Erode POCSO case 
க்ரைம்

"உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்" சிறுமியை ஆசைவார்த்தை கூறி சீரழித்த காதலன்! 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

Vinvizhi Leninton

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியில் பிளஸ்-1 படித்து வந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பாலமலை கிராமம் ராமன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (24). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்துள்ளார். இந்த வேலையை தவிர்த்து விடுமுறை நாட்களில் 'கேட்டரிங் சர்வீஸ்' பணிக்கும் சென்று வந்துள்ளார்.

கடந்த ஆண்டு 2025-ம் ஆண்டு கவுந்தப்பாடியில் நடைபெற்ற விழா ஒன்றில் கேட்டரிங் பணிக்கு சென்றுள்ளார். அங்கு பிளஸ்-1 படித்து வந்த 16 வயது மாணவியுடன் செல்வராஜுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இருவரின் பழக்கமானது விழா முடிந்த பின்னரும் தொடர்ந்த நிலையில், இருவரும் நெருக்கமாக பேசி பழகி வந்துள்ளனர். அப்போது செல்வராஜ், சிறுமியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியதாக தெரிகிறது.

அதன்பின்னர், கடந்த 20.10.2025 அன்று சிறுமியை சுற்றுலா அழைத்துச் செல்வதாக செல்வராஜ் கூறியுள்ளார். இதனையடுத்து, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை 'பெருக்கை' காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வராஜ் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். மேலும், அங்கு சிறுமியை தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க சிறுமியின் வீட்டில், மகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிய நிலையில், கொல்லிமலை பெருக்கை காட்டில் சிறுமி இருப்பது தெரியவந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் சிறுமியையும் செல்வராஜையும் மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி. சொர்ணகுமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர்களாக ஜெயந்தி மற்றும் மகாலட்சுமி ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்