இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே கௌதம் கம்பீர் எப்படி மிக வெற்றிகரமான பயிற்சியாளரானார்?

ஷிவம் அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள் இல்லையென்றால் சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள்..
இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே கௌதம் கம்பீர் எப்படி மிக வெற்றிகரமான பயிற்சியாளரானார்?
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றபோது, எதிர்பார்ப்புகள் வானைத் தொட்டன. சொல்லப்போனால், சமீபத்திய காலங்களில் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் (டெஸ்ட்) சொந்த மண்ணில் இந்தியாவின் 12 ஆண்டுகால வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு. ஆனால், இன்று சூர்யகுமார் யாதவுடன் இணைந்து 2026 டி20 உலகக்கோப்பையை உயர்த்திப் பிடித்திருக்கும் கம்பீர், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்தப் பயிற்சியாளரும் எட்டாத ஒரு சிகரத்தைத் தொட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தலைமைப் பயிற்சியாளரும் செய்யாத சாதனையை கம்பீர் செய்துள்ளார். 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என அடுத்தடுத்து இரண்டு முக்கிய ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்தியப் பயிற்சியாளர் என்ற பெருமை இப்போது இவருக்கு மட்டுமே உண்டு. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடனான உறவில் விரிசல், டெஸ்ட் போட்டிகளில் தோல்வி எனப் பல சர்ச்சைகள் அவரைச் சூழ்ந்திருந்தாலும், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பீரின் சித்தாந்தம் அசைக்க முடியாத வெற்றியைப் பெற்றுள்ளது.

ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்தபோது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2024 ஐபிஎல் தொடரில் மகுடம் சூட வைத்த கம்பீரின் பெயர் பலமாக அடிபட்டது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிக ஆதிக்கம் செலுத்திய ஒரு அணியாக கேகேஆர்-ஐ மாற்றிய அதே 'டாாமினேஷன்' மந்திரத்தை, இந்திய அணியின் நீல நிற உடைக்கும் அவர் கொண்டு வந்துள்ளார். விராட் மற்றும் ரோஹித்தின் ஓய்வுக்குப் பின் இந்திய அணி தடுமாறும் என்று நினைத்தவர்களுக்கு, கம்பீரின் Fearless Cricket முறையான பதிலைக் கொடுத்துள்ளது.

2022 உலகக்கோப்பைக்கும் 2026 உலகக்கோப்பைக்கும் உள்ள வித்தியாசமே கம்பீரின் மேஜிக். 2022-ல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 168 ரன்கள் எடுத்தது, இரண்டு பேர் அரைசதம் அடித்தனர். ஆனால் இங்கிலாந்து அதை விக்கெட் இழப்பின்றி துவம்சம் செய்தது. 2026-ல் அதே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 253 ரன்கள் குவித்து மிரட்டியது. இதில் ஒரே ஒரு அரைசதம் தான். அதாவது, தனிப்பட்ட சாதனைகளை விட, அணியின் ரன் ரேட் தான் முக்கியம் என்ற கம்பீரின் கொள்கை இங்கு வென்றுள்ளது. "தனிநபர் மைல்கற்களைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்" என்று அவர் கூறுவது சும்மா அல்ல.

கம்பீரின் வெற்றிகளுக்குப் பின்னால் சில புத்திசாலித்தனமான மாற்றங்கள் உள்ளன:

2025 சாம்பியன்ஸ் டிராபியில் அக்சர் படேலை 5-வது இடத்திற்கு இறக்கி, கே.எல்.ராகுலை 6-வது இடத்திற்கு மாற்றியது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். இது அக்சருக்கு அதிரடி காட்டவும், ராகுலுக்கு இக்கட்டான நேரங்களில் இன்னிங்ஸை முடிக்கவும் வழிவகுத்தது.

டி20 ஸ்பெஷலிஸ்டாக இருந்த வருண் சக்கரவர்த்தியைத் துபாய் ஆடுகளங்களுக்காக ஒருநாள் போட்டிக்கு அழைத்தது பலரை வியக்க வைத்தது. ஆனால், அவர் அந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவராகத் திகழ்ந்து கோப்பையை வெல்ல உதவினார்.

சிறிய பங்களிப்பும் பெரிய கௌரவமும்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்தபோது, கம்பீர் பாராட்டியது வெறும் 8 ரன்கள் எடுத்த ஷிவம் துபேவைத்தான். "ஷிவம் அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள் இல்லையென்றால் சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். இது ஒரு கூட்டு முயற்சி" என்று அவர் கூறியது, அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

"ஒரு பயிற்சியாளர் எவ்வளவு சிறந்தவர் என்பது அவரிடம் இருக்கும் வீரர்களைப் பொறுத்தது" என்று கம்பீர் அடக்கமாகக் கூறலாம். ஆனால் ஜான் ரைட், கேரி கிர்ஸ்டன், ரவி சாஸ்திரி போன்ற ஜாம்பவான் பயிற்சியாளர்கள் வரிசையில் இன்று கம்பீர் முதலிடத்தில் நிற்கிறார் என்பதே உண்மை. 2027 உலகக்கோப்பை வரும்போது கம்பீரின் இந்த 'ஜீனியஸ்' ஆட்டம் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என்பதில் சந்தேகமில்லை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com