

பெங்களூருவில் மத்திய வர்த்தக மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயிலும் 20 வயது மாணவி ஒருவர், லாங்போர்டு டவுனில் உள்ள தனது அடுக்குமாடிக் குடிருப்பில் வசித்து வந்துள்ளார். அந்த குடியிருப்பின் உரிமையாளர் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த மாணவி விலகிச் செல்ல முயன்றபோதிலும், சமீபத்தில் அவர் தன்னை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடித்து, கன்னங்களில் முத்தமிட்டு, தகாத வகையில் தொட்டதாகவும் அவர் காவல்நிலையத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
பார்கவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அளித்த புகாரின்படி, அவர் சுமார் இரண்டரை மாதங்களாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் வசித்து, தனது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறார். மேலும், 60 வயதான கமலேஷ் குமார் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஆவார்.
அந்த வீட்டில் நிலுவையில் உள்ள பழுதுபார்க்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்ட் 15 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் பார்கவி வசித்த வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, பார்கவி அந்த குடியிருப்பில் தனியாக இருந்துள்ளார். பழுதுபார்க்கும் பணியைச் சரிபார்த்த பிறகு, குமார் பார்கவியிடம் அவருடைய கல்லூரியைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி பேசியுள்ளார்.
பின்னர் அவரது கையைப் பிடித்து, பார்கவி கையில் போட்டிருந்த மருதாணியைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறி கையை பிடித்து இழுத்துள்ளார். அப்போது தன் கையை விலக்க முயன்றபோது, அவர் பார்கவியை தன் பக்கம் இழுத்து இறுக்கமாக அணைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் பார்கவி, விலகிச் செல்ல முயன்றபோதிலும், குமார் அவரது இரு கன்னங்களிலும் முத்தமிட்டுக்கொண்டே, “கவலைப்படாதீர்கள் மா, பயப்படவும் வேண்டாம் மா” என்று மீண்டும் மீண்டும் கூறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தகாத முறையில் தொட்டதாகவும் அவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அதன் பின்னர், குமார் சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டுச் சென்றதாகவும், ஆனால் அதற்கு முன், தனக்கு 10-15 நிமிடங்கள் ஓய்வு நேரம் கிடைக்கும்போது தெரிவிக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு பார்கவியை பிடித்திருப்பதாகவும், அவருடன் இருக்க விரும்புவதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், குமாருக்கு எதிராக நடவடிக்கை கோரி அவர் அளித்த புகாரின் அடிப்படையில், அசோக் நகர் போலீசார், பிஎன்எஸ் சட்டத்தின் 74 (ஒரு பெண்ணின் மானபங்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் அவர் மீது தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்) மற்றும் 75 (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்