ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டியின் போது, கொல்கத்தா அணியின் 10-வது ஓவரில் பந்துவீச்சாளர் தனது ரன்-அப் பகுதிக்குத் திரும்பும் போது, ஹர்திக் பாண்டியா திடீரென ஆக்ரோஷமாக விக்கெட்டின் பெயில்களை (bails) தட்டித் தள்ளிள்ளார். இது ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களைச் சிதைக்கும் அல்லது தவறாகப் பயன்படுத்தும் செயலாகக் கருதப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்குப் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராதமும், ஒரு 'டிமெரிட்' புள்ளியும் (Demerit Point) வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது. போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா, பேட்டிங் குழுவாக தாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். பவர் பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தது தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும், திலக் வர்மாவும் தானும் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆடி இருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளங்களில் விளையாடுவதை விரும்புவதாகத் தெரிவித்த அவர், தற்போதைய ஐபிஎல் தொடர் பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மைதானத்தில் நடந்த குளறுபடிகள் மற்றும் மோசமான பீல்டிங் குறித்து வருத்தம் தெரிவித்தார். இந்தத் தொடர் முழுவதும் தங்களின் பீல்டிங் மிக மோசமாக இருப்பதாகவும், பல முக்கியமான கேட்சுகளைக் கோட்டை விட்டதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் ஒப்புக்கொண்டார். போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால், கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இப்போட்டி 'ஈசா' (ESA) நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்டதால், 25,000 குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதே தங்கள் நோக்கம் என்றும், தோல்வி அடைந்தாலும் அந்த குழந்தைகளுக்கு ஒரு வாழ்நாள் நினைவை ஏற்படுத்தித் தந்ததில் திருப்தி அடைவதாகவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.