12 வருஷத்துக்கு முன்னாடி நடந்த அதே சம்பவம்! மறுபடியும் நரைன் வலையில் சிக்கிய பூரன் - சூப்பர் ஓவரில் லக்னோ செய்த 'ரிஸ்க்' சொதப்பலில் முடிஞ்சது எப்படி?

உலக கிரிக்கெட்டில் சுனில் நரைனின் பந்துவீச்சை பூரன் அளவுக்கு வேறு யாரும் அதிகம் எதிர்கொண்டது இல்லை
pooran vs narine super over
Published on
Updated on
2 min read

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை ஒரே ஒரு முறைதான் சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 'மெய்டன்' வீசப்பட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு சிபிஎல் தொடரில் சுனில் நரைன் வீசிய அந்த ஓவரில் சிக்கியது நிக்கோலஸ் பூரன் தான். ஆனால், பல ஆண்டுகள் கழித்து தற்பொழுது கொல்கத்தா அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில், லக்னோ அணி மீண்டும் அதே நிக்கோலஸ் பூரனை களம் இறக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுனில் நரைன் வீசிய முதல் பந்திலேயே பூரன் அவுட்டாகி வெளியேற, லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் மீது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நரைனுக்கும் பூரனுக்கும் இடையிலான பழைய வரலாறு கேப்டன் பண்டிற்கு தெரியாதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்த லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், கடினமான நேரத்திலும் சிறந்த வீரர்களுக்கு ஆதரவாக இருப்பது முக்கியம் என்று தெரிவித்தார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுனில் நரைன் வீசிய அதே சூப்பர் ஓவரில், முதல் நான்கு பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பூரன் திணறினார். ஐந்தாவது பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தற்போதைய போட்டியிலும் அதே நரைன் கையில் பந்து இருந்தபோது, பூரனை அனுப்பியது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த லாங்கர், உலக கிரிக்கெட்டில் சுனில் நரைனின் பந்துவீச்சை பூரன் அளவுக்கு வேறு யாரும் அதிகம் எதிர்கொண்டது இல்லை என்பதால் அவரே சிறந்த தேர்வு என தாங்கள் நம்பியதாகக் கூறினார்.

பூரன் தற்பொழுது ஃபார்மில் இல்லை என்பதை தானும் பூரனும் ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்த லாங்கர், ஆனாலும் சூப்பர் ஓவர் போன்ற இக்கட்டான சூழலை கையாள பூரன் தான் சரியான நபர் என்று அணி நிர்வாகம் நினைத்ததாகக் கூறினார். உலகின் தலைசிறந்த வீரர்களை இக்கட்டான நேரத்தில் கைவிடக்கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், உலகத்தரம் வாய்ந்த சுனில் நரைனின் பந்துவீச்சை பூரன் சிறப்பாக கையாண்டுள்ளார் என்றும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த முறை அது பலன் அளிக்கவில்லை என்றும் லாங்கர் வருத்தம் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் உலகின் மிகச்சிறந்த வீரராக பூரன் திகழ்ந்தாலும், தற்பொழுது அவரிடம் தன்னம்பிக்கை குறைவாக இருப்பதை லாங்கர் சுட்டிக்காட்டினார். தன்னம்பிக்கை என்பது தானாக வராது என்றும், சரியான பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலமே அதை மீட்க முடியும் என்றும் அவர் கூறினார். கிரிக்கெட் என்பது சில நேரங்களில் மிகவும் கடினமான விளையாட்டு என்பதற்கு பூரனின் இன்றைய நிலையே சாட்சி என்று குறிப்பிட்ட அவர், பூரன் தனது பழைய ஃபார்முக்கு திரும்ப கடினமாக உழைத்து வருவதாகத் தெரிவித்தார்.

லக்னோ அணி தற்பொழுது புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் இருந்தாலும், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இன்னும் இருப்பதாக லாங்கர் நம்பிக்கை தெரிவித்தார். தங்களுக்கு இன்னும் ஆறு போட்டிகள் மீதமுள்ள நிலையில், அடுத்த ஏழு நாட்கள் இடைவேளை கிடைத்துள்ளது தங்களுக்கு சாதகமான விஷயம் என்று அவர் கூறினார். இந்த இடைவெளியில் அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசித்து, அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற தீவிரமாக முயற்சி செய்வோம் என்று கூறி தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com