

சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். மெஸ்ஸி மீண்டும் அர்ஜென்டினா அணிக்காக களமிறங்க வாய்ப்பில்லை என்ற நிலைப்பாட்டை உறுதி செய்துள்ள நிலையில், 2016 ஆம் ஆண்டு அவர் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தபோது கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்த கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளது.
உலக கால்பந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் லியோனல் மெஸ்ஸியின் சர்வதேச பயணம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியானது. அர்ஜென்டினா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய மெஸ்ஸி, பல்வேறு ஏமாற்றங்களைக் கடந்து இறுதியில் மிகப்பெரிய வெற்றிகளையும் பதிவு செய்தார். குறிப்பாக, 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் கோபா அமெரிக்கா பட்டத்தையும், 2022ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பையையும் வென்றதன் மூலம் தனது சர்வதேச வாழ்க்கைக்கு மறக்க முடியாத அத்தியாயங்களை உருவாக்கி இருந்தார்.
இதற்கிடையில் 2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சிலியிடம் தோல்வியடைந்தது. அந்த போட்டியில் பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டது அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. தொடர் பைனல் தோல்விகளால் விரக்தியடைந்த மெஸ்ஸி, அந்தப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 29 மட்டுமே. உலகின் முன்னணி கால்பந்து வீரர் ஒருவர் தனது நாட்டுக்காக விளையாடுவதை நிறுத்துவதாக அறிவித்தது ரசிகர்கள் மட்டுமின்றி, சக வீரர்களையும் முன்னணி கால்பந்து நட்சத்திரங்கக்கும் வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அப்போதே மெஸ்ஸியின் இந்த முடிவிற்கு அவரது நீண்டகால போட்டியாளராக கருதப்படும் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “மெஸ்ஸி எடுத்த முடிவை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் “தோல்வி அல்லது பெனால்டியை தவறவிட்டதற்காக ஒரு வீரரின் திறமையை கேள்விக்குள்ளாக்க கூடாது” என்றும் தெரிவித்தார்.
மெஸ்ஸி கண்ணீருடன் இருப்பதைப் பார்ப்பது வேதனையாக இருப்பதாக கூறிய ரொனால்டோ, அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மீண்டும் அர்ஜென்டினா அணிக்காக அவர் விளையாட வேண்டும் என்றும் அப்போதே விருப்பம் தெரிவித்திருந்தார். இது ரசிகர்களிடமும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது
பின்னர் சர்வதேச கால்பந்தில் இருந்து விலகும் முடிவை மாற்றிக்கொண்ட மெஸ்ஸி மீண்டும் அர்ஜென்டினா அணிக்குத் திரும்பினார். அதன்பிறகு அவரது சர்வதேச வாழ்க்கை முற்றிலும் வேறொரு பாதையில் சென்றது. 2021 கோபா அமெரிக்கா வெற்றி மூலம் அர்ஜென்டினாவுக்காக தனது முதல் பெரிய சர்வதேச பட்டத்தை வென்றார். அதைத் தொடர்ந்து 2022 உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவை சாம்பியனாக்கி, தனது நீண்டகால கனவையும் நிறைவேற்றினார். 2024 கோபா அமெரிக்கா பட்டமும் அவரது வெற்றி பட்டியலில் இணைந்தது. இவ்வாறு பல ஆண்டுகளாக சர்வதேச பட்டத்துக்காக போராடிய மெஸ்ஸி, இறுதியில் அர்ஜென்டினா கால்பந்து வரலாற்றின் மிகப்பெரிய வீரர்களில் ஒருவராக தனது இடத்தை உறுதி செய்தார்.
தற்போது மெஸ்ஸி மீண்டும் அர்ஜென்டினா ஜெர்சியை அணிய போவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். இதையும் மாரு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு போல மீண்டும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்வாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இந்த முறை மெஸ்ஸியின் முடிவு மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமாக, மெஸ்ஸியின் சர்வதேச எதிர்காலம் குறித்து அப்போது கருத்து தெரிவித்த ரொனால்டோவின் சர்வதேச பயணமும் இன்னும் முழுமையாக முடிவுக்கு வந்ததாக தெரியவில்லை. இதனால், உலக கால்பந்தின் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களின் சர்வதேச வாழ்க்கை எப்போது அதிகாரப்பூர்வமாக நிறைவடையும் என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.