க்ரைம்

“கழுத்தறுத்து கொல்லப்பட்ட 15 வயது பள்ளி மாணவன்” - போலீசாரிடம் சிறுவன் சொன்ன அந்த ஒரு தகவல்.. கண்மாய் பகுதியில் நடந்தது என்ன?

அரவிந்த், அஸ்வினை தாக்கியதை பார்த்த 17 வயது சிறுவன் அச்சமடைந்து..

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். கூலித்தொழிலாளியான இவரது மகன் 15 வயதுடைய அஸ்வின். இவர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 வகுப்பு படித்து முடித்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை முடிந்த நிலையில் வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றிருக்கிறார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. அஸ்வினுக்கு, இளந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (25), காரையூரைச் சேர்ந்த கணேசன் (22) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்டோருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று நான்கு பேரும் ஒன்றாக டூவீலரில் வெளியே சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மது வாங்கிய அவர்கள், கீழக்காவனிப்பட்டி கண்மாய் பகுதிக்கு சென்று அங்கு அமர்ந்து மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த இருந்த அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரத்தில் தகராறாக மாறியதாக கூறப்படுகிறது. அப்போது அரவிந்த், அஸ்வினை தாக்கியதை பார்த்த 17 வயது சிறுவன் அச்சமடைந்து அங்கிருந்து சற்று தூரம் விலகிச் சென்றுள்ளார்.

அப்போது இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அரவிந்த் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் சேர்ந்து அவர்கள் வைத்திருந்த கத்தியால் அஸ்வினை கழுத்தறுத்து கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அஸ்வினின் அலறல் சத்தம் கேட்டு 17 வயது சிறுவன் அங்கு சென்று பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். தொடர்ந்து கணேசன் மற்றும் அரவிந்த ஆகிய இருவரும் 17 வயது சிறுவனை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று திருப்பத்தூர் பகுதியில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பு சென்றிருக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு அதிர்ச்சி அடைந்த சிறுவன் நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், அஸ்வினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரவிந்த் மற்றும் கணேசனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நண்பர்களுடன் வெளியே சென்ற பள்ளி மாணவன், சில மணி நேரங்களிலேயே கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திருப்புத்தூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.