என்னய்யா கூப்பிட்டு கொண்டு போய் வச்சு இப்படி மிரட்டுறீங்க?.. பாகிஸ்தானை விட்டு வெளியேற துடிக்கும் இலங்கை வீரர்கள் - மிரட்டி விளையாட வைக்கிறதா பாக்.,?

"தற்போதைய சூழ்நிலையால், சில வீரர்கள் வீடு திரும்பக் கேட்டது அணி நிர்வாகம் மூலம் எங்களுக்குத் தெரியவந்தது. ...
Pakistan-Sri-Lanka-Cricket
Pakistan-Sri-Lanka-Cricket
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் இப்போது ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காகத் தங்கியுள்ள இலங்கை அணியின் சில வீரர்கள், தங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று பயந்துள்ளனர். காரணம், புதன்கிழமை அன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் பலியானார்கள். இதையடுத்து, மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வரும் அணியைச் சேர்ந்த குறைந்தது எட்டு வீரர்கள், ராவல்பிண்டியில் நடக்க இருந்த இரண்டாவது ஆட்டத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன், உடனடியாக நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்ததாகச் செய்திகள் வந்தன. ஆனாலும், இலங்கை கிரிக்கெட் வாரியம் இவர்களைச் சமாதானப்படுத்தி, இந்தத் தொடரைத் தொடர்ந்து விளையாடும்படி வற்புறுத்தி உள்ளது.

போட்டிகள் நடக்கும் ராவல்பிண்டியும், குண்டு வெடித்த இஸ்லாமாபாத்தும் மிக மிக அருகருகே இருப்பதால், வீரர்களின் பாதுகாப்பு பயம் மேலும் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டது.

இது பற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "தற்போதைய சூழ்நிலையால், சில வீரர்கள் வீடு திரும்பக் கேட்டது அணி நிர்வாகம் மூலம் எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நாங்கள் வீரர்களுடன் பேசினோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் ஒவ்வொரு வீரருக்கும் தேவையான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்து வருகிறோம். அதனால், பயப்படத் தேவையில்லை. திட்டமிட்டபடி அனைவரும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, வாரியம் சொன்னதை மீறி யாராவது வீரர்கள் தாயகம் திரும்ப முடிவெடுத்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் எச்சரித்துள்ளது. அப்படிச் செல்பவர்களுக்குப் பதிலாக வேறு ஆட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

"எங்கள் அறிவுறுத்தலை மீறி எந்த வீரரோ அல்லது துணைப் பணியாளரோ (அணியின் உதவியாளர்கள்) நாடு திரும்பினாலும், தொடர் தடைபடாமல் இருக்க மாற்று ஆட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, இவ்வாறு திரும்பிச் சென்றவர்களின் செயல்களைப் பற்றி முறையான விசாரணை நடத்தப்படும். அந்த விசாரணையின் முடிவுக்குப் பிறகே, உரிய தண்டனை வழங்கப்படும்," என்றும் அந்த அறிக்கையில் உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒருநாள் தொடர் முடிந்தவுடன், ஜிம்பாப்வேயையும் சேர்த்து ஒரு முத்தரப்பு இருபதுக்கு இருபது (டி20) போட்டித் தொடரிலும் பாகிஸ்தானும் இலங்கையும் மோத உள்ளன. அந்தப் போட்டிகள் நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறும்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் மொஹ்சின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதால், இந்த மூன்று அணிகளுக்கும் பாதுகாப்பு கிடைப்பதை அவரே நேரடியாக உறுதி செய்து வருகிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.      

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com