ஐந்தே நாட்களில் அடுத்த தொடர்.. செக் வைக்க காத்திருக்கும் நியூசிலாந்து.. இந்தியாவின் பிளான் என்ன?

கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடும் என்பதால், நியூசிலாந்து தனது 16 பேர் கொண்ட அணியில் ஏழு வேகப்பந்து வீச்சாளர்களைச் சேர்த்துள்ளது.
India's Plan for the New Zealand Series Starting in Just Five Days
ஐந்தே நாட்களில் அடுத்த தொடர்.. செக் வைக்க காத்திருக்கும் நியூசிலாந்து.. இந்தியாவின் பிளான் என்ன?
Published on: 
Updated on: 
3 min read

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 5-வது டி20 போட்டி கடந்த அக்டோபர் 17-ம் தேதி முடிவடைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.

ஒருபக்கம், விராட் கோலி – ரோஹித் சர்மா போன்ற லெஜெண்ட்கள் விளையாடும் ஒருநாள் போட்டிகள் ஓராண்டில் மிகக் குறைவாகவே நடத்தப்படுகின்றன என ரசிகர்கள் புலம்புகின்றனர். மறுபக்கம், ஒரு வாரம்கூட இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த தொடர்களில் விளையாட வேண்டியிருப்பது குறித்து டி20 வீரர்கள் புலம்பி வருகின்றனர்.

சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், “நாங்கள் 20-ம் தேதி அங்கு சென்றடைவோம். 21-ம் தேதி பயிற்சி செய்வோம். 22-ம் தேதி போட்டியில் விளையாடுவோம். எனவே, இங்கு நாங்கள் சிறப்பாகச் செய்த விஷயங்களைத் தொடர முயற்சிப்போம். அங்குள்ள சூழல்களுக்குப் பழகிக்கொள்ளச் சிறிது நேரம் தேவைப்படும். எனவே, ஆடுகளத்தின் தன்மையை மதிப்பிடுவதற்கு இரண்டு அல்லது மூன்று பந்துகளை எதிர்கொள்வோம். அனுபவத்தின் மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பின்பற்றி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப விளையாடுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

சஞ்சு சாம்சனின் கருத்துப்படி, இந்தப் பயணத் திட்டத்தின்படி இந்திய வீரர்களுக்குப் போட்டிக்கு முன்பாக ஒருநாள் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள நேரம் கிடைக்கிறது.

முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் ஒருநாள் மட்டுமே பயிற்சி செய்ய நேரம் கிடைத்ததாகச் சஞ்சு சாம்சன் கூறியிருந்தார்.

இந்தியாவின் ஐந்து வெவ்வேறு நகரங்களில் போட்டிகள் நடைபெற்றதால், பயணம் செய்வதிலேயே பெரும்பாலான நேரம் செலவானதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு இறுக்கமான கால அட்டவணையில் தொடர்ந்து விளையாடுவதால், புதிய மைதானத்தின் சூழலுக்குப் பழகிக்கொள்வது வீரர்களுக்குச் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Squads
Squads

களைப்பு, குறைந்த பயிற்சி நேரம், புதிய மைதானத்தின் சூழல் எனப் பல சவால்களை எதிர்கொள்ளும் இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி கொடுக்க நியூசிலாந்து அணி திட்டமிட்டுள்ளது.

பழிவாங்கக் காத்திருக்கும் நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி, இந்தத் தொடரைத் தனது திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்பாகக் கருதும். சொந்த மண்ணில் இந்தியாவை எதிர்கொள்ளும் அந்த அணி, இந்திய வீரர்களுக்குச் சவாலளிக்கும் வகையில் வியூகங்களை வகுத்து வருகிறது.

சமீபத்தில், வைபவ் சூர்யவன்ஷி குறித்துப் பேசிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி, “நாங்கள் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை உன்னிப்பாகக் கவனித்துள்ளோம். அவரை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதற்கான திட்டத்தையும் வகுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அதிரடியான 16 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி எதிரணியினருக்கு சவாலாக காட்சியளிக்கிறார்.

குறிப்பாக, வேகப்பந்துகளை அவை வரும் வேகத்திலேயே மைதானத்திற்கு வெளியே பறக்கவிடுகிறார். மைதானத்தின் அனைத்துத் திசைகளிலும் சிக்ஸர்களை விளாசும் திறன் அவருக்கு உள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு போட்டிகள் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்த மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடும் என்பதால், நியூசிலாந்து தனது 16 பேர் கொண்ட அணியில் ஏழு வேகப்பந்து வீச்சாளர்களைச் சேர்த்துள்ளது.

லாக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, ஆடம் மில்னே, பிளேர் டிக்னர், நாதன் ஸ்மித் ஆகிய ஏழு வேகப்பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பவர் பிளே முதல் கடைசி ஓவர் வரை எந்த இடத்தில் எந்த வீரருக்கு எந்த பௌலரை பயன்படுத்த வேண்டும் என்ற கச்சிதமான திட்டத்துடன் தயாராக உள்ளார் கேப்டன் மிச்சல் சான்ட்னர்.

Indian Players
Indian Players

பவர் பிளேவில் வேகபந்துகளை வீசி ரன்களைக் கட்டுப்படுத்தி அழுத்தத்தை உருவாக்குவதும் அடுத்ததாக தன் கையில் பந்தை எடுத்து சூழலில் விக்கெட் வீழ்த்துவதும் அவரது திட்டமாக இருக்கலாம். ஆனால் இந்த டெக்னிக்குக்கு விழுகிற அணியா இந்திய அணி!

ஜப்பானில் ஆசியக் கோப்பையை வென்றுவிட்டு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை சமன் செய்துவிட்டு கொஞ்சம் களைப்பாக இருந்தாலும் கான்ஃபிடென்டாகவே நியூசிலாந்தில் காலடி வைத்துள்ளனர்.

இந்திய அணி

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (துணை கேப்டன்) என அதிரடியான பேட்டிங் படை இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது. இவர்களுடன் அக்சர் படேல், சிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் தீர் ஆகிய ஆல்ரவுண்டர்களும் அணியின் பலத்தை அதிகரிக்கின்றனர்.

அர்ஷ்தீப் சிங் லீட் செய்யும் வேகப்பந்து வீச்சுக் குழுவில் பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் ஆகியோருடன் அனுபவம் மிக்க புவனேஷ்வர் குமாரும் இடம்பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் விக்கெட்டுகளை வீழ்த்த புவனேஷ்வர் குமாரின் ஸ்விங் பந்துவீச்சு பெரிதும் கைகொடுக்கும் என்பதே இந்திய அணியின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

வழக்கம்போல, சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்குச் சவாலளிக்கத் தயாராக உள்ளனர்.

India's Plan for the New Zealand Series Starting in Just Five Days
வங்கதேசத்திடம் மோசமாக தோற்ற இந்திய கிரிக்கெட் அணி.. சத்தம் இல்லாமல் நடந்த "சம்பவம்" - இப்படியொரு மேட்ச் நடந்ததே தெரியலையே!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com