
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவின் தேர்வு குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எழுப்பிய விமர்சனத்துக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பின்னர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கம்பீர் கலந்துகொண்டார். அப்போது, ஹர்ஷித் ராணாவைத் தொடர்ந்து அணியில் தேர்வு செய்வது குறித்துச் சமீபத்தில் தன் யூடியூப் சேனலில் விமர்சித்த முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்துக்கு கம்பீர் பதிலளித்தார்.
ஆமாஞ்சாமி போடுபவர்:
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ் விளையாடிய ஹர்ஷித் ராணா, கம்பீருக்கு "ஆமாஞ்சாமி போடும் நபராக" (Yes Man) இருப்பதால் மட்டுமே அவர் தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடிப்பதாக ஸ்ரீகாந்த் விமர்சித்திருந்தார். ஹர்ஷித் ராணாவை அணியில் ஒரு "நிரந்தர உறுப்பினர்" என்றும் அவர் கேலியாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீகாந்தின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அவரது யூடியூப் சேனலைக் குறிவைத்து கம்பீர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கம்பீர், "உண்மையாகச் சொல்கிறேன், இது சற்று வெட்கக்கேடானது. உங்கள் யூடியூப் சேனலை நடத்துவதற்காக, நீங்கள் ஒரு 23 வயது இளைஞனை விமர்சிப்பது நியாயமற்றது. இது வெட்கக்கேடானது. அவனுடைய தந்தை ஒரு முன்னாள் தேர்வுக்குழுத் தலைவரோ, முன்னாள் கிரிக்கெட் வீரரோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியரோ கிடையாது. அவன் விளையாடிய அனைத்தும் அவனது சொந்தத் திறமையால் மட்டுமே. இனியும் அப்படித்தான் விளையாடுவான். தனிநபரின் செயல்பாடுகளை நீங்கள் விமர்சிக்கலாம், அதற்காகத்தான் தேர்வாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் சமூக ஊடகங்களில் ஒரு 23 வயது இளைஞனைப் பற்றி நீங்கள் மோசமான கருத்துகளைப் பரப்பினால், அது அவனது மனநிலையை எப்படிப் பாதிக்கும்?.
உங்கள் மகன் நாளை கிரிக்கெட் விளையாடுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது அவன் இப்படித் திட்டுவதைச் சந்தித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவன் ஒரு 23 வயதுப் பையன், 33 வயது நிரம்பியவன் அல்ல. வேண்டுமானால் என்னை விமர்சியுங்கள், என்னால் அதைச் சமாளிக்க முடியும். இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்க வேண்டும். உங்கள் யூடியூப் சேனலை நடத்துவதற்காக நீங்கள் இதுபோன்ற காரியங்களைச் செய்யக் கூடாது. இது ஹர்ஷித் ராணாவுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் வரவிருக்கும் அனைத்து இளம் வீரர்களுக்கும் பொருந்தும்" என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
ஹர்ஷித் ராணாவை மட்டுமின்றி, ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியின் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டதையும் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியிருந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு உண்மையான மாற்று வீரர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே, ரெட்டி அல்ல என்றும், அவர் சாம்பியன்ஸ் டிராபி திட்டங்களில் கூட இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.