"இஷான் கிஷன் மீது எனக்கு செம கோபம்!": மைதானத்திலேயே கொதித்த சூர்யகுமார் யாதவ் - ராய்பூர் வெற்றியில் அரங்கேறிய அந்தச் சம்பவம்!

ராய்பூர் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்த இந்தப் போட்டி, இந்திய அணியின் பலத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது...
"இஷான் கிஷன் மீது எனக்கு செம கோபம்!": மைதானத்திலேயே கொதித்த சூர்யகுமார் யாதவ் - ராய்பூர் வெற்றியில் அரங்கேறிய அந்தச் சம்பவம்!
Published on
Updated on
2 min read

ராய்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இருப்பினும், இந்த வெற்றிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சக வீரர் இஷான் கிஷன் மீது தனக்கு இருந்த செல்ல கோபத்தை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 230 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். இந்த கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்குத் தொடக்கத்திலேயே சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். இதில் இஷான் கிஷன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய சூர்யகுமார் யாதவ், "இஷான் கிஷன் மதிய உணவிற்கு என்ன சாப்பிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை, அந்த அளவிற்கு அவர் ஆக்ரோஷமாக விளையாடினார். 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் விழுந்த பிறகு, பவர் பிளே ஓவர்கள் முடிவில் 75 ரன்களை எட்டியது என்பது நான் பார்த்திராத ஒன்று. ஆனால், அதே சமயம் எனக்கு அவர் மீது கோபமும் வந்தது. ஏனெனில் பவர் பிளே ஓவர்களில் அவர் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பே கொடுக்கவில்லை. பெரும்பாலான பந்துகளை அவரே எதிர்கொண்டு ரன் குவித்தார். நான் வெறும் 8 பந்துகளை மட்டுமே சந்திக்க முடிந்தது. 209 ரன்கள் இலக்கை துரத்தும்போது, பேட்டர்கள் இதுபோன்று சுதந்திரமாகத் தங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்," என்று கலகலப்பாகத் தெரிவித்தார்.

இஷான் கிஷன் வெறும் 32 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவருக்கும் சூர்யகுமாருக்கும் இடையிலான 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. அதேபோல் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது பாணியில் விளையாடி 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது ஃபார்மை மீட்டார். இஷான் கிஷனின் இந்தத் அதிரடி ஆட்டம் அவர் மீது இருந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதோடு, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் உத்தேசப் பட்டியலில் அவருக்கு வலுவான இடத்தை உறுதி செய்துள்ளது.

பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு நியூசிலாந்து அணியை 208 ரன்களில் கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் சூழல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதே வேகத்தைத் தொடர விரும்புவதாகவும் சூர்யகுமார் கூறினார். நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூட, இந்திய அணியின் ஆழமான பேட்டிங் வரிசையை எதிர்கொள்ள 200 ரன்கள் போதாது, 300 ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கூறும் அளவிற்கு இந்திய வீரர்களின் ஆட்டம் மிரட்டலாக இருந்தது. ராய்பூர் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்த இந்தப் போட்டி, இந்திய அணியின் பலத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com