மேசையை குத்தி ஆத்திரப்பட்ட கார்ல்சன்! இந்திய வீரரிடம் தோற்ற அதிர்ச்சியில் நிலைதடுமாறிய உலக சாம்பியன் - வைரல் வீடியோ பின்னணி!

ஆட்டத்தின் இறுதி நொடிகளில் ஏற்பட்ட கடும் அழுத்தத்தால், கார்ல்சன் தனது நிதானத்தை இழந்து மேசையிலேயே ஓங்கி குத்திய சம்பவம்
Magnus Carlsen reacts angrily after losing World Blitz Championship 2025
Magnus Carlsen reacts angrily after losing World Blitz Championship 2025
Published on
Updated on
1 min read

தோஹாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் (World Blitz Championship 2025) தொடரில், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் அதிர்ச்சிகரமான ஒரு தோல்வியைத் தழுவினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறாவது முறையாக உலக ரேபிட் பட்டத்தை வென்று உற்சாகத்தில் இருந்த கார்ல்சனுக்கு, பிளிட்ஸ் பிரிவின் 9-வது சுற்றில் இந்திய இளம் நட்சத்திரம் அர்ஜுன் எரிகைசி (Arjun Erigaisi) சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆட்டத்தின் இறுதி நொடிகளில் ஏற்பட்ட கடும் அழுத்தத்தால், கார்ல்சன் தனது நிதானத்தை இழந்து மேசையிலேயே ஓங்கி குத்திய சம்பவம் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் அர்ஜுன் எரிகைசி கறுப்பு நிறக் காய்களுடன் விளையாடினார். ஆட்டம் இறுதி கட்டத்தை எட்டியபோது இரு வீரர்களுமே குறைந்த கால அவகாசத்தில் (Time Pressure) காய்களை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். கார்ல்சன் தனது ராணியை நகர்த்தி அர்ஜுனின் சிப்பாயைக் கைப்பற்ற முயன்றபோது, பதற்றத்தில் ராணி அவரது கைகளிலிருந்து நழுவி கீழே விழுந்தது. சிதறிய காயை எடுத்து மீண்டும் வைப்பதற்குள் கடிகாரத்தின் நேரம் முடிந்துவிட்டதால் (Lost on time), அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தோல்வி உறுதியான அடுத்த நொடியே, மிகுந்த ஏமாற்றமடைந்த கார்ல்சன் தனது வலது கையை முஷ்டியாக மடித்து விளையாடும் மேசையின் மீது ஓங்கி குத்தினார். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நார்வே செஸ் தொடரில் இந்திய வீரர் குகேஷிடம் தோற்றபோதும் இதே போன்ற ஒரு ஆக்ரோஷமான எதிர்வினையை அவர் வெளிப்படுத்தியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு இந்திய வீரரிடம் தோற்று இதே போல ஆத்திரத்தை வெளிப்படுத்தியதைச் செஸ் ரசிகர்கள் 'கார்ல்சன் அவுட்பர்ஸ்ட் 2.0' (Outburst 2.0) எனச் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

கார்ல்சன் கோபத்துடன் வெளியேறிய அதே நேரத்தில், அர்ஜுன் எரிகைசி மிகவும் அமைதியாகக் கலைந்திருந்த செஸ் காய்களை எடுத்து மீண்டும் வரிசையாக அடுக்கினார். அர்ஜுனின் இந்த நிதானத்தையும் பக்குவத்தையும் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்தரா உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர். கார்ல்சனைப் போன்ற ஜாம்பவானை வீழ்த்திய பிறகும் எவ்வித ஆரவாரமும் இன்றி அவர் நடந்து கொண்ட விதம் 'உயர்ந்த மனிதத்தன்மைக்கு' (Class personified) அடையாளம் என அவர் புகழ்ந்துள்ளார்.

அர்ஜுன் எரிகைசி இந்தத் தொடரில் கார்ல்சன் மட்டுமின்றி, மற்றொரு நட்சத்திர வீரரான அப்துசட்டோரோவையும் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். பிளிட்ஸ் பிரிவில் கார்ல்சன் தோல்விகளில் இருந்து மீண்டு வந்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்புகள் இருந்தாலும், அர்ஜுன் எரிகைசியின் இந்த அதிரடி வெற்றி இந்தியச் செஸ் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com