

மும்பையில் போவாயில் 25 வயதான விமானப் பணிப்பெண் ஒருவரையும் அவரது கணவரையும் பாதித்த 'கண் திருஷ்டியை' விரட்டுவதற்கான சடங்கு செய்வதாகக் கூறி, திருநங்கை போல் நடித்த நபர் ஒருவர் அவரது மூன்றாவது மாடி குடியிருப்புக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை நுழைந்ததைத் தொடர்ந்து, அப்பெண் அந்த நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போவாய் போலீசார், கல்வாவில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில், வீட்டுவசதி சங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் திருநங்கை போல் நடித்து இந்த பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டது அனில் ஷிண்டே (28) என்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்த நபரின் நடமாட்டத்தைக் கண்காணித்து, கடந்த புதன்கிழமை அதிகாலையில் அவரைக் கைது செய்துள்ளனர்.
குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த முழு குழுவும் ஈடுபடுத்தப்பட்டதை அடுத்து, நான்கு மணி நேரத்திற்குள் இந்த வழக்கு தீர்க்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு, குடியிருப்பை விட்டு வெளியேறும் முன் அனில் ஷிண்டே பாதிக்கப்பட்டவரிடமிருந்து 200 ரூபாயையும் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் தொடர்பான பிரிவுகளைத் தவிர, தற்போது காவலில் உள்ள ஷிண்டே மீது மாந்திரீகம் தொடர்பான சட்டப் பிரிவுகளையும் பயன்படுத்தப்போவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திருநங்கைகள் போல் நடித்து தனது குடும்பத்தினர் பிச்சை எடுப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், அந்த நபர் இதற்கு முன்பும் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பதைக் கண்டறிய அவரைக்குறித்த விவரங்களைச் சேகரித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது , மதியம் 12.20 மணிக்கும் 12.50 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், திருநங்கை போல் உடையணிந்த ஷிண்டே கட்டிடத்திற்குள் நுழைந்து, மாடிக்குச் செல்வதற்கு முன்பு பாதுகாப்பு ஊழியரின் நம்பிக்கையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது மூன்றாவது மாடி குடியிருப்பின் கதவைத் திறப்பதற்கு முன்பு, ஷிண்டே பல வீடுகளின் கதவைத் தட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
கண் திருஷ்டியை விரட்டுவதாகக் கூறி வீட்டிற்குள் நுழைந்த அவர், அப்பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக அருவருப்பான செயல்களில் ஈடுபட்டதாகவும், அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த பெண காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். ஆனால், ஆரம்பத்தில் "என்ன நடந்தது?" என்பதை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறியுள்ளார். ஒரு பெண் காவல்துறை அதிகாரி அவரிடம் தைரியமாகப் பேசி, அந்தச் சம்பவம் குறித்து முழுவதுமாக அறிந்துள்ளார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் குழு குற்றவாளியைத் தேடத் தொடங்கியுள்ளது. விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் பாதிக்கப்பட்ட பெண், புதன்கிழமை அன்று விடுப்பில் இருந்துள்ளார். மேலும், அவரது, கணவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணின் "குடும்பத்தைப் பாதிக்கும் கண் திருஷ்டியை நீக்கிவிட முடியும்" என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறியதால், அவரைத் தனது வீட்டிற்குள் நம்பி அனுமதித்ததாக அப்பெண் கூறியுள்ளார். மேலும் அப்பெண் தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை படுக்கையறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, தன் மீது தண்ணீர் தெளித்து, தலையில் கை வைத்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு, கண்களை மூடிக்கொண்டு படுக்கையில் படுக்குமாறு அவர் தன்னிடம் கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னர், தான் அலறியதாகவும், அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் தன்னிடம் இருந்து 200 ரூபாய் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்திற்குப் பிறகு மன அதிர்ச்சியில் இருந்த அந்தப் பெண், அழுதுகொண்டே இரவு சுமார் 11 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள ஒரு பெண் காவலர், அவர் சௌகரியமாக உணர்ந்து அந்தச் சம்பவத்தை விவரிக்க உதவியுள்ளார். இவ்விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, ஒரு காவல்துறை குழுவை அனுப்பியுள்ளார். மேலும், புலனாய்வாளர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, ஷிண்டே கட்டிடத்தை விட்டு வெளியேறி கல்வாவை நோக்கி ஒரு ரிக்ஷாவில் சென்றதைக் கண்டுபிடித்தனர்.
"குற்றத்தைச் செய்த பிறகு ஷிண்டே அந்த ரிக்ஷாவை நேரடியாக கல்வாவில் உள்ள ஒரு குடிசைப் பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது, என்று காவல்துறை தெரிவித்தது. மேலும் காவல்துறை சார்பில் "தங்களது குடியிருப்புகளுக்குள் அறிமுகமில்லாத நபர்களை அனுமதிக்க வேண்டாம்" என குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளதுடன், உள்ளே நுழைய முயலும் எவரின் அடையாளத்தையும் சரிபார்த்துக் கொள்ளுமாறும் வலுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்