"நான் அவன் இல்லை!" - ரயிலில் 3rd ஏசியில் Upper Birth-ல் பயணம் செய்த ஷிவம் துபே! வெளிறிப்போன டிடிஆர்!

கை நிறையத் தெரிந்த டாட்டூக்களை மறைக்க முழுக்கை சட்டை என ஒரு 'மறைமுக வேடத்தில்' அவர் ரயில் நிலையத்திற்குச் சென்றார்..
"நான் அவன் இல்லை!" - ரயிலில் 3rd ஏசியில் Upper Birth-ல் பயணம் செய்த ஷிவம் துபே! வெளிறிப்போன டிடிஆர்!
Published on
Updated on
2 min read

உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய இந்திய அணிக்கு நாடே விழா எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய வீரர் ஷிவம் துபே ரயிலில் ஒரு ரகசியப் பயணத்தை மேற்கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுவாக நம்மூர் கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்றாலே தனி விமானம், சொகுசு கார்கள் என ராஜமரியாதையுடன் தான் வலம் வருவார்கள். ஆனால், சிவம் துபேயோ யாரும் எதிர்பாராத விதமாக சாதாரண ரயிலில், அதுவும் 3-வது ஏசி (3rd AC) பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

அகமதாபாத்தில் உலகக் கோப்பை கொண்டாட்டங்களை முடித்துவிட்டு மும்பை திரும்பத் திட்டமிட்ட துபேக்கு ஒரு பெரிய சிக்கல் காத்திருந்தது. அன்றைய தினம் அகமதாபாத்திலிருந்து மும்பை செல்லும் அனைத்து விமானங்களும் 'புக்கிங்' ஆகிவிட்டன. ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. காரில் போகலாம் என்றால் நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், துணிந்து ரயில் பயணத்தை அவர் தேர்வு செய்தார். ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரர் பொதுவெளியில் ரயிலில் பயணிப்பது என்பது தேன்கூட்டில் கை வைப்பது போன்றது. அடையாளம் தெரிந்துவிட்டால் கூட்டத்தை சமாளிக்கவே முடியாது.

இந்த இக்கட்டான பயணத்தைப் பற்றி சிவம் துபே விவரிக்கும்போது, அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் எவ்வளவு பயந்தார்கள் என்பது தெரிகிறது. "ரயிலில் யாராவது உங்களை அடையாளம் கண்டுகொண்டால் என்ன செய்வீர்கள்?" என்று எல்லோரும் பதறியுள்ளனர். ஆனால் துபே ஒரு மாஸ்டர் பிளான் போட்டார். அதிகாலை 5:10 மணிக்குக் கிளம்பும் ரயிலைத் தேர்ந்தெடுத்தார். முகம் தெரியாமல் இருக்க மாஸ்க், தலைக்குத் தொப்பி, கை நிறையத் தெரிந்த டாட்டூக்களை மறைக்க முழுக்கை சட்டை என ஒரு 'மறைமுக வேடத்தில்' அவர் ரயில் நிலையத்திற்குச் சென்றார்.

ரயில் கிளம்ப ஐந்து நிமிடம் இருக்கும் வரை காரிலேயே காத்திருந்துவிட்டு, கடைசி நேரத்தில் ஓடிச் சென்று ரயிலில் ஏறியுள்ளார். ரயிலுக்குள் சென்றதும் மற்றவர்களின் பார்வையில் படக்கூடாது என்பதற்காக மேல் படுக்கையை (Top Berth) ஒதுக்கி அங்கே படுத்துக்கொண்டார். ஆனாலும் ஒரு கட்டத்தில் 'பகீர்' என்று ஒரு சம்பவம் நடந்தது. டிக்கெட் பரிசோதகர் (TC) வந்து பெயர்களைச் சரிபார்க்கும்போது "சிவம் துபே.. இது அந்த கிரிக்கெட் வீரர் பெயராச்சே?" என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட துபேயின் மனைவி அஞ்சும், "அடப்போங்க சார்.. அவர் எதுக்கு இங்க வரப்போறாரு?" என்று லாவகமாகப் பேசி அந்தச் சந்தேகத்தைத் தீர்த்து வைத்துள்ளார்.

அந்த டிக்கெட் பரிசோதகருக்குத் தெரியவில்லை, தனக்கு முன்னால் இருப்பவர் தான் அந்த உலகக் கோப்பை நாயகன் என்று! ஒரு வழியாக யாரிடமும் சிக்காமல் போரிவலி ரயில் நிலையத்தில் இறங்கிய துபேயை, காவல்துறையினர் பாதுகாப்புடன் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஒரு பெரிய நட்சத்திர வீரராக இருந்தும், எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணப் பயணியாக அவர் மேற்கொண்ட இந்த "மிஷன் இம்பாசிபிள்" பயணம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com