அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வரும் 2026 யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் மரியானோ நவோனியை எதிர்கொண்டார். ஆர்தர் ஆஷ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. தொடக்கத்தில் இரு வீரர்களும் கடுமையாக போராடிய நிலையில், முதல் சுற்றை நவோனி டைபிரேக்கர் மூலம் கைப்பற்றினார்.
ஆனால் அடுத்த இரண்டு சுற்றுகளிலும் தனது அனுபவத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 5-7, 4-6 என அடுத்தடுத்து வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதற்குப் பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது. கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதமான சூழல் ஜோகோவிச்சுக்கு சவாலாக அமைந்தது. உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் மைதானத்திலேயே வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இடைவேளைகளில் உடல் வெப்பத்தை குறைக்க பனிக்கட்டிகளை பயன்படுத்தியபடியும் அவர் தொடர்ந்து விளையாடினார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதிலும், ஜோகோவிச் தனது போராட்டத்தை கைவிடவில்லை.
ரசிகர்களின் ஆதரவுடன் போட்டியில் தொடர்ந்து நீடிக்க முயன்றார். ஆனால் நவோனியின் தொடர் பேஸ்லைன் தாக்குதல்களை எதிர்கொள்வது அவருக்கு கடினமாக இருந்தது. நான்காவது சுற்றை 6-2 என கைப்பற்றிய நவோனி, வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தினார். இதற்கிடையே, கீழ் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக ஜோகோவிச் மருத்துவ இடைவேளை எடுத்தார். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய அவர், கடைசி வரை போராடினாலும் நவோனியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் 7-6(5), 5-7, 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் மரியானோ நவோனி வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 2026 யுஎஸ் ஓபன் தொடரின் முதல் சுற்றிலேயே ஜோகோவிச்சின் பயணம் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில், தனது 25-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற ஜோகோவிச்சின் கனவும் இந்த தோல்வியால் தடைபட்டது. 39 வயதான ஜோகோவிச் உடல்நலக் குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல் இறுதி வரை போராடிய விதம் ரசிகர்களை நெகிழச் செய்தது. போட்டி முடிந்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறியபோது, ஆர்தர் ஆஷ் அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்