

இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றனர். கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவை இந்திய பந்துவீச்சாளர்கள் மறக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினர்.
முதல் 10 ஓவர்களிலேயே வெஸ்ட் இண்டீஸ் 96 ரன்கள் குவித்தது. கேசி கார்டி 9 ரன்களில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க வீரரான ஜான் கேம்ப்பெல் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 68 பந்துகளில் 101 ரன்கள் விளாசிய கேம்ப்பெல், 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களை பறக்கவிட்டார். அவரது ஸ்டிரைக் ரேட் 148.53.
கேம்ப்பெல் வெளியேறிய பிறகும் இந்திய அணி பவுலர்களுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் தொடங்கி பின்னர் வேகத்தை அதிகரித்தார். அவர் 94 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். 40-வது ஓவரின் கடைசி பந்தில்தான் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஹோப் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் இந்திய பந்துவீச்சை இன்னும் கடுமையாக விளாசிய அமீர் ஐங்கூ, 77 பந்துகளில் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசியிருந்தார். ஒரு கட்டத்தில் 54 பந்துகளில் 59 ரன்களுடன் இருந்த ஐங்கூ, அடுத்த 12 பந்துகளில் மட்டும் 36 ரன்கள் குவித்தார். ஹோப் - ஐங்கூ ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 182 ரன்கள் சேர்த்தது. தற்போது 43.4 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
இந்திய பந்துவீச்சில் ப்ரார் 9 ஓவர்களில் 89 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்