"என் கவனம் சாதனைகளில் இல்லை.." - பேட்டிங்கில் 'மாஸ்' காட்டிய விராட்; கிங் கோலிக்கு பிரின்ஸ் கில் புகழாரம்!

கோலியின் கருத்து, அவர் பயிற்சியை விட மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை உணர்த்துகிறது.
Virat Kohli
"என் கவனம் சாதனைகளில் இல்லை.." - பேட்டிங்கில் 'மாஸ்' காட்டிய விராட் கோலி; கிங் கோலிக்கு பிரின்ஸ் கில் புகழாரம்!BCCI
Published on: 
Updated on: 
3 min read

திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான ஒருநாள் போட்டியில், விராட் மற்றும் கில்லின் சதம், குல்தீப் யாதவின் 4 விக்கெட்டுகள் என ரசிகர்களுக்கு ஒரு படையலே வைத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார் விராட்.

என்னதான் இந்தியா மைதானத்தை ஆதிக்கம் செலுத்திய வெற்றியாக இருந்தாலும், போட்டியின் தொடக்கம் அத்தனை சாதகமாக இல்லை. வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனர்களான ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் ஜான் கேம்ப்பெல் விக்கெட் கொடுக்காமல் 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர்.

Virat Kohli
Virat KohliBCCI

குல்தீப் யாதவின் சுழல் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 62 ரன்களுக்கு ஜான் கேம்ப்பெலைத் தூக்கினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. ஜஸ்டின் கிரீவ்ஸ் 101 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜாங்கோவின் அதிரடியான 58* மூலம் 295 ரன்களை எட்டியது மேற்கிந்தியத் தீவுகள்.

296 என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கிய ரோஹித் சர்மா 32 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

நிதானமாக விளையாடிய கில், விக்கெட் கொடுக்காமல் அரைசதம் கடந்தார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கிங் கோலி, ஆரம்பம் முதலே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசி வந்தார்.

59 ரன்கள் அடித்ததன் மூலம் 15,000 என்ற இலக்கை அடைந்தார் விராட். சச்சினைப் போல இரண்டு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டாடினார்.

சுப்மன் கில் சதம் விளாசினார். 108 பந்துகளில் 110 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஜுவல் ஆண்ட்ரூவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

Gill
Gill

விராட் கோலி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடையே பார்ட்னர்ஷிப் அமைந்தது. போட்டி முழுவதுமாக விராட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது விக்கெட்டை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. போட்டி இறுதிக்கட்டத்தை அடையும்போது அதிரடியைக் கூட்டினார். 41.4வது பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை எட்டினார்.

இறுதியில் 88 பந்துகளில் 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

"நான் அதிகம் பயிற்சி செய்பவன் அல்ல" - விராட்

போட்டிக்குப் பிறகு பேசிய விராட், "ஆட்டத்தைப் புரிந்துகொள்வதுதான், என்னை நல்ல உடற்தகுதியுடன் வைத்துக்கொள்வதுதான் முக்கியம். நான் ஒருபோதும் அதிகம் பயிற்சி செய்பவன் அல்ல. புத்துணர்ச்சியுடன் இருப்பது, அந்தத் தருணத்தில் கவனம் செலுத்துவது, மேலும் இந்த ஆட்ட முறைக்கு கச்சிதமாகப் பழகிக்கொள்வது ஆகியவைதான் முக்கியம். நான் நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன். அது களத்தில் நான் விரும்பியபடி செயல்பட எனக்கு உதவுகிறது.

கோலியின் இந்தக் கருத்து, அவர் பயிற்சியை விட மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாராக இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

Kuldeep
Kuldeep

மேலும், 15,000 ரன்கள் என்ற மைல்கல் பற்றி பேசிய அவர், "என் கவனம் ஒருபோதும் இந்த மைல்கற்கள் மீது இருந்ததில்லை. அணிக்கு என் வேலையைச் செய்யும் அதே வேளையில், சூழ்நிலையைப் புரிந்துகொள்வதுதான் முக்கியம். என்னென்ன சாதனைகள் வந்தாலும், இவ்வளவு காலம் விளையாடக்கூடிய இந்த நிலையில் இருப்பதற்கு நான் உண்மையிலேயே பாக்கியம் பெற்றவன். எனக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையும், ஆசீர்வதிக்கப்பட்ட பயணமும் அமைந்துள்ளது. இந்த இடத்துக்கு வர நிறைய பேர் விரும்புகிறார்கள். நாம் பணிவாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டும்" என்றார்.

"அவரை அவர் போக்கில் விட்டுவிடுங்கள்" - கில்

போட்டிக்குப் பிறகு விராட் குறித்து புகழ்ந்து பேசிய கில், "அவர் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். மேலும், அவர் ஆட்டத்தை மிகவும் ரசித்து, சுதந்திரமாக விளையாடுகிறார் என்று நான் நினைக்கிறேன். இவைதான் அவரது பேட்டிங்கின் உண்மைகள். அவரிடம் எப்போதுமே திறமை இருந்தது. நினைத்த நேரத்தில் பவுண்டரியை அடிக்கும் திறன் இருந்தது. அதை அவர் இப்போதும் செய்துகொண்டிருக்கிறார். இந்தியாவுக்காக இத்தனை ஆட்டங்களை வென்று கொடுத்த அவரைப் போன்ற ஒருவரை, நீங்கள் அவர் போக்கில் விட்டுவிடுங்கள். உரிய நாளில் அவர் உங்களுக்காகப் போட்டிகளை வென்று தருவார்" என்றார்.

மேலும், குல்தீப் யாதவ் குறித்து பேசிய கில், "குல்தீப் போன்ற ஒருவர், குறிப்பாக மிடில் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசினால், அவர் நிச்சயம் விக்கெட் வீழ்த்துவார். அவர்களின் தொடக்க ஆட்டக்காரர்களால் நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம். குல்தீப் எங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவர்களை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது ஒரு சிறந்த விஷயம் என்று தோன்றியது" என்றார்.

Virat Kohli
"ஒரு நிரந்த பேர்..." சச்சின் சாதனையை தட்டி விட்ட 'விராட் கோலி'.. 37 வயதில் காட்டிய அதிரடி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com