ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலத்திற்குட்பட்ட கங்குந்தி ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த 1.10.2026 தேதி அன்று வனவர் பாபாஜான் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு புதியதாக குழிதோண்டப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதை கண்டு, இது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு வனவர் பாபாஜான் தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குப்பம் தாசில்தார் ரமேஷ்பாபு, குப்பம் காவல் ஆய்வாளர் ஜி.டி. நாயுடு உள்ளிட்ட அதிகாரிகள் அருகில் உள்ள கிராம மக்களின் உதவியுடன் குழியை தோண்டி பார்த்தபோது அதில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டது. மேலும் சடலத்தை மீட்டு சோதனை செய்தபோது, அவர் அணிந்திருந்த சட்டை காலரில் குமார் டைலர் என்று பேட்ச் இருந்தது. மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த, திருப்பத்தூர் தர்மராஜா கோயில் பகுதியில் உள்ள சிவகுமார் என்பவரின் நகை அடகு ரசீதை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அந்த ஆண் சடலத்தை குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் நகைகடன் ரசீதியை கொண்டு அதன் அடிப்படையில் குப்பம் போலீசார் தமிழ்நாடு, திருப்பத்தூர் மாவட்டம் தர்மராஜா கோயில் தெரு பகுதியில் உள்ள சிவகுமார் நகை அடகு கடைக்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் சடலமாக மீட்கப்பட்டவர் சசிகுமார் என்பது தெரியவந்தது. இவர் திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவருடைய மனைவி சில நாட்களாக லக்ஷ்மியை காணவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும் லட்சுமியின் தந்தை மாணிக்கம் திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில், தனது மக்களை காணவில்லை புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து குரிசிலாப்பட்டு காவல் நிலைய போலீசாருடன் இணைந்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார், கரம்பூர் பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் சடலமாக மீட்கப்பட்ட சசிகுமார் என்பவருக்கும் கொடுமாம்பள்ளி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகள் லட்சுமி (34) என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது தெரியவந்தது.
மேலும் ஆந்திர மாநிலம் குப்பம் மண்டலத்திற்குட்பட்ட துருகம் பகுதியை சேர்ந்த மணிவீரன் என்பவரின் மகன் பிரபுதேவா (32) என்பவர் கரம்பூர் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வந்து ரேஷன் அரிசிகளை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி வந்ததும், அப்போது பிரபுதேவாவிற்கும் லஷ்மிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு பழகி வந்ததும் தெரிய வந்தது. இவர்களின் கள்ளக்காதல் தீவிரமடைந்த நிலையில் ஐந்து முறை லட்சுமி பிரபுதேவாவுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். பின்னர் இது தொடர்பாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சசிகுமார் தன்னுடைய இரண்டு மகன்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு “தன்னுடைய பிள்ளைகளுக்கு அம்மா