"ஈகோவை இழுத்துட்டு வராதீங்க.. இது விளையாட்டு!" - சிஎஸ்கே ரசிகர்களைச் சமாதானப்படுத்திய அஸ்வின்!

இஷான் கிஷனின் கொண்டாட்டம் ரசிகர்களைச் சற்று சங்கடப்படுத்தியது...
"ஈகோவை இழுத்துட்டு வராதீங்க.. இது விளையாட்டு!" - சிஎஸ்கே ரசிகர்களைச் சமாதானப்படுத்திய அஸ்வின்!
Published on
Updated on
2 min read

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் இஷான் கிஷன் செய்த கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் வழக்கமான "விசில் போடு" பாணியைப் பின்பற்றி கிஷன் செய்த சைகைகள், சிஎஸ்கே ரசிகர்களைக் கோபப்படுத்தியது. இது ரசிகர்களைக் கேலி செய்யும் நோக்கில் இருப்பதாகக் கருதி, சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகப் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனல் வாயிலாக ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரசிகர்களிடம் பேசிய அஸ்வின், இது வெறும் விளையாட்டு உணர்வுடன் கூடிய கொண்டாட்டம் மட்டுமே என்றும், இதை யாரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ஒரு வீரர் மற்ற அணியின் சொந்த மைதானத்திற்கு வந்து விளையாடி வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. சிஎஸ்கே போன்ற வலுவான அணியை அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்திவிட்டு, அந்த உணர்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட கொண்டாட்டத்தை ஏன் ஈகோவாக மாற்ற வேண்டும் என்று அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டு என்றால் உணர்ச்சிகள் கலந்திருப்பது சகஜம், இந்த நாடகம் மற்றும் கொண்டாட்டங்கள் இல்லையென்றால் விளையாட்டில் என்ன சுவாரசியம் இருக்கும் என்று அவர் விவரித்தார்.

அதே சமயம், அடுத்த முறை சிஎஸ்கே அணி ஹைதராபாத் சென்று வெற்றி பெறும் போது, இதேபோல் பதிலடி கொடுக்கலாம் என்று அஸ்வின் ஒரு ஆலோசனையை வழங்கினார். ஆனால், அந்தப் பதிலடி மிகவும் மரியாதையான முறையில் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இஷான் கிஷனின் கொண்டாட்டம் ரசிகர்களைச் சற்று சங்கடப்படுத்தியது உண்மைதான் என்றாலும், அதை ஒரு வீரரின் விளையாட்டு உணர்வாக மட்டும் பார்க்க வேண்டும் என்பதே அஸ்வினின் கருத்தாக இருந்தது. இஷான் கிஷன் சற்று நிதானமாகக் கொண்டாடியிருக்கலாம் என்று குறிப்பிட்டாலும், ஒரு முன்னாள் வீரராக அவரது வெற்றியைத் தான் ரசித்ததாக அஸ்வின் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார்.

விளையாட்டில் இத்தகைய மோதல்களும், பதிலடிகளும் நடப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், ரசிகர்கள் அதை ஒரு எல்லையுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அஸ்வினின் வேண்டுகோள். சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தப்படுவது இயல்பானதுதான் என்றாலும், அடுத்த சீசனில் ஹைதராபாத் சென்று வெற்றி பெற்று சிஎஸ்கே பதில் கொடுக்கும்போது, அது ஒரு சிறந்த ஆரோக்கியமான போட்டியாக அமையும் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்தார். இந்தச் சம்பவம் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் சவால்களையும், வீரர்களின் உணர்ச்சிகளையும் ரசிகர்களுக்குப் புரிய வைக்கும் விதமாக அமைந்துள்ளதாகப் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com