2026 உலகக்கோப்பை கால்பந்து: மைதானம் சுடுமா? சுட்டெரிக்கும் வெப்பத்தால் வீரர்கள் உயிருக்கு ஆபத்தா?

ஃபிஃபா அமைப்பு 32°C-க்கு மேல் இருந்தால் மட்டுமே போட்டியை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...
football ground
football ground
Published on
Updated on
2 min read

வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர், வட அமெரிக்காவின் கோடைகால வெப்பத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், உலக வானிலை ஆய்வு குழுமம் (WWA) வெளியிட்டுள்ள புதிய அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக, 1994-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளின் போது வெப்ப அழுத்தம் (heat stress) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஈரப்பதத்துடன் கூடிய அதிக வெப்பம், மைதானத்தில் விளையாடும் வீரர்கள் மட்டுமின்றி, போட்டியை நேரில் காண வரும் ரசிகர்கள் மற்றும் மைதானப் பணியாளர்களுக்கும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் உள்ள 16 மைதானங்களில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரையிலான காலகட்டத்தில் நிலவும் 'வெட் பல்ப் குளோப் டெம்பரேச்சர்' (WBGT) எனப்படும் வெப்பக் குறியீட்டை ஆய்வு செய்தனர். இது காற்றின் ஈரப்பதம், சூரிய ஒளி மற்றும் காற்றின் வேகத்தை உள்ளடக்கிய வெப்பத்தின் பாதிப்பை அளவிடும் முறையாகும். 1994-ஆம் ஆண்டை விட தற்போது பூமி 0.7°C கூடுதல் வெப்பமடைந்துள்ளதால், உலகக்கோப்பையின் 104 போட்டிகளில் குறைந்தது 25% போட்டிகள் 26°C-க்கும் அதிகமான வெப்பக் குறியீட்டில் விளையாடப்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த அதிக ஈரப்பதமும் வெப்பமும் உடலின் வியர்வையை வெளியேற்றித் தன்னைத்தானே குளிர்வித்துக்கொள்ளும் திறனைப் பாதிக்கும். இதனால் தடகள வீரர்கள் மற்றும் வெளியில் அதிக நேரம் பணியாற்றுபவர்களுக்கு மயக்கம், வெப்பத் தாக்குதல் மற்றும் இதய நோய் அபாயங்கள் அதிகரிக்கின்றன. கால்பந்து வீரர்கள் அதிக தீவிரத்துடன் ஓடி விளையாடுவதால், அவர்களின் சகிப்புத்தன்மை (endurance) மற்றும் செயல்பாடுகள் இந்த வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும். ஃபிஃபா விதிமுறைகளின்படி, வெப்பக் குறியீடு 26°C-க்கு மேல் இருந்தால் வீரர்கள் குளிர்விக்கப்பட வேண்டும் என்றும், 28°C-க்கு மேல் இருந்தால் போட்டி பாதுகாப்பற்றது என்றும் கருதப்படுகிறது. ஆனால், ஃபிஃபா அமைப்பு 32°C-க்கு மேல் இருந்தால் மட்டுமே போட்டியை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மியாமி, நியூயார்க், பிலடெல்பியா, கான்சாஸ் சிட்டி, பாஸ்டன் மற்றும் மெக்சிகோவின் மான்டேரி ஆகிய மைதானங்கள் அதிக வெப்ப அழுத்தம் கொண்ட இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பல மைதானங்களில் குளிர்விக்கும் வசதிகள் (air-conditioning) இல்லை என்பது கூடுதல் கவலை. 2022 கத்தார் உலகக்கோப்பை வெப்பம் காரணமாகவே குளிர்காலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், வட அமெரிக்காவில் இப்போது நடத்தப்படும் போட்டிகள், வீரர்களுக்குத் தலைச்சுற்றல் மற்றும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மதிய நேரத்தில் போட்டிகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com