
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தனது 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாட துவங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த பயணம் என்னை இப்படி ஒரு இடத்திற்கு கொண்டுச் செல்லும் என உண்மையில் நான் எண்ணியதே இல்லை. இது என்னை சோதித்தது, வடிவமைத்தது, மேலும் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருக்கக் கூடிய பாடங்களை கற்றுக் கொடுத்தது,"
"வெள்ளை உடையில் விளையாடுவது என்பது எனக்கு தனிப்பட்ட உணர்வு. அமைதியான போராட்டம், தனிமையான பல நாட்கள் , பிறரால் கவனிக்கப்படாத சிறு தருணங்கள் — ஆனால் அவை என்றும் மனதில் பதிந்து கிடக்கும்,"
" டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் முடிவை எடுப்பது எளிதல்ல. ஆனால் இது சரியான நேரம் போலவே தெரிகிறது. என்னிடம் இருந்த அனைத்தையும் நான் இதற்காக கொடுத்துள்ளேன், ஆனால் இது எனக்குத் திரும்பக் கொடுத்தது அதை விட அதிகம்."
"இந்த பயணத்தில் என் உடன் இருந்த விளையாட்டு சகாக்கள், ரசிகர்கள் மற்றும் என்னை பாராட்டிய ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
"என் டெஸ்ட் பயணத்தை நான் எப்போதும் ஒரு புன்னகையுடன் நினைவுகூர்வேன்," என கூறியுள்ளார்.
இந்த அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு, இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் சூழலில் வெளியிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு ரோஹித் ஷர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில் விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான கோலி கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்