பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, “அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைவிட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். பாஜக கூட்டணி விவகாரத்தில் “அன்புமணியும் அவர் மனைவியும் என் காலைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதனர்” என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
ஏற்கனவே சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ் மேடையிலேயே அன்புமணியை கடுமையாக சாடியிருந்தார். இப்படி மாற்றி மாற்றி இருவரும் வெளிப்படையாகவே அடித்துக்கொண்டனர். இந்நிலையில்தான் அன்புமணி பனையூரில் தனியாக அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறார். “தேர்தலை கவனிக்காமல் ராமதாஸ் சொந்த மகனுடனே சண்டையிட்டு வருவது அர்த்தமற்றது” என ஆர்வாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக-வுக்குள் நடக்கும் பிரச்சனைகள் குறித்து வன்னியர் சங்க தலைவரும், பாமக சட்ட திட்டங்களை வகுத்த குழுவில் இருந்தவருமான பு.தா.அருள்மொழி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் “நான்தான் கட்சியின் தலைவர், ஐயா வழிகாட்டியாக தொடர்வார் என்று கூறியிருக்கிறாரே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த பு.தா.அருள்மொழி “ஏற்கனவே பாமக நிறுவனர், தலைவராக நானும் செயல்தலைவராக அன்புமணியும் தொடர்வார் என ஏற்கனவே சொல்லியுள்ள நிலையில் அன்புமணி விடாமல் இப்படி பேசி வருவது தேவையற்ற ஒன்று. மேலும் கட்சி விதிகளின்படி நிறுவனர் ராமதாஸ் அவர்களுக்கு அனைத்து அதிகாரமும் உண்டு. டாக்டர் ஐயா தான் எங்களுக்கு என்றுமே தலைவர். மூத்த தலைவர்களின் எண்ணமும் அதுவே! அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு தற்போது இல்லை ” என பேசியிருந்தார். நிர்வாகிகள் சிலர் பாமக -வை அன்புமணி கையிலெடுத்துவிட்டார், என்று சொல்லப்பட்ட நிலையில் வன்னியர் சங்க தலைவரின் இந்த காற்று பெரும் சலசப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அன்புமணியை சௌமியாதான் இயக்குகிறாரா?
“ஏற்கனவே அன்புமணியின் இந்த எதேச்சதிகார போக்கிற்கு அன்புமணியின் மனைவி சௌமியாதான் காரணமா? என்ற சர்ச்சை பலகாலமாக புகைந்து வருகிறது. சௌமியா செல்லும் இடமெல்லாம் உங்கள் அண்ணன், உங்கள் தலைவர் என்றே சொல்லிவந்துள்ளார். மேலும் பாஜக கூட்டணியில் பாமக -இணைந்தே ஆக வேண்டும் என அன்புமணியை வற்புறுத்தி தந்தைக்கு எதிராக நிறுத்தியவரும் சௌமியா தான் என்று சொல்லுகிறவர்களும் உண்டு.
குமுறும் ஜி.கே மணி!
ஏற்கனவே அன்புமணி - ராமதாஸ் இடையேயான மோதலுக்கு ஜி.கே மணிதான் கர்த்தா என்று கூறப்படுகிறது. காரணம் 25 ஆண்டுகளாக பாமக -வின் தலைவராக இருந்த ஜி.கே மணியை மாற்றிவிட்டு அன்புமணியை தலைவராக்கிய கடுப்பில் இருந்ததாகவும், அந்த கோபத்தை தணிக்கவே அவருக்கு கவுரவ தலைவர் பதவி கொடுக்கப்பட்டதாகவும் ஒரு சலசலப்பு ஏற்கனவே உள்ளது. ஆனால் இதை மணி உறுதியாக மறுத்துள்ளார்.
கட்சியின் நிலை என்ன?
எது எப்படி இருந்தாலும், அன்புமணியும் - ராமதாசும் பொதுவெளியில் குடும்ப பிரச்சனையை கொண்டு வந்து நிறுத்திவிட்டனர், அதுமட்டுமின்றி வாரிசுகள் அனைவருக்கும் கட்சிக்குள் வாய்ப்பளித்து தேவையில்லாத பிரச்சனையையும் வாங்கிக்கொண்டார் ராமதாஸ்.ஒரு ஒருவேளை தேர்தல் நெருங்கும் வரை இந்த நிலை நீடித்தால் தொண்டர்கள் நிச்சயம் அதிருப்தி அடைந்து விடுவாரக்ள். பெரும்பான்மையான் நிர்வாகிகள் கட்சியின் இந்த நிலை கண்டு திமுக, அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் இறங்கிவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன. இத்தனைக்கு பிறகும் கட்சிக்காவது இருவரும் இணைய வேண்டும் என சில நிர்வாகிகள் நினைக்கின்றனர். ஆனால் எந்த முகத்தோடு தந்தை - மகன் இருவரும் மக்களை சந்திப்பர் என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது?
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.