ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒரு சர்ச்சை.. அங்கிரிஷ் ரகுவன்ஷி அவுட் கொடுக்கப்பட்டது சரியா? வீரேந்தர் சேவாக் மற்றும் ரோஹன் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு

தப்பியோட முயன்றபோது தற்செயலாக நடந்த ஒரு விஷயத்தை நடுவர் தவறாகப் புரிந்து கொண்டு
Angrish Raghuvanshi
Published on
Updated on
1 min read

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் 2026 போட்டியில், கொல்கத்தா வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 'ஃபீல்டிங்கை தடுத்ததாக' (Obstructing the field) கூறி அவுட் கொடுக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த முறையில் அவுட் ஆகும் நான்காவது வீரர் அங்கிரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது நடுவர் ரோகன் பண்டிட் வழங்கிய இந்த தீர்ப்பு சரியானது தானா என்பதில் கிரிக்கெட் வல்லுநர்கள் இடையே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பாக, முன்னாள் இந்திய வீரர்களான வீரேந்தர் சேவாக் மற்றும் ரோஹன் கவாஸ்கர் ஆகியோர் இந்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய ரோஹன் கவாஸ்கர், அங்கிரிஷ் ரகுவன்ஷி திரும்பிய விதம் மற்றும் அவர் குதித்த முறையை வைத்துப் பார்க்கும்போது அது 'அவுட்' இல்லை என்றே தோன்றுவதாகத் தெரிவித்தார். பந்து எங்கே வருகிறது என்பதை அங்கிரிஷ் பார்க்கவில்லை என்றும், பந்தை தடுக்கும் நோக்கம் அவருக்கு இருந்திருந்தால் அவர் ஒரே இடத்தில் நின்றிருப்பார் என்றும் கூறினார். தப்பியோட முயன்றபோது தற்செயலாக நடந்த ஒரு விஷயத்தை நடுவர் தவறாகப் புரிந்து கொண்டு அவுட் கொடுத்துவிட்டதாக ரோஹன் கவாஸ்கர் தனது கருத்தை முன்வைத்தார்.

முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் கூறுகையில், ஓடும்போது ஃபீல்டர் எங்கே இருக்கிறார் என்று பார்ப்பது ஒரு பேட்ஸ்மேனின் இயல்பான குணம் என்று தெரிவித்தார். பந்து எந்த பக்கம் வருகிறது, எங்கு டைவ் அடித்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று பார்ப்பது தப்பு கிடையாது என்று கூறிய அவர், அங்கிரிஷ் ரகுவன்ஷி வேண்டுமென்றே பந்தை தடுக்கவில்லை என்று வாதிட்டார். நடுவர் எடுத்த முடிவு சற்று கடுமையானது என்றும், ஒரு வீரரின் இயல்பான நகர்வை பந்தை தடுக்கும் முயற்சியாகக் கருதியது தவறு என்றும் சேவாக் சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட் விதிகளின்படி, ஒரு பேட்ஸ்மேன் ஓடும் திசையை எந்த காரணமும் இல்லாமல் திடீரென மாற்றி, அதன் மூலம் ரன் அவுட் செய்யும் முயற்சியைத் தடுத்தால் நடுவர் 'அவுட்' கொடுக்கலாம். ரன் அவுட் ஆகியிருக்குமா இல்லையா என்பது முக்கியமல்ல, பேட்ஸ்மேன் பாதையை மாற்றினாரா என்பதே விதியாகும். ஆனால், ஒரு வீரர் 180 டிகிரி கோணத்தில் திரும்பும்போது அவரது உடல்வாகு இயற்கையாகவே சில மாற்றங்களைச் சந்திக்கும் என்றும், அதை நடுவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சஞ்சய் பங்கார் மற்றும் கார்லோஸ் பிராத்வெய்ட் போன்ற வீரர்களும் அங்கிரிஷிற்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com