ஐபிஎல் 2026 தொடரில் நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே, தனது அணியின் பலவீனங்களை மறைக்காமல் வெளிப்படையாகப் பேசினார். நடப்பு சீசனின் முதல் பாதியில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாடவில்லை என்கிற கசப்பான உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டுள்ள மும்பை ரசிகர்களுக்கு, ஜெயவர்த்தனேயின் இந்தப் பேட்டி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தால் மும்பை அணி நிலைகுலைந்து போனது. இது குறித்துப் பேசிய ஜெயவர்த்தனே, ஏழு போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு புள்ளிகளுடன் இருப்பது தங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றும், சில நேரங்களில் நன்றாக விளையாடினாலும் மற்ற நேரங்களில் சொதப்பி விடுவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். அகமதாபாத் போட்டியில் ஒரு நல்ல ரிதம் கிடைத்ததாகத் தோன்றிய நிலையில், மீண்டும் அதைத் தவறவிட்டுவிட்டோம் என்றார். குறிப்பாக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே பவர்பிளே ஓவர்களில் சென்னை அணியிடம் ஆதிக்கத்தை இழந்ததுதான் இவ்வளவு பெரிய தோல்விக்குக் காரணம் என்று அவர் கூறினார்.
மும்பை அணியின் பந்துவீச்சுதான் தற்போது மிகப்பெரிய கவலையாக இருப்பதாக ஜெயவர்த்தனே சுட்டிக்காட்டினார். இந்தச் சீசனில் அதிக முறை 'பிக் ஓவர்களை' (ஒரு ஓவரில் 18 ரன்களுக்கு மேல்) விட்டுக் கொடுத்த அணியாக மும்பை இந்தியன்ஸ் இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார். ஒரு ஓவரில் 20 ரன்களுக்கு மேல் எதிரணிக்குக் கொடுத்துவிட்டால், அங்கிருந்து ஆட்டத்திற்குள் மீண்டும் வருவது மிகவும் கடினம். பந்துவீச்சில் சீரான வேகம் மற்றும் துல்லியம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்றும், அடுத்த ஏழு போட்டிகளில் இந்தத் தவறுகளைச் சரிசெய்வதில் அதிக கவனம் செலுத்துவோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்தச் சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சொதப்பி வருவது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த ஜெயவர்த்தனே, ஒரு தனி நபரை மட்டும் தோல்விக்குக் குற்றம் சொல்ல தான் விரும்பவில்லை என்று கூறினார். ஹர்திக் ஆரம்பத்தில் நன்றாகவே பந்துவீசினார் என்றும், தற்போது ஒட்டுமொத்த அணியாகவே மும்பை இந்தியன்ஸ் தடுமாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே வீழ்த்தத் தவறுவது மற்றும் வெளி ஆடுகளங்களில் சரியாகப் பந்துவீசாதது என இது ஒரு கூட்டுத் தோல்வியே தவிர, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி அல்லது ஃபார்ம் மட்டும் காரணமல்ல என்று அவர் ஹர்திக்கிற்கு ஆதரவாகப் பேசினார்.
அணிக்குள் ஒரு சில வீரர்கள் மட்டும் நன்றாக விளையாடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், ஒட்டுமொத்த யூனிட்டாகச் செயல்பட்டால் மட்டுமே வெற்றிகளைப் பெற முடியும் என்றும் ஜெயவர்த்தனே தெளிவுபடுத்தினார். பேட்டிங்கிலும் சில நேரங்களில் நன்றாக ரன்கள் குவிக்கிறோம், ஆனால் அதில் ஒரு தொடர்ச்சி இல்லை என்றார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது ஐந்து நாட்கள் இடைவெளி கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் தவறுகளைச் சரிசெய்து கொண்டு, வரும் ஏப்ரல் 29 அன்று நடைபெற உள்ள ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வலுவாகத் திரும்புவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.