ஐபிஎல் 2026 தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியின் போது, காயம் அடைந்த ஆல்-ரவுண்டர் மிட்செல் சாட்னருக்கு பதிலாக 'கன்கஷன் சப்ஸ்டிடியூட்' விதியை தவறாகப் பயன்படுத்தி ஷர்துல் தாக்கூரை களமிறக்கியதாக மும்பை அணி மீது புகார்கள் எழுந்துள்ளன. ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஓவரில் சிஎஸ்கே வீரர் கார்த்திக் சர்மா கொடுத்த கேட்சை பிடித்தபோது சாட்னருக்கு தோள்பட்டையில் பலமான காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறிய நிலையில், அவருக்குப் பதில் ஷர்துல் தாக்கூரை விளையாட வைக்க மும்பை நிர்வாகம் விடுத்த கோரிக்கையை நடுவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்த அதிரடி மாற்றம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஐபிஎல் விதிமுறைப்படி ஒரு வீரருக்கு தலை அல்லது கழுத்துப் பகுதியில் பலமான அடி பட்டால் மட்டுமே கன்கஷன் சப்ஸ்டிடியூட் முறையைப் பயன்படுத்த முடியும். ஆனால் சாட்னருக்கு தோள்பட்டையில்தான் காயம் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்த நிலையில், நரம்பியல் ரீதியான பாதிப்பு இருப்பதாகக் கூறி மும்பை அணி அவரை மாற்றியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் மிட்செல் சாட்னருக்கு இணையான திறமை கொண்ட வீரரையே மாற்றாகக் கொண்டு வர வேண்டும் என்கிற நிலையில், அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை கொண்டு வந்தது சரியான முடிவா? என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சாட்னர் மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு மும்பை அணியின் ஓய்வு அறையில் தனது தோள்பட்டைக்கு ஐஸ் பேக் வைத்து சிகிச்சை பெற்று வந்த காட்சிகள் கேமராவில் சிக்கின. இதனால் அவர் தலை காயத்தால் வெளியேறவில்லை என்பது உறுதியானது. ஐபிஎல் மற்றும் ஐசிசி விதிமுறைகளின்படி ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு அவருக்கு மயக்கம் அல்லது சுயநினைவு தப்புவது போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே இந்த விதியைப் பயன்படுத்த அனுமதி உண்டு. ஆனால் மும்பை அணி இந்த விதியைத் தவறாகப் பயன்படுத்தி தங்களுக்குச் சாதகமாக ஒரு கூடுதல் பந்துவீச்சாளரை உள்ளே கொண்டு வந்துள்ளதாகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சர்ச்சை குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். சாட்னர் கேட்ச் பிடித்தபோது அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதி முதலில் தரையில் மோதியதாகவும், அதன் பிறகுதான் தோள்பட்டையில் அடிபட்டதாகவும் அவர் கூறினார். சாட்னருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது அவருக்குத் தலைச்சுற்றல் இருந்ததால், மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் கன்கஷன் சப்ஸ்டிடியூட் கோரிக்கையை முன்வைத்தோம் என்றும், அதை மேட்ச் ரெப்ரி மற்றும் நடுவர்கள் ஆராய்ந்து அனுமதி அளித்த பிறகுதான் ஷர்துல் தாக்கூரை விளையாட வைத்தோம் என்றும் ஜெயவர்த்தனே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்னர் தோள்பட்டை காயத்திற்காக ஐஸ் வைத்திருந்தாலும், அவருக்கு உடல்நிலை சீராக இல்லாத காரணத்தாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். சாட்னருக்குப் பதிலாக ஷர்துல் வந்தது குறித்து கிண்டலாகப் பேசிய ஜெயவர்த்தனே, தனது பேட்டிங் திறமை ஷர்துலுக்கு இணையாகக் கருதப்பட்டதை அறிந்து சாட்னர் வருத்தப்படலாம், ஆனால் விதிமுறைப்படி இதுதான் நடந்தது என்று முடித்துக்கொண்டார். இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியில் களமிறங்கிய ஷர்துல் தாக்கூரால் மும்பை அணியின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.