

IPL தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) விளங்கி வருகிறது. அந்த அணிக்கு விராட் கோலி விளையாடும் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக அணியின் முக்கிய வீரராகவும் கேப்டனாகவும் இருந்த கோலி, 2021-ம் ஆண்டு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பிறகு 2022-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் RCB அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அப்போது தனக்கு ஏற்பட்ட அழுத்தம், கோலி அளித்த ஆதரவு, இருவருக்கும் இடையே உருவான நட்பு குறித்து டு பிளெசிஸ் தற்போது மனம் திறந்துள்ளார்.
2022-ம் ஆண்டு IPL ஏலத்தில் டு பிளெசிஸை RCB அணி தேர்வு செய்தபோது, அவரிடம் அணியின் கிரிக்கெட் இயக்குநராக இருந்த மைக் ஹெசன் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்டுள்ளார். அதாவது, RCB அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு ஏற்கெனவே தலைமை தாங்கிய அனுபவம் இருந்தாலும், இந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றான RCB-யை வழிநடத்துவது அவருக்கு புதிய சவாலாக இருந்தது.
ஆனால், கேப்டன் பொறுப்பை ஏற்கும் முடிவில் இருந்த தயக்கத்தை விராட் கோலி அனுப்பிய ஒரு செய்தி போக்கியதாக டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியிருந்த கோலி, டு பிளெசிஸுக்கு வாழ்த்து தெரிவித்து, தன்னைவிடச் சிறந்த கேப்டன் ஒருவர் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி என்றும், அவரை அணிக்குள் வரவேற்க ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால், அணியின் முன்னாள் கேப்டனிடமிருந்து தனக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாக டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்னுடன் நடைபெற்ற உரையாடலில் டு பிளெசிஸ் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கோலியிடம் தனியாகப் பேசியபோது, அவரது ஆதரவு இல்லாமல் RCB அணியை வழிநடத்துவது மிகவும் கடினம் என்று தெரிவித்ததாகக் கூறியுள்ளார். கோலி ஒரு வார்த்தை எதிராகப் பேசினால்கூட, கேப்டனாகத் தனது நிலை பாதிக்கப்படலாம் என்பதையும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
RCB அணியின் கேப்டனாக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அழுத்தம் குறித்து டு பிளெசிஸ் கூறிய கருத்துதான் தற்போது கவனம் பெற்றுள்ளது. "RCB அணிக்காக நீங்கள் ஒரு போட்டியில் தோற்றாலே போதும், பெங்களூரு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் விராட் கோலி மீண்டும் கேப்டனாக வர வேண்டும் என்று விரும்பும்" என்பதே அவரது கருத்து. ரசிகர்கள் தன்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல; கோலி கேப்டனாக இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இத்தகைய சூழலில் கோலியின் ஆதரவு கிடைத்தது தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததாக டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். கோலி தனது பொறுப்பை மதித்து, அணியின் முடிவுகளில் தேவையற்ற தலையீடு செய்யாமல் முழு ஆதரவு அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால், மூன்று ஆண்டுகள் கேப்டனாகப் பொறுப்பைச் சமாளிப்பது தனது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமான காலமாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விராட் கோலி 2013-ம் ஆண்டு முதல் RCB அணிக்குத் தலைமை தாங்கி வந்தார். ஆனால், 2021-ம் ஆண்டு சீசனுக்குப் பிறகு தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்தவும், பணிச்சுமையைக் குறைக்கவும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். டு பிளெசிஸும் 2020-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். எனவே, இருவரும் கேப்டன் பொறுப்பிலிருந்து வீரர்களாக மாறிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடிந்ததாக டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.
களத்திற்கு வெளியேயும் இருவருக்கும் இடையே நெருக்கமான நட்பு உருவானது. ஆரம்பத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடியிருந்தாலும், RCB அணியில் இணைந்த பிறகு உடனடியாக நல்ல புரிதல் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். கோலி தனக்கு முதல் நாளிலிருந்தே ஆதரவாக இருந்ததாகவும், எப்போதும் தனது பக்கம் நின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவத்தையும் டு பிளெசிஸ் பாராட்டியுள்ளார். இருவரும் RCB-க்காக 41 போட்டிகளில் இணைந்து விளையாடி 2,032 ரன்கள் சேர்த்துள்ளனர். இது அந்த அணிக்காக அமைந்த முக்கியமான பேட்டிங் கூட்டணிகளில் ஒன்றாகும். கோலியுடன் பேட்டிங் செய்யும்போது மைதானத்தில் ஒரு தனி உற்சாகமும் ஆற்றலும் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 முதல் 2024 வரை மூன்று சீசன்கள் RCB அணியின் கேப்டனாக இருந்த டு பிளெசிஸ், தனது காலத்தில் அணியை இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். அந்த அனுபவத்தில் கிடைத்த நட்பையும், கோலியுடன் ஏற்பட்ட நெருக்கத்தையும் இன்றும் மதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்தபோது விமர்சனங்களும் அழுத்தங்களும் இருந்தாலும், கோலி அளித்த ஆதரவு அந்தச் சவால்களை எதிர்கொள்ள உதவியது என்பதே டு பிளெசிஸ் பகிர்ந்துகொண்ட முக்கியமான தகவலாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.