க்ரைம்

'100 வருடங்களுக்கு மேல் தீர்க்கப்படாத வழக்கு!' - கள்ளத்தொடர்பினால் மரணங்கள் நிகழ்ந்ததா? அல்லது அமானுஷ்யம்தான் காரணமா? - திகிலூட்டு கொலை வழக்கு

வரலாற்றின் மிகவும் கொடூரமான மற்றும் தீர்க்கப்படாத வழக்கு. 100 வருடங்களுக்கு மேல் ஆகியும் போலீசாரால் தீர்க்கமுடியாமல் போன இந்த வழக்கின் பின்னணி என்ன?

Vinvizhi Leninton

ஜெர்மனியில் 1922 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு குளிரான வெள்ளிக்கிழமை இரவில், பவேரியாவின் கைஃபெக் என்ற சிறிய கிராமத்தில் உள்ள தங்களது பண்ணை வீட்டில், 63 வயதான ஆண்ட்ரியாஸ் க்ரூபர், அவரது மனைவி 72 வயதான செசிலியா, அவர்களது விதவையான மகள் 35 வயதான விக்டோரியா கேப்ரியல், விக்டோரியாவின் பிள்ளைகளான ஏழு வயதான செசிலியா மற்றும் இரண்டு வயதான ஜோசப், மற்றும் அவர்களது வீட்டு பணிப்பெண்ணான 44 வயதான மரியா பாம்கார்ட்னர் ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த குடும்பம், அக்கிராமத்தில் உள்ள தேவாலயத்திற்கு தவறாமல் சென்றுவிடுவர். மேலும், அந்த வீட்டில் உள்ள 35 வயதான விக்டோரியா கேப்ரியல் அந்த தேவாலயத்தில் பாடல்கள் பாடும் குழுவில் இருந்தார். 3 நாட்களாக அவர் தேவாலயத்திற்கு வரவில்லை என்றும், அந்த வீட்டில் இருந்த யாருமே வெளியில் வரவில்லை என்பதை தெரிந்துகொண்ட அக்கிராம மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கு கண்ட காட்சி அவர்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாக மாறியது.

வீட்டில் இருந்த அனைவரும் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்டு இறந்துகிடந்தனர். தொழுவத்தில், தேடுதல் குழுவினர் வைக்கோலால் மூடப்பட்டிருந்த, சிதைக்கப்பட்ட நான்கு உடல்களைக் கண்டெடுத்தனர். வீட்டிற்குள், அவர்கள் 2 வயது ஜோசப் மற்றும் பணிப்பெண் மரியா பாம்கார்ட்னர் ஆகியோரின் உடல்களைக் கண்டுபிடித்தனர். அந்த பணிப்பெண்ணிற்கு அதுதான் அந்த வீட்டில் முதல் நாள். செசிலியாவின் உடலில் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அறிகுறிகளும், தலையில் ஏழு அடிகள் விழுந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன. அவரது கணவர் ஆண்ட்ரியாஸின் முகம் முழுவதும் இரத்தத்தால் உறைந்திருந்தது, மேலும் அவரது கன்ன எலும்புகள் கிழிந்த நிலையில் இருந்தன. விக்டோரியாவின் மண்டை ஓடும் நொறுங்கியிருந்தது. அவரது தலையில் ஒன்பது "நட்சத்திர வடிவ" காயங்கள் இருந்தன, மேலும் அவரது முகத்தின் வலது பக்கம் ஒரு மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டிருந்தது. இளைய செசிலியாவின் கீழ்த்தாடை நொறுங்கியிருந்தது. இளைய செசிலியா தாக்குதலுக்குப் பிறகு பல மணிநேரம் உயிருடனும், அதிர்ச்சியிலும் இருந்திருக்கக்கூடும் என்று பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தை எதையோ பார்த்து பயந்தது போன்று தலைமுடியைக் கொத்துக்கொத்தாகப் பிடித்திருந்ததுபோலவே இறந்து கிடந்திருக்கிறது.

ஆரம்பத்தில் காவல்துறையினர், இதனை கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட யாரோ ஒருவர்தான் இதை செய்திருக்கவேண்டும் என்று கணித்தனர். ஆனால் வீட்டில் இருந்த பணம் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் அப்படியே இருந்தது. அதனால் இந்த கொலை எதற்காக நடந்தது? என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், கொலை நடந்ததிலிருந்து சிலநாட்கள் அந்த கொலையாளியோ, அதே வீட்டில் தங்கியிருந்து, உணவு சமைத்து சாப்பிட்டுள்ளான். மேலும், அந்த வீட்டின் தொழுவத்தில் இருந்த கால்நடைகளுக்கு தீவனம் தருவது, தண்ணீர் தருவது போன்ற அனைத்தையும் செய்து வந்திருக்கிறான். இந்த கொலைக்கு காரணமாக கருதி, போலீசார் பலரை கைது செய்தனர். ஆனால், இன்று வரை அந்த கொலையை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.

