
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கான், தனது மூத்த சகோதரர் ஹாஜி அப்துல் ஹலீம் ஷின்வரியை இழந்துள்ளார். இந்தத் துயரமான நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவருக்கு அஞ்சலி செலுத்தியது கவனிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டிக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி வீரர்கள் ரஷித் கானைச் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினர். பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் ரஷித் கானின் சகோதரர் மறைவுக்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவருக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைக் காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. களம் தாண்டி, எதிரணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு இடையேயான இந்த நட்பு, விளையாட்டு உலகின் உயரிய மனிதாபிமானத்தைக் காட்டுகிறது.
ரஷித் கானின் சகோதரர் மறைவு குறித்து, ஆப்கானிஸ்தான் வீரர்களான இப்ராஹிம் சத்ரான் மற்றும் அஸ்கர் ஆப்கான் ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். "மூத்த சகோதரர் ஒரு குடும்பத்திற்குத் தந்தை போன்றவர். இந்தத் துயரத்திலிருந்து மீண்டு வர ரஷித் கானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பொறுமையை அளிக்க இறைவனை வேண்டுகிறேன்" என்று இப்ராஹிம் சத்ரான் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தனிப்பட்ட துயரத்திற்குப் பிறகும், ரஷித் கான் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தபோதிலும், ரஷித் கான் 16 பந்துகளில் 39 ரன்கள் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.