால் இப்பகுதியே திமிலோகப்படுகிறது.
பெரிய காண்டியம்மன் கோயில் வாசலில் பக்தர்கள் மனமுருகி வேண்டி, நேர்ந்து கொள்ளும் பிரார்த்தனை களுக்கு தெய்வங்கள் செவி சாய்க்கின்றன. ஆகவே
இங்குள்ள பெரிய காண்டியம்மனுக்குக் காவலாக வந்த முனிகள்தான், தங்களையும் 'காத்துக் கருப்பு' டாமல் காப்பாற்றுவதாக பொன்னிவளநாட்டு மக்கள் இப்போதும் நம்பி வருகின்றனர்
நான் இருக்கிறேன், கவலை ஏன், பயம் ஏன் உங்களுக்கு” என காவல் தெய்வமாய், பிரமாண்டமான உயரத்தில் மிரட்டும் விழிகளுடன் இருக்கும் மந்திரம் காத்த மகாமுனி சிலை அருகே இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் சாமியின் பாதத்தில் சமர்பிக்கின்றனர். சத்தியமே வெல்லும் என வாளேந்தி நிற்கும் மாமுனி சாமி வேண்டுதல்களை நிறைவேற்றியவுடன் ஆடுகளை பலியிட்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்
வழக்குகள், பில்லி சூன்யம், கடுமையான நோய் பாதிப்புள்ளவர்கள் இந்த வீரப்பூர் வந்து வழிபட்டால் சகலமும் தீர்ந்து நலமோடு பக்தர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது
பலலட்சம் பேருக்கு குலதெய்வாமாய் விளங்கும் இக்கோவிலின் தெய்வங்களை தரிசிப்போம் நலம் பெருவோம்
மாலை முரசு செய்திகளுக்காக ராமச்சந்திரனுடன் கலைமாமணி நந்தகுமார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்