க்ரைம்

பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தை.. பணத்திற்காக விற்ற பெற்றோர்! பின்னணியில் புரோக்கர்களா?

ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் உள்ள...

Muthu Lakshmi

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே உள்ள சந்தனக்காடு கிராமத்தை  சேர்ந்தவர் சீனிவாசன், கவிதா தம்பதியர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் உள்ளனர். தறி தொழில் செய்து வரும் இவர்கள் வறுமையில் குடும்பத்தை நடத்த முடியாத நிலையில், 3 குழந்தைகளையும் வளர்த்து வந்தனர். இந்நிலையில் மனைவி கவிதா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 19 ஆம் தேதி அரியானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இவர்களுக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

தங்களின் வறுமை காரணமாக இந்த குழந்தையை வளர்க்க முடியாது என கருதிய தம்பதியர், குழந்தையை ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேறொரு தம்பதியருக்கு உறவினர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்துள்ளனர். சட்டவிரோதமாக நடந்த இந்த குழந்தை விற்பனை குறித்து கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் சிலம்பரசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நேற்று சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறை, கவிதா மற்றும் சீனிவாசன்  தம்பதியரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை 2 லட்சம் ரூபாய்க்கு விற்றது தெரியவந்துள்ளது. அதனையடுத்து குழந்தையை வாங்கிச் சென்ற ராமநாதபுரம் தம்பதியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் குழந்தையை ஒப்படைக்க தயாராக இருப்பதாக ராமநாதபுரத்தில் இருந்து காரில் குழந்தையை சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வறுமையில் வாடும் சீனிவாசன் கவிதா தம்பதியினர் நேரடியாக குழந்தையை விட்டனரா?  இல்லை குழந்தை வாங்கி விற்கும் புரோக்கர்கள் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை விற்பது, வாங்குவது இரண்டுமே இந்திய சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எந்தவொரு காரணங்களுக்காகவும் இந்த குழந்தை விற்பனை நடக்கக்கூடாது. இது போல் குற்ற செயல்களில் ஈடுபடும் பெற்றோர், உறவினர்கள் மற்றும்  மருத்துவமனை ஊழியர்களுக்கு BNS சட்டத்தின் கீழ் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.