"கட்சியையும், ஆட்சியையும் இரட்டை மாட்டு வண்டி போல் சிறப்பாக செலுத்துகிறார் முதலமைச்சர்" ராஜ கண்ணப்பன்!!

ராவணனை வீழ்த்திய ராமநாதபுரத்தில் திமுக பலமாக உள்ளதால் இங்கு திமுகவை யாரும் வீழ்த்த முடியாது என அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்பொழுது அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில்,"பாஜக அதிமுக கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம். அண்ணாமலை நடைபயணம் மட்டுமல்ல உருண்டு வந்தாலும் இங்கு ஒன்னும் நடக்காது. ராமநாதபுரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியையும், கட்சியையும் இரட்டை பொருத்திய மாட்டு வண்டி போல் செலுத்தி சிறப்பாக நடத்தி வருகிறார். மக்களுக்கு நல்லாட்சியும் கட்சியினருக்கு சிறந்த தலைவராகவும் இருந்து வருகிறார்" எனப் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "ராமனுக்கு நாதனாக இருந்தவர் ஈஸ்வரன். சிவ பக்தனான ராவணன், ஈஸ்வரனிடம் வரமாக பெற்ற வாளுடன் போரிட்ட நிலையிலும் ராமனிடம் தோற்றான். சிவனின் ஆயுதத்தை ஏந்திய ராவணனை ராமன் வென்றான். ராவணனை வீழ்த்திய ராமநாதபுரத்தில் திமுக பலமாக உள்ளது. யாரும் வீழ்த்த முடியாது. ராமனுக்கு நாதன் ஈஸ்வரன் என்பதால்  ராமநாதபுரம் என பெயர் உள்ளது" என பேசியுள்ளார்.

இந்நிலையில்,ராமன் வாழ்ந்த பூமி ராமநாதபுரம் என ராஜ கண்ணப்பன் ஏற்று கொண்டதே மகிழ்ச்சி என பாஜக-வினர் தெரவித்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com