கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில், லண்டனில் உள்ள கிரோஸ்வெனர் ஹோட்டலின் உணவு ரசீது ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வந்தது. 1983-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸைத் தோற்கடித்து இந்தியா முதன்முதலாக உலகக்கோப்பையை வென்றபோது, இந்திய அணி வீரர்கள் அங்குதான் கொண்டாட்ட விருந்து சாப்பிட்டதாகப் பலரும் நம்பினர். இந்த ரசீதில் உணவு, மதுபானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் என மொத்தம் 764.40 பவுண்டுகள் (தற்போதைய மதிப்பில் சுமார் 3.4 லட்சம் ரூபாய்) செலவு செய்யப்பட்டதாகக் காட்டப்பட்டிருந்தது. மேலும், அந்த ரசீதின் கீழே இந்திய அணியின் கேப்டன் கபில்தேவின் கையெழுத்தும் இருந்தது. இந்த விஷயம் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வைரல் புகைப்படம் குறித்து முன்னாள் இந்திய வீரரும், உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றிருந்தவருமான கீர்த்தி ஆசாத் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். "இது முற்றிலும் போலியானது, சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் பரப்பப்படுகிறது" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்திய அணி வீரர்கள் அந்த ஹோட்டலுக்கே செல்லவில்லை என்றும், அவர்கள் லார்ட்ஸ் மைதானத்திற்கு அருகில் இருந்த வெஸ்ட்மோர்லேண்ட் ஹோட்டலில்தான் தங்கினார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஜூன் 25 அன்று வெற்றி பெற்ற பிறகு, அடுத்த நாள் காலை வரை கொண்டாட்டங்கள் அங்கேயே நடந்ததாகவும், அந்த வைரல் ரசீதுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
கபில்தேவின் கையெழுத்து போலியானது என்று கீர்த்தி ஆசாத் கூறியதை, அந்த அணியின் சக வீரரும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான லட்சுமண் சிவராமகிருஷ்ணனும் உறுதிப்படுத்தியுள்ளார். "கபில்தேவ் இந்த முறையில் கையெழுத்திட மாட்டார்" என்று அவர் தனது பதில் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வைத்து இத்தகைய போலிச் செய்திகளைப் பரப்புவது வருத்தமளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.