சிஎஸ்கே-வில் நடக்கும் இம்பாக்ட் பிளேயர் குழப்பம்! போட்டுடைத்த ஃகோச் பிளெமிங்

பந்துவீச்சு துறையில் சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு...
Stephen Fleming
Stephen Fleming
Published on
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட 'இம்பாக்ட் பிளேயர்' விதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கையாளும் விதம் குறித்து சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்குப் பதிலளித்த சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், நாங்கள் இந்த விதியைப் பயன்படுத்தி புதிய எல்லைகளைத் தொட முயற்சிப்பதாகக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் அம்பாதி ராயுடு அல்லது சிவம் துபே போன்றவர்களை பேட்டிங்கிற்கும், துஷார் தேஷ்பாண்டே போன்றவர்களை பந்துவீச்சிற்கும் இம்பாக்ட் பிளேயராகப் பயன்படுத்தும் ஒரு தெளிவான திட்டம் சிஎஸ்கேவிடம் இருந்தது. ஆனால், இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்கு எதிராக சிஎஸ்கே எடுத்து வரும் முடிவுகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சீசனில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தபோது, சர்பராஸ் கானை பவர் பிளேயிலேயே இம்பாக்ட் பிளேயராக களம் இறக்கியது பலரது விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்துப் பேசிய பிளெமிங், கடந்த போட்டியில் எடுத்த முடிவுகளுக்காக நாங்கள் விமர்சிக்கப்பட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும். சில நேரங்களில் எதிர்மறையாகத் தெரிந்தாலும், எதிர்பாராத சூழல்களைச் சமாளிக்கவே அப்படித் திட்டமிட்டோம். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் போனதால் 8 அல்லது 9-வது ஓவர் வரை காத்திருக்காமல் பேட்டரை முன்னதாகவே களம் இறக்கினோம். பந்துவீச்சு துறையில் சில தவறுகள் நடந்திருக்கலாம், ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

சனிக்கிழமை மும்பை அணிக்கு எதிரான போட்டியில், சிறப்பாக விளையாடி வந்த அகீல் ஹொசைன் நீக்கப்பட்டது ரசிகர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஆடுகளம் காய்ந்து போய் இருந்ததால் சுழற்பந்து வீச்சுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகீல் ஹொசைனுக்குப் பதில் பிரசாந்த் வீர் களம் இறக்கப்பட்டார். இது குறித்துப் பேசிய பிளெமிங், அகீல் ஹொசைனை நீக்கியது பற்றி நிச்சயம் செய்திகள் வெளியாகும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் ஆடுகளத்தில் ஆரம்பத்தில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்று கணித்தோம். சுழற்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது என்பதால் தான் இந்த மாற்றத்தைச் செய்தோம். சில முடிவுகள் சரியாக அமையும், சில முடிவுகள் குழப்பமாகத் தோன்றும், ஆனால் நாங்கள் டீமின் வெற்றிக்காகத் தொடர்ந்து ரிஸ்க் எடுத்து வருகிறோம் என்றார்.

மும்பை அணிக்கு எதிரான அபார வெற்றியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஆட்டம் முக்கியப் பங்கு வகித்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜை பிளெமிங் வெகுவாகப் புகழ்ந்தார். சீசன் ஆரம்பத்தில் ருதுராஜின் பேட்டிங் கொஞ்சம் மெதுவாகத் தொடங்கியதால், அவரது கேப்டன்சி குறித்தும் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் இப்போது அவர் தனது சிறப்பான பேட்டிங் மூலம் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு கேப்டன் நன்றாக பேட்டிங் செய்வது அவரது கேப்டன்சி முடிவுகளுக்கும் ஒரு பெரிய நம்பிக்கையைத் தரும். ருதுராஜ் இப்போது அந்த ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று பிளெமிங் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ருதுராஜ் கெய்க்வாட் மீது கடந்த சில நாட்களாக இருந்த அழுத்தம் இப்போது குறைந்துள்ளதாகத் தெரிகிறது. பேட்டிங்கில் அவர் காட்டிய வேகம், அவரது கேப்டன்சி முடிவுகளில் இருந்த குழப்பத்தைத் தீர்த்துவிட்டதாக பிளெமிங் கருதுகிறார். அகீல் ஹொசைன் போன்ற வீரர்களை நீக்கியது போன்ற தைரியமான முடிவுகள், அணிக்கு வெற்றி தேடித்தரும் வரை பிரச்சனை இல்லை என்றும், தவறுகள் நடந்தால் திருத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வெற்றி சிஎஸ்கே ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com