"IPL-ல் நிராகரிக்கப்பட்ட பிளேயர்ஸ் தான் PSL-ல் விளையாடுகிறார்கள்" - சொந்த நாட்டுத் தொடரையே அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் வீரர்

ஐபிஎல் ஏலத்தில் விலை போகாதவர்கள் அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதுதான் ஷேசாத்தின் வாதம்...
ahmed shehzad
ahmed shehzad
Published on
Updated on
2 min read

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடருக்கும், பாகிஸ்தானில் நடக்கும் பிஎஸ்எல் (PSL) தொடருக்கும் இடையே எது சிறந்தது என்கிற விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வீரரான அகமது ஷேசாத், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத மற்றும் அந்தத் தொடரால் நிராகரிக்கப்பட்ட வீரர்கள் மட்டுமே பாகிஸ்தான் தொடரில் விளையாடி வருவதாக அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் சமீபத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ரைலே ரூசோ மற்றும் இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் ஆகியோரிடம் பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வியில் இருந்து தொடங்கியது. பிஎஸ்எல் மற்றும் ஐபிஎல் தொடர்களை ஒப்பிட்டுப் பேசச் சொன்னபோது, ரைலே ரூசோ பிஎஸ்எல் தொடரை புகழ்ந்தும், ஐபிஎல் தொடர் ஒரு 'பாலிவுட் சினிமா' போன்றது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இதைக் கேட்டு ஆவேசமடைந்த அகமது ஷேசாத், ஒரு வீரர் ஒரு குறிப்பிட்ட தொடரில் விளையாடும்போது அந்தத் தொடரைப் பற்றித்தான் உயர்த்திப் பேசுவார் என்றும், அதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் கூறினார். ஆனால், எதார்த்தமான உண்மை என்னவென்றால், பிஎஸ்எல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் ஐபிஎல் ஏலத்தில் விலை போகாதவர்கள் அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் என்பதுதான் ஷேசாத்தின் வாதம்.

அகமது ஷேசாத் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், "பிஎஸ்எல் தொடரில் இப்போது எஞ்சியிருக்கும் வீரர்கள் யார்? ஐபிஎல் தொடரால் ஓரங்கட்டப்பட்டவர்கள், அங்கே வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது கிரிக்கெட்டில் இனி எதிர்காலமே இல்லை என்கிற நிலையில் இருப்பவர்கள் தான் பாகிஸ்தானில் விளையாடுகிறார்கள். டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் கூட ஐபிஎல் தொடரில் வாய்ப்பு இல்லை என்றால்தான் இங்கு வருவார்கள். தற்போது பிஸியாக இருக்கும் எந்த ஒரு முன்னணி வீரரும் ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு வரமாட்டார்கள். அப்படி இருக்கும்போது இந்த இரண்டு தொடர்களையும் ஒப்பிட்டுப் பேசுவது சுத்த முட்டாள்தனம்" என்று மிக நேரடியாகப் பேசியுள்ளார்.

மேலும், பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு வீரர்களிடம் இந்தத் தொடர்களை ஒப்பிடச் சொல்லி வற்புறுத்துவதையும் அவர் கண்டித்துள்ளார். குசல் மெண்டிஸ் போன்ற வீரர்களிடம், "கடந்த ஆண்டு நீங்கள் ஏன் பிஎஸ்எல்-லை விட்டுவிட்டு ஐபிஎல்-லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்றீர்கள்? அதற்கு நீங்கள் வருத்தப்படுகிறீர்களா?" என்பது போன்ற தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அவர்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வீரருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவர் உடனடியாகப் பாகிஸ்தான் தொடரைக் கைவிட்டுவிட்டு அங்கேதான் செல்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றும் அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து பல வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் விலகி ஐபிஎல் தொடரில் இணைவது சமீபகாலமாகத் தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் ஜிம்பாப்வே வீரர் பிளெசிங் முசரபானி மற்றும் இலங்கை வீரர் தசுன் ஷனகா போன்றோர் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் அணிகளுக்குப் பதிலாக விளையாடச் சென்றது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வியை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. வீரர்களின் இந்தச் செயலால் பிஎஸ்எல் தொடரின் தரம் மற்றும் அதன் மீதான நம்பிக்கை சர்வதேச அளவில் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே, இனிமேல் ஐபிஎல்-லுக்காக பிஎஸ்எல் தொடரைப் பாதியில் விட்டுச் செல்லும் வீரர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்கள் ஒரே காலகட்டத்தில் (Overlap) நடப்பதுதான் இந்தப் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பண பலம் மற்றும் தரமான கிரிக்கெட் என இரண்டிலும் ஐபிஎல் தொடர் உலக அளவில் முன்னணியில் இருப்பதால், வெளிநாட்டு வீரர்கள் இயல்பாகவே இந்தியத் தொடருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். 2026-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிஎஸ்எல் தொடரால் அத்தகைய நிதி வசதிகளை வழங்க முடிவதில்லை.

அகமது ஷேசாத்தின் இந்தக் கருத்துகள் பாகிஸ்தான் ரசிகர்கள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒருபுறம் சிலர் அவர் உண்மையைத்தான் பேசுகிறார் என்று ஆதரித்தாலும், ஒரு பாகிஸ்தான் வீரராக இருந்துகொண்டு தனது நாட்டுத் தொடரையே இவ்வளவு மட்டமாகப் பேசுவது தவறு என்று மற்றொரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், ஐபிஎல் தொடரின் அசுர வளர்ச்சிக்கு முன்னால் பிஎஸ்எல் தொடர் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுவது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com