இருதரப்பு மோதல்...! ஜல்லிக்கட்டு வேண்டும்-ஜல்லிக்கட்டு வேண்டாம்...!

இருதரப்பு மோதல்...! ஜல்லிக்கட்டு வேண்டும்-ஜல்லிக்கட்டு வேண்டாம்...!
Published on
Updated on
1 min read

பொங்கலூர் அருகே நடைபெற்ற அழகுமழை சிறப்பு கிராமசபா கூட்டத்தில் ஜல்லிக்கட்டு வேண்டும் எனத் தரப்பினரும் , ஜல்லிக்கட்டு வேண்டாம் என மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் அழகுமலை ஊராட்சியின் சிறப்புக் கிராம சபாகூட்டம் வேலாயுதம் பாளையத்தில் அதன் தலைவர் தூய மணி தலைமையில்  நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலர்கள்,அரசு அதிகாரிகள் மற்றும் அழகுமலை சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள்  என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் தொங்குட்டிபாளையம் கிராம மக்கள் சார்பில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி மனு அளித்தும், கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அழகுமலை சுற்றுவட்டார கிராம மக்கள் குடிநீர்  தெருவிளக்கு சாலை வசதி போன்றவற்றைச் செய்து தராமல் காலதாமதம் செய்து வருவதாக ஊராட்சி தலைவர் தூய மணி மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினர்.

இன்னிலையில் கூட்டத்தில் ஒரு தரப்பினர் அழகுமலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிகளால் சுற்றுப்புற சுகாதாரம் சீர்கேடு அடைந்து விட்டதாகவும், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம்  என முழக்கமிட்டனர்

இதனை ஏற்க  மற்றொரு தரப்பினர்  ஜல்லிக்கட்டு வேண்டும் என் முழக்கம் எழுப்பினர். 

பின்னர், பல்லடம் டிஎஸ்பி சௌமியா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.

அப்பொழுது பேசிய ஊராட்சி தலைவர் தூய மணி அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டாம் என நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டு நடப்பதற்கான எந்தவித அறிவிப்பும் வராததால் தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். 

பின்னர்,அங்கிருந்த பொதுமக்களைக் காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.அப்போது காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கிடையே தள்ளுமுள்ளு நிலவியது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com