"எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தமிழ்நாட்டிற்கு பாதகம்" திருமாவளவன்!

"எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, தமிழ்நாட்டிற்கு பாதகம்" திருமாவளவன்!

எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் இந்தி பேசும் மாநிலங்களுக்கு சாதகமாகவும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதகமாகவும் அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழுவின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன், நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசு தலைவரை அழைக்காதது கண்டிக்கத்தக்கது. அரசியல் சாசன சட்டத்தின்படி இரு அவைக்கும் ஜனாதிபதி தான் தலைவர். எனவே, அவர்தான் நாடாளுமன்றத்தை திறந்து இருக்க வேண்டும். இதை வலியுறுத்தியே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தன. ஆனால் இதனை பிரதமர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் பற்றி நாடாளுமன்ற திறப்பு விழாவில் நரேந்திர மோடி பேசியிருக்க வேண்டும் என்பது ஜனநாயக சக்திகளின் எண்ணமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெருக்கும் நோக்கத்திலேயே நாடாளுமன்ற கட்டிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் 888 பேர் அமரக்கூடிய வகையில் இரு அவைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் போது அது தமிழகத்திற்கு பாதகமாக அமையும். குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்திய தமிழ்நாட்டில் பெரிய அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை. மாறாக இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் அருதி பெரும்பான்மை பெறும் வகையில் தொலைநோக்கு சதித் திட்டத்துடன் இதனை செய்கிறார்கள் என்ற விமர்சனமும் எழுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, அமுல் நிறுவனம் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்ய இருப்பது குறித்து முதல்வர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் முதல்வரின் முயற்சி வெற்றி பெறட்டும். அமுல் நிறுவனம் தன் விருப்பப்படி பால் கொள்முதல் செய்ய எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. மத்திய பாஜக அரசு வருமான வரித்துறை, சிபிஐ போன்ற தன்னாட்சி அமைப்புகளை தங்களுக்கு வேண்டாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளும் கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்பதை மறுக்க முடியாது என கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com