
கிரிக்கெட் உலகில் “ஸ்விங்கின் சுல்தான்”னு புகழப்படுற பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமுக்கு, பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் உள்ள நியாஸ் ஸ்டேடியத்தில் ஒரு சிலை அமைக்கப்பட்டிருக்கு. இதுதான் இப்போ ஹைலைட்டே!.
பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் உள்ள நியாஸ் ஸ்டேடியத்தில், சமீபத்தில் வாசிம் அக்ரமுக்கு மரியாதை செலுத்தும் விதமா ஒரு சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை, வாசிம் அக்ரமின் புகழ்பெற்ற இடது கை வேகப்பந்து வீச்சு நிலையை (bowling action) பிரதிபலிக்கிற மாதிரி, 1999 உலகக் கோப்பை ஜெர்சியோட வடிவமைக்கப்பட்டிருக்கு.
சிலையோட உடல் அமைப்பு, அவரோட பந்து வீச்சு நிலை எல்லாம் சரியா இருந்தாலும், முக அமைப்பு மட்டும் வாசிம் அக்ரமுக்கு பதிலா வேறு யாரோ மாதிரி இருக்குனு சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்திருக்கு. பேச்சு என்ன.. பார்க்கவே கண்றாவியாத் தான் இருக்கு.
மிக அண்மையில இந்த சிலையோட புகைப்படம் எக்ஸ் தளத்தில் ஒரு மீம் பக்கத்தால ஷேர் செய்யப்பட்டதுக்கு பிறகுதான், இந்த விஷயமே வெளி உலகுக்கு தெரிய வந்தது. (இவ்ளோ நாள் பொத்தி பொத்தி வச்சிருந்திருக்காங்க பார்த்துக்கங்க).
சிலர் இந்த சிலையை ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனோட முகத்தோட ஒப்பிட்டு, “வாசிம் அக்ரமா இது, இல்லை ராம்போவா?”னு கலாய்ச்சிருக்காங்க. இன்னொருத்தர், "1999 உலகக் கோப்பையோட பழி தீர்க்கப்பட்டிருக்கு!”னு எழுத ட்ரோல் மெட்டீரியல் ஆகியிருக்கு அந்த சிலை.
இந்த சிலை சம்பவத்தை விட, வாசிம் அக்ரமோட கிரிக்கெட் பயணம் ஒரு உண்மையான உத்வேகம். 1984 முதல் 2003 வரை பாகிஸ்தானுக்கு ஆடிய வாசிம் அக்ரம், 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளும், 356 ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த முதல் பவுலர்னு பெருமை பெற்றவர். அவரோட ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சு, எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எப்பவுமே ஒரு நைட்மேர் தான்!.
பேட்டிங்கிலும் அவர் சும்மாவா? 6,000 ரன்களுக்கு மேல அடிச்சிருக்கார், அதுல ஒரு டெஸ்ட் போட்டியில் 257 ரன்கள் அடிச்சு ஆட்டமிழக்காம இருந்தது அவரோட மாஸ்டர் பீஸ். 1992 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர், மொத்தம் 4 உலகக் கோப்பைகளில் விளையாடியிருக்கார். 25 டெஸ்ட் மற்றும் 109 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாகவும் செயல்பட்டிருக்கார்.
கிரிக்கெட் முடிச்ச பிறகு, வாசிம் அக்ரம் பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும் உலகம் முழுக்க பிஸியாக இருக்கார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.