

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றது முதல், களத்தில் வெற்றிகள் கிடைத்தாலும் அவர் ஒரு விவாதத்திற்குரிய நபராகவே இருந்து வருகிறார். இந்நிலையில், கௌதம் கம்பீரின் ஆக்ரோஷமான குணம் மற்றும் அவரது செயல்பாடுகள் குறித்து முன்னாள் இந்திய வீரர் அதுல் வாசன் மிக அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கம்பீரின் ஈகோ என்பது அடுத்த கட்டத்தில் இருப்பதாகவும், இந்திய அணியின் சில வீரர்களுக்கு அவரது அணுகுமுறையும், நிர்வாக முறையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றும் அவர் ஒரு பேட்டியில் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அந்த வீரர்களின் பெயர்களைச் சொல்ல மறுத்த அதுல் வாசன், விராட் கோலி மற்றும் கம்பீர் இடையிலான பழைய மோதல்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியுள்ளார்.
கௌதம் கம்பீர் மீது குற்றம் சாட்டிய அதுல் வாசன், சிறுவயதில் இருந்தே அவருக்கு இத்தகைய குணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கம்பீரைத் தனக்குச் சிறுவயதில் இருந்தே தெரியும் என்றும், அவரோடு தனக்கு ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்திருப்பதாகவும் அவர் கூறினார். "கம்பீரின் பாணி என்பது 'ஒன்று என் வழியில் நடக்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும்' என்பதுதான். டெல்லி கிரிக்கெட் அணியில் இருந்தபோதே அவர் மற்றவர்களைத் தனது பிடிவாதத்தால் அடக்க நினைப்பார்" என்று அதுல் வாசன் அந்தப் பேட்டியில் மிக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
கம்பீரின் சுபாவம் குறித்து மேலும் பேசிய அவர், "அவர் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர், மிகச் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் புத்திசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரது ஈகோ மிகவும் அதிகம். காலையில் எழுந்து இது இரவு என்று அவர் சொன்னால், மற்றவர்கள் அதை இரவு என்றுதான் நம்ப வேண்டும் என அவர் எதிர்பார்ப்பார். அவர் சொல்வதற்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லை என்றால், நீங்கள் அவரது 'ஹிட் லிஸ்டில்' இடம்பெற்று விடுவீர்கள். உங்களுக்குத் தீங்கு செய்ய அவர் தயங்க மாட்டார். கிரிக்கெட்டில் அவர் இவ்வளவு சாதித்ததற்கு அவரது இந்த விடாப்பிடியான குணம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
கம்பீரின் ஆக்ரோஷமான குணத்தைச் சுட்டிக்காட்டிய அதுல் வாசன், அவர் ஒருவருடன் சண்டையிட்டால் தான் அவரது முழுத் திறமையும் வெளிப்படும் என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளார். "அவர் சண்டையிடாமல் எதையும் செய்ய மாட்டார். ஒருவேளை சண்டையிட யாரும் இல்லை என்றால், அவர் தனது வீட்டின் ஜன்னலோடு கூட சண்டையிடுவார். ஆனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அந்தப் பிடிவாதமான குணத்தை எப்போது விட வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை. அதன் காரணமாகவே டெல்லிக்கே உரிய அந்த அதீத ஆக்ரோஷத்துடன் விராட் கோலியை அவர் எதிர்கொள்கிறார்" என்று அவர் சாடியுள்ளார்.
இந்த விவகாரத்தின் உச்சகட்டமாக, இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் தற்போது நிலவும் சூழல் குறித்துப் பேசிய அவர், அங்குள்ள அனைத்து வீரர்களும் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். கௌதம் கம்பீர் போன்ற ஒரு வலுவான ஆளுமை கொண்டவர், தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வீரர்களை ஒரு குச்சியால் மிரட்டி வழிநடத்துவது போல நடத்துகிறார். இது போன்ற சூழலில் சில வீரர்கள் முள் படுக்கையில் உறங்குவது போன்ற மனநிலையில் தான் இருப்பார்கள். அணி தொடர்ந்து வெற்றி பெறும் வரை இந்தப் பிரச்சனைகள் வெளியே தெரியாது, ஆனால் ஒரு தோல்வி ஏற்பட்டால் இந்தக் விமர்சனங்கள் அனைத்தும் பெரிய அளவில் வெடிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
கம்பீரின் நிர்வாக முறையால் அதிருப்தியில் இருக்கும் வீரர்களின் பெயர்களை அதுல் வாசன் வெளியிடவில்லை. "எனக்குத் தெரிந்த ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இப்போதைக்கு அவர்களின் பெயர்களைச் சொல்ல முடியாது. ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். சில வீரர்களை ஓரம் கட்டிவிட்டு வெற்றி பெற்றுவிட்டால், அது பயிற்சியாளரின் திறமையாகப் பார்க்கப்படும். கிரிக்கெட் என்பது ஒரு டீம் ஸ்போர்ட் என்பதால், அங்கு யாரும் வீரர்களின் பேச்சைக் கேட்க மாட்டார்கள். வெற்றி கிடைத்தால் பயிற்சியாளர் சொல்வதே சரி என்று ஆகிவிடும்" என்று அவர் தனது பேட்டியை முடித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.