அமானுஷ்யமா காரணம்?:

இந்த வீட்டில் கொலை நடப்பதற்கு முன்பு அங்கு வேலை செய்த பணிப்பெண்ணை விசாரணைக்கு அழைத்தனர். அந்த பெண் கூறியது காவல்துறையை மேலும், அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது, அந்த பெண் வேலை செய்த அந்த வீட்டில், யாரோ தன்னை கண்காணிப்பது போன்றும், அடிக்கடி விசித்திரமாக கேட்கும் காலடி சத்தமும், பரணில் இருந்து அமானுஷ்ய சத்தம் வந்த வண்ணனும் இருந்துள்ளது. மேலும், தொழுவத்தில் இருந்து வேறொரு மொழியில் உள்ள ஒரு செய்தித்தாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வீட்டிற்கு சொந்தமான 2 சாவிகளில் ஒன்று காணாமல் போயிருந்தது. அந்த பணிப்பெண் இந்த விஷயம் குறித்து ஆண்ட்ரியாஸிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவரோ இதை எதையும் நம்பவில்லை. இதனால் அந்த வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார் அந்த பணிப்பெண்.

யார் கொலையாளி?:

போலீசார் பலரையும் இந்த கொடூர கொலைவழக்கிற்காக சந்தேகித்தனர். அதில் முதலாவது, விக்டோரியாவின் கணவர் முதலாம் உலகப்போரில் இறக்கவில்லை என்றும் அவர்தான், தன் மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து அறிந்து வந்து இந்த கொடூர கொலையை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டார் என்பதற்கான சான்றாக, உடலை பார்த்த பலரும் சாட்சிகளை கூறினார். அதன் பின்பு, அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ் ஸ்லிட்டன்பாயர் என்பவருக்கும், விக்டோரியாவிற்கும் ஒரு உறவு இருந்து வந்திருக்கிறது. மேலும், இருவரும் பகிரங்கமாக ஜோசப்பைத் தங்கள் குழந்தை என்று குறிப்பிட்டனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஆண்ட்ரியாஸ் தலையிட்டதால், அவர்களின் உறவு முடிவுக்கு வந்தது. ஸ்லிட்டன்பாயர் இறுதியில் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த கொலையை ஸ்லிட்டன்பாயர் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். அதற்கு ஏற்றார்போல் அவரது நடவடிக்கைகளும் இருந்தன. சடலத்தை எந்த ஒரு அருவறுப்புமின்றி அவர் கையாண்ட விதமும், அந்த வீட்டை பற்றியும், அதை சுற்றியுள்ள வழிகள் பற்றியும் நன்கு அறிந்தவர் என்று அவரை விசாரித்தனர். ஆனால் வலுவான காரணங்கள் ஏதுமின்றி அவர் இந்த விசாரைணயில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், அந்த பகுதியில் ஒரு காலடித்தடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த காலடித்தடம் வீட்டு உறுப்பினர்கள் யாருடனும் ஒத்துப்போகவில்லை. மேலும், அந்த காலடித்தடம் ஒரு திசையை நோக்கி சென்றியிருக்கிறதே தவிர திரும்பி வரவில்லை. இது காவல்துறையினரை மேலும் குழப்பியது. இது தவிர்த்து ஆண்ட்ரியாஸ் மற்றும் விக்டோரியா இருவரும் முறையற்ற உறவில் இருந்ததாகவும் ஒரு வதந்தி பரவி வந்தது. மேலும், ஜோசப், ஆண்ட்ரியாஸின் குழந்தையாகவும் இருக்கலாம் என்றும் ஒரு வதந்தி பரவி வந்தது வழக்கை வேறொரு பாதையை நோக்கி செல்ல வைத்தது. 2007ல் ஃபர்ஸ்டன்ஃபெல்ட்ப்ரூக் காவல் அகாடமி, ஹிண்டர்கைஃபெக் கொலைகளை ஒரு தீர்க்கப்படாத வழக்காக எடுத்துக்கொண்டது.

இருப்பினும், குற்றத்துடன் தொடர்புடையவர்களின் எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஏதோ ஒரு உண்மையை காவல்துறையினர் இரகசியமாகவே வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கொலைகளை யார் செய்தார்கள்?, ஏன் செய்தார்கள்? என்பதைப் பொதுமக்கள் ஒருபோதும் அறிந்துகொள்ள வாய்ப்பில்லை என்றே புலப்படுகிறது. அவர்கள் மறைத்து வைத்திருக்கும் ஏதோ ஒரு ரகசியம் அவர்களோடு சேர்ந்து கல்லறையில் புதைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.