தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இருவர் வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “நான் 1997 முதல் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகை. தொடர்ந்து அவரது ரசிகர் மன்றத்திலும் செயல்பட்டு வந்தேன். கடந்த இரண்டு வருடமாக தற்போது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அன்னை விஜி சரவணனுடன் இணைந்து கட்சி பணி செய்து வருகிறேன். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாலா என்பவர் கட்சி பணிகளின் போது எனக்கு பழக்கமானார். தற்போது ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜி சரவணன் நடத்தி வரும் லாட்டரி தொழிலில் கமிஷன் மட்டும் வாங்கித் தருவோம். அதற்கு அக்கவுண்ட் ரெடி செய்து தாருங்கள் என்று கூறினார்.
அதற்கு நான் சம்மதம் தெரிவித்த பிறகு தான் தமிழ்நாட்டில் லாட்டரி தொழில் கிடையாது. அதை செய்தால் நம்மை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று அறிந்தேன். எனவே அதை செய்து தரமாட்டேன் என்று கூறினேன். அதற்காக அவர் என்னிடம் முன்பணம் கொடுத்திருந்த நிலையில் தொடர்ந்து என்னிடம் இருந்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டு அவரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். பின்னர் 7 மாத காலத்திற்கு பிறகு தேர்தல் பணியின் போது மீண்டும் அவரை பார்த்தேன்.
அப்போது அவர் என்னிடம் உங்களுக்கு ஒரு வேலை ரெடி செய்துள்ளேன் என்றார். தொடர்ந்து மே 3ஆம் தேதி சரவணன் அண்ணனின் லாட்டரி மூலம் உங்களுக்கு வேலை ஏற்பாடு செய்து தருகிறேன். நீங்கள் தற்போது கடன் தொல்லையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக நாம் ராமநாதபுரம் சென்று ஏஜெண்டை பார்க்க வேண்டும் என்று அழைத்தார். அதற்கு நான் சரவணன் அண்ணணுடையதா என்று கேட்கவும் ஆமாம் என்று கூறினார். அவரின் அழைப்பை நம்பி நானும் அவரது காரில் சென்றேன்.
காரில் செல்லும் போது எனக்கு குடிக்கும் கலர் பாட்டிலில் ஏதோ கலந்து கொடுத்தார். அதை குடித்து நான் மயக்கமடைந்தேன். பின்னர் என்னை லாட்ஜிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்தார் அவருடன் சேர்ந்து மற்றொருவரும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கண்ணீருடன் தெரிவித்தார். இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, உன்னை சரவணன் தான் கூட்டி வரச்சொன்னார் அவரிடம் கேட்டுக் கொள் என்றனர். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் உனது குழந்தையை கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.
அதன்பிறகு மூன்று நாள் கழித்து ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடமே சென்று கேட்டேன். உங்கள் பெயரைச் சொல்லி என்னை கூட்டிச் சென்று இப்படி செய்து விட்டார்கள் என்று கூறினேன். அதற்கு இதையெல்லாம் நீங்கள் பெரிது படுத்தாதீர்கள், இதுகுறித்து புஸ்ஸி அண்ணனிடம் சொல்லி புஸ்ஸி அண்ணன் விஜய் அண்ணனிடம் சொல்லி ஒரு வேலை வாங்கி கொடுத்து சரி செய்து விடலாம் என்று சரவணன் என்னிடம் தொலைபேசியில் கூறினார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டது என்னோடு சேர்ந்து மற்றொரு பெண்ணும். அந்த பெண் இதுகுறித்து வெளியே சொல்ல வேண்டாம் என்று என் காலில் விழுந்து அழுதார். தற்போது இந்த சம்பவத்தால் எங்கள் ஊரைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் என்னை தரக்குறைவாக பார்க்கிறார்கள். மேலும் “அவன் கூட போன என் கூட லாட்ஜிக்கு வரியா” என கேட்டு அசிங்கப்படுத்துகின்றனர். குற்றவாளிகள் இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அனைத்து கட்சியினரும் என்னை வந்து சந்தித்து ஆறுதல் கூறினார்கள். ஆனால் நான் பயணிக்கும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் யாரும் இதுகுறித்து என்னிடம் பேசவில்லை ஆறுதல் கூறவில்லை.
இதற்கு காரணமாக இருந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். காரணம் குற்றவாளிகள் இருவரும் சட்டமன்ற உறுப்பினரின் பங்களாவில் வைத்து தான் கைது செய்தார்கள். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் லாட்டரி நடத்தி வருகிறார். அவர் தான் குற்றவாளிகள் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்தார். நான் பாதிக்கபட்ட சம்பவம் குறித்து சென்னையில் உள்ள அமைச்சர்கள் ஆதவ் அர்ஜினா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகிய இருவரிடமும் இதுகுறித்து புகார் மனு கொடுத்தேன்.
அண்ணன் விஜய் நடித்த தெறி படத்தில் குற்றவாளிகளுக்கு கொடுக்கும் தண்டனை போல் இவர்களுக்கும் கொடுக்க வேண்டும். விஜய் ரசிகையாக இருந்த பாவத்திற்கு எனக்கு இது தேவையா? எனக்கு நீதிவேண்டும். முதல்வர் என்னை அழைத்து என்ன நடந்தது என்பதை கேட்க வேண்டும். இந்த மாவட்டத்திலேயே இரண்டு அமைச்சர்கள் உள்ளார்கள். ஒருவரும் என்ன என்று கூட கேட்கவில்லை. நம்ம ஆட்சியிலேயே அண்ணனை குறை சொல்வது போல் நடந்து கொள்கிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் உள்பட ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் என மூன்று பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.