இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் ஷிகர் தவான்.. மணப்பெண் யார்? திருமண தேதி மற்றும் முழு விவரங்கள்!

சிகர் தவான் தனது திருமணத் திட்டமிடலில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன...
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகும் ஷிகர் தவான்.. மணப்பெண் யார்? திருமண தேதி மற்றும் முழு விவரங்கள்!
Published on
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராகத் திகழ்ந்து 'கப்பர்' என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஷிகர் தவான், தனது வாழ்க்கையின் ஒரு புதிய இன்னிங்ஸைத் தொடங்கத் தயாராகிவிட்டார். நீண்ட நாட்களாகத் தனது தோழியாக இருந்த சோஃபி ஷைன் என்பவரை அவர் வரும் பிப்ரவரி மாதம் கரம் பிடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் திருமணக் கொண்டாட்டங்கள் வரும் பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் (டெல்லி-என்சிஆர்) மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மிகவும் ஆடம்பரமான முறையில் நடைபெறவிருக்கும் இந்தத் திருமண விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், சிகர் தவான் தனது திருமணத் திட்டமிடலில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிகர் தவானின் வருங்கால மனைவியான சோஃபி ஷைன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவர்களது காதல் உறவு கடந்த 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போதுதான் உலகிற்குத் தெரியவந்தது. அப்போது மைதானத்தில் தவானுக்கு ஆதரவாக சோஃபி ஷைன் அமர்ந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பின. சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் சந்தித்த இவர்கள், முதலில் நண்பர்களாகப் பழகிப் பின்னர் அது காதலாக மலர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தனது முந்தைய கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, இந்தத் புதிய உறவை தவான் மிகவும் நிதானமாகவும் நன்றியுணர்வுடனும் கையாண்டு வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவான் முன்னதாக ஆயிஷா முகர்ஜி என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 11 வயதில் ஜோரவர் என்ற மகன் உள்ளான். நீண்ட கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு தவான் மற்றும் ஆயிஷா தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். தனது மகனைப் பிரிந்து வாடும் தவான், அவ்வப்போது மகனுக்காக உருக்கமான பதிவுகளைத் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com