மசாஜ் செய்வதாக கூறி மகளிடம் அத்துமீறிய தந்தை! தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமி.. குற்றவாளியான தாய்?

இரவு நேரங்களில் பெற்றோரின் அறையில் தூங்குவது வழக்கமாக இருந்துள்ளது
sexual assault
Published on
Updated on
2 min read

சொந்த மகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல், உடல் மற்றும் மனரீதியான துன்புறுத்தல்களை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதியருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குழந்தைகள் மீதான குடும்ப வன்முறையின் கொடூர முகத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

ஸ்பெயினின் வெலெஸ்-மலாகா பகுதியைச் சேர்ந்த இந்த தம்பதியரின் மகளுக்கு 13 வயதாக இருந்தபோது தொடங்கிய துன்புறுத்தல்கள், 2020 முதல் 2023 வரை தொடர்ந்து நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கை விசாரித்த மலகா மாகாண நீதிமன்றம், தந்தையை பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காகவும், தாயை உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் குற்றத்திற்காகவும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, 2020 நவம்பரில் முதல் சம்பவம் நடந்துள்ளது. இருட்டுக்கு பயந்த சிறுமி, இரவு நேரங்களில் பெற்றோரின் அறையில் தூங்குவது வழக்கமாக இருந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தந்தை சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டுள்ளார். சிறுமியின் தாய் இரவு நேரங்களில் வேலைக்கு செல்லுபவர், என்பதால் அந்த நேரத்தை பயன்படுத்தி  மசாஜ் செய்வதாகக் கூறி தூங்கிக் கொண்டிருந்த மகளிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

சில மாதங்களுக்குப் பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்த நிலையில், சிறுமி அச்சத்துடனும் மனவேதனையுடனும் அந்த அறையை விட்டு ஓடியுள்ளார். பின்னர் தன் தாயிடம் நடந்தவற்றை தெரிவித்து அழுதபடி உதவி கோரியுள்ளார். இதற்கிடையில், தாயும் தனது மகளை அடிக்கடி தாக்கி வந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பெல்ட், சார்ஜர் கேபிள், சமையல் பொருட்கள் மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்தி தாக்கியதோடு, “நீ பயனற்றவள்”, “எதற்கும் லாயக்கற்றவள்” போன்ற இழிவான வார்த்தைகளால் அவளை மனரீதியாகவும் துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 மார்ச் மாதத்தில் பள்ளி ஆலோசகரிடம் சிறுமி கண்ணீர் மல்க தனது வேதனைகளை பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டன. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து அகற்றினர். விசாரணையின் போது, சிறுமியின் சாட்சியத்தை மறைக்க முயன்ற பெற்றோரின் வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது. மருத்துவ மற்றும் உளவியல் அறிக்கைகள், பள்ளி நிர்வாகத்தின் தகவல்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளின் ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆதாரங்கள் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீர்ப்பின் ஒரு பகுதியாக, தந்தைக்கும் தாய்க்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மகளிடம் நெருங்கவோ அல்லது தொடர்புகொள்ளவோ தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தந்தை சிறார்களுடன் தொடர்புடைய எந்த தொழிலிலும் பணியாற்றக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, குழந்தைகள் மீதான எந்தவிதமான வன்முறையும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com