“நாக தோஷமும் போராட்டமான திருமண வாழ்க்கையும்” - தீர்வு என்ன?

அந்த காலங்களில் 18 பூர்த்தி அடைந்தாலே திருமணத்தை நடத்தி விடுவார்கள் பெற்றோர்...
naga thosam.
naga thosam.
Published on
Updated on
2 min read

அன்பார்ந்த வாசகர்களே நாக தோஷம் என்பது ராகு கேதுக்களால் ஏற்படுகின்ற சர்ப தோஷத்தை குறிக்கும் ராகு கேதுகளுக்கு நிரந்தரமான வீடு கிடையாது. 12 ராசி கட்டத்தில் சாயா கிரகங்கள் என்று குறிப்பிடப்படும் ராகு கேதுக்களை தவிர ஆறு கிரகங்கள் ஒரு நட்சத்திரம் என்று நம்முடைய வாழ்க்கையின் கர்மாக்களை தீர்மானிக்கின்றனர்…

இப்படியான சூழ்நிலையில் மனிதன் பிறந்து தனக்கான துணையைத் தேடிக் கொண்டு பிள்ளைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து பின்பு மரணத்தை நோக்கி பயணிக்கிறான். 25 -வரை தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் காலம் என்று இளைஞர்கள் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். அந்த காலங்களில் 18 பூர்த்தி அடைந்தாலே திருமணத்தை நடத்தி விடுவார்கள் பெற்றோர்... விவாகரத்துகள் தற்பொழுது அதிகமாக இருக்கின்றன என்றும் அந்த காலத்தில் சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்தாலும் கூட விவாகரத்து ஆகாமல் இறுதிவரை சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்ற கூற்றும் உண்டு…

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அந்த காலத்தில் வீட்டில் ஒரு பிரச்சனை வந்தால் பணரீதியாகவோ, பொருளாதார வளர்ச்சியின் ரீதியாகவோ அல்லது மன ரீதியான சங்கடங்கள் இருந்தால் கூட ஒற்றுமையாக, ஒரே குடும்பமாக பஞ்சாயத்துகளை முன்னெடுத்து, சமாதானப்படுத்தி, அவரவர் வாழ்ந்து வந்திருக்கின்றனர்… அப்படியும் மீறி சமுதாய சூழல் இருவர் பிரிந்து வாழ்ந்தால், வேறு விதமாக பேசும் என்பதால் சகித்துக் கொண்டு வாழ்ந்தோம் என்று பெரியோர் கூறியதையும் நாம் கேட்டிருக்கிறோம்… சரி விஷயத்திற்கு வருவோம் நாகதோஷம் என்று பெரும்பாலும் ஜோதிடர்களால் குறிப்பிடப்படுகின்ற ராகு கேது தோஷங்கள் 1-ம் இடத்திலோ அல்லது 7-ம் இடத்திலோ அமர்ந்திருந்தால் கடுமையான தோஷங்கள் ஏற்படுத்தும் என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன… அதேபோல இரண்டாம் இடத்திலோ அல்லது எட்டாம் இடத்தில் கூட ராகு கேதுக்கள் அமர்ந்திருந்தால் குடும்ப தோஷத்தையும் மாங்கல்ய தோஷத்தையும் ஏற்படுத்தும் என்றும் குறிப்பிடுகின்றன…

உலகில் பலவிதமான மக்கள் வாழ்கிறார்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நிச்சயமாக ராகு கேதுக்கள் இப்படியாக அமர்ந்திருக்கும்… அப்படி என்றால் அனைத்து மக்களும் நீதிமன்றம், விவாகரத்து என்று செல்வார்களா? என்றால் நாக தோஷம் அப்படி வேலை செய்வதில்லை..

தோஷம் இருப்பவர்கள் கூட நன்றாக வாழ்க்கை நடத்தி அறுபதாம் திருமணத்தை பார்த்து சந்தோஷமாக வாழ்க்கையை முடித்த ஜாதகங்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கில் நான் பார்த்திருக்கிறேன்… சர்ப்பங்களுக்கு வீடு கொடுத்த அதிபதி வலிமையாக இருந்து விட்டால் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை…

ராகு கேதுகளுக்கு தனிப்பட்ட சக்தி கிடையாது… தான் அமர்ந்த வீட்டின் வலிமையை மட்டுமே அவர்கள் எடுத்துக் கொடுப்பார்கள்… அமர்ந்த வீட்டு அதிபதி ஏதாவது ஒரு இடத்தில் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால்… நிச்சயமாக ஜாதகருக்கு விவாகரத்து ஆகவோ குடும்பத்தை பிரிக்கவோ செய்ய மாட்டார்… மாறாக வேலைக்காக பிரிவது… திருமணமான உடன் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆவது… வாழ்க்கையை முழுவதுமாக அந்நிய தேசத்தில் கழிப்பது போன்ற நல்ல பலன்களை கொடுப்பார்கள்… அந்த காலத்தில் பெண் திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்று விட்டால்… அவர் ஊர் விட்டு ஊர் போவது தான் முறையாக இருக்கும் இப்படியான சூழ்நிலைகளில் கூட ராகு கேதுக்கள் திருமணம் செய்த அந்த நாகதோஷம் உள்ள பெண்ணை வேறு இடத்திற்கு குடி அமர்த்திவிட்டால் அந்த தோஷங்கள் வேலை செய்வதில்லை புதிய ஆட்கள் புதிய பேச்சுக்கள் வேறு இடம் என்று மாறும்பொழுது தோஷங்கள் மட்டுப்படுகின்றன…

உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நாக தோஷம் என்பது சகித்துக் கொண்டு வாழும் ஒரு அமைப்பா என்றால் நல்ல கிரகங்களின் பார்வை ராகு கேதுவுக்கு கிடைக்காத பட்சத்தில் ஒரே வீட்டிலேயே இருப்பார்கள் சகித்துக் கொண்டு வாழ்வார்கள்… குறிப்பாக ஒன்றாம் இடத்தில் ராகு அமர்ந்து… ஏழாம் இடத்தில் கேது இருப்பவர்கள் என்ன சொன்னாலும்… வாழ்க்கைத் துணை என்ன செய்தாலும்… அதை பொறுத்துக் கொண்டுதான் போக வேண்டும்…நம்முடைய எண்ணத்திற்கும் செயலுக்கும் நேர் எதிர்மறையாக நம் வாழ்க்கை துணை ஏதாவது ஒரு விதத்தில் நம்மை சங்கடப்படுத்தலாம் அப்படியான நிலையில் ஒரு சிறு தூர பயணத்தையோ அல்லது வெளியூர் சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி வருவதையோ மேற்கொள்ள வேண்டும் இப்படி செய்தாலும் கூட நாக தோஷங்கள் திருமணத்தை பெரிதாக பாதிப்பது இல்லை..

பரிகாரம் என்ன..?

நாக தோஷ பரிகாரம் மிக மிக எளிமையானது சர்பங்கள் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சென்று மரத்திற்கு அடியில் இருக்கும் சர்ப்பங்களை வலது புறம் இருந்து இடது புறமாக ஒன்பது முறை ராகு காலத்தில் சுற்றி வாருங்கள் அந்த ராகுவே அந்த கேதுவே உங்களுக்கு நன்மையை அள்ளி வாரி வழங்குவார்… முன்னோர்கள் செய்த கர்ம வினையால் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்திருக்கலாம் ஆனால் நம் வாழ்க்கை மாற்றக்கூடிய சக்தி நம் கையில் இருக்கிறது நல்ல மனதோடு இப்படி செய்து வாருங்கள் பிரச்சனைகள் விலகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com