“வரலாறு காணாத வெற்றி..” உலகக் கோப்பையை முதல்முறையாக கையில் ஏந்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!!

இதன் மூலம் இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்று...
indian women world cup
indian women world cup
Published on
Updated on
1 min read

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி வாகையை சூடியுள்ளது. இந்திய மகளிர் அணிக்கு இதுவே முதல் உலகக்கோப்பை வெற்றி அனுபவம் ஆகும்.

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும்  இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 

இந்த நிலையில் வெற்றி  யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று  நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை குவித்திருந்தனர். இதன்மூலம், சேஸிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நிதானமாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், தென்னாப்பிரிக்காவின் கேப்டனும், தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் 98 பந்துகளில் 101 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பந்துவீச்சில் இந்திய வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். இதனால், 45.3 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலக கோப்பையை வென்று வரலாறு காணாத வெற்றியை படைத்துள்ளது.

சாம்பியனான இந்திய அணிக்கு ரூ. 40 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசாக வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com