
துபாயில் நடந்த ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில், இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ஒரு பதிவு, இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு, கௌதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்திய இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் புகைப்படங்களைப் பதிவிட்டார். இந்தப் பதிவுகளின் கேப்ஷனாக, அவர் 'Fearless' என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். இந்தப் பதிவு, களத்தில் இந்திய வீரர்கள் அச்சமின்றி ஆடியதை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக களத்தில் நடந்த சில பரபரப்பான சம்பவங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் அமைந்திருந்தது.
இந்தப் போட்டியின் போது, இந்திய பேட்ஸ்மேன்களுக்கும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களான ஷாகின் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோருக்கும் இடையே கடும் வார்த்தை மோதல்கள் ஏற்பட்டன. பாகிஸ்தான் வீரர்கள் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டபோது, அபிஷேக் ஷர்மாவும், சுப்மன் கில்லும் தங்களது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்தனர். குறிப்பாக, அபிஷேக் ஷர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் விளாசி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் திட்டங்களை முற்றிலுமாக சிதைத்தார்.
இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்களில் ஒன்று, ஆட்டத்தின் முடிவில் நடந்த கைகுலுக்கல் சர்ச்சை. இந்த ஆட்டத்திற்கு முன்பும், பின்பும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை. முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் தனது ட்விட்டர் (இப்போது X) பக்கத்தில் "ஹன்ஜி, கேசா ரஹா சண்டே?" (எப்படி இருந்தது ஞாயிறு?) எனப் பதிவிட்டு, பாகிஸ்தான் அணியை நேரடியாகச் சீண்டியுள்ளார். இதேபோல், பல முன்னாள் வீரர்கள், இந்த வெற்றியைப் பாராட்டிப் பதிவிட்டிருந்தனர். ஆனால், கம்பீரின் "Fearless" என்ற ஒற்றை வார்த்தை, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.