ரயில் விபத்து : 99% தமிழர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

ரயில் விபத்து : 99% தமிழர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

ஒடிசாவில் 99% தமிழர்கள் அடையாளம் காணப்பட்டுளதாக  மீட்பு பணிகளுக்காக ஒடிசா சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் தலைமையிலான குழு தகவல் தெரிவித்துள்ளது. 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்ததில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 போ் உயிாிழந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனா்.

இதனையடுத்து ரயில் விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்பதோடு, அவர்களை தமிழகம் அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று ஒடிசா சென்றடைந்தது.

இக்குழுவானது விபத்து நடைபெற்ற பகுதி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும்  உயிரிழந்தவர்களின் உடல்களை தொடர்ந்து பார்வையிட்டு தமிழ்நாட்டை சேர்ந்த நபர்களை அடையாளம் கண்டு வருகிறது.

தமிழக அரசின் குழுவின் தற்போதய தகவலின் படி ரயிலில் பயணித்த 99% தமிழர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று 12 பேர் அடையாளம் காணப்பட வேண்டியிருந்த நிலையில், 4 பேர் அடையாளம் காணப்பட்டு உயிருடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 8 தமிழர்கள்  மட்டுமே அடையாளம் காணப்பட வேண்டியுள்ளதாகவும் இன்றுக்குள் அவர்களும் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் தமிழ்நாடு அரசின் மீட்புக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:ஒடிசா இரயில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் சென்னை வந்தனர்!