"இனிமே என்னால முடியாது.. போதும்.. முடிச்சிக்கலாம்" - 22 வயதில் திருமணம் செய்த சிஎஸ்கே வீரரின் அதிர்ச்சி முடிவு

நிதி மற்றும் உணர்வு ரீதியான விலையைக் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்...
"இனிமே என்னால முடியாது.. போதும்.. முடிச்சிக்கலாம்" - 22 வயதில் திருமணம் செய்த சிஎஸ்கே வீரரின் அதிர்ச்சி முடிவு
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய இளம் லெக்-ஸ்பின்னரும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முக்கிய வீரருமான ராகுல் சாஹர், தனது மனைவியிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி கோவாவில் நடைபெற்ற கோலாகலமான திருமண விழாவில், தனது நீண்டகாலத் தோழியும் ஆடை வடிவமைப்பாளருமான இஷானி ஜோஹரை ராகுல் சாஹர் கரம் பிடித்தார். அப்போது அவருக்கு வெறும் 22 வயது மட்டுமே ஆகியிருந்தது. இந்நிலையில், தங்களின் நான்காவது திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தத் திருமண உறவு சட்டப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள 26 வயதான ராகுல் சாஹர், கடந்த 15 மாதங்கள் தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலகட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். "நான் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எனது தகுதியைப் பற்றியோ முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்னரே, மிகச் சிறிய வயதிலேயே திருமண வாழ்க்கையில் நுழைந்துவிட்டேன். கடந்த 15 மாதங்களாக நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறி இறங்கியது எனக்குப் பொறுமையையும், மன உறுதியையும் கற்றுக்கொடுத்துள்ளது. இன்று எனது வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக ஒரு முடிவுக்கு வருகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவாகரத்து சட்டப்பூர்வமாக முடிவுக்கு வருவதற்கு அவர் பெரும் நிதி மற்றும் உணர்வு ரீதியான விலையைக் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முடிவை தான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ எடுக்கவில்லை என்றும், மாறாக ஒரு தெளிவான மனநிலையுடனே கையாளுவதாகவும் ராகுல் சாஹர் கூறியுள்ளார். "சில உறவுகள் எப்போதும் நீடிப்பதில்லை; அவை நமக்கு வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கவும், நம்மை உருமாற்றவும் மட்டுமே வருகின்றன. இப்போது நான் அதிக விழிப்புணர்வோடும், சுய மரியாதையோடும் எனது எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இவர்களின் திருமண முறிவு குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ராகுல் சாஹரே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ராகுல் சாஹர் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றதில் இவருக்கு முக்கியப் பங்கு இருந்தது. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை 5.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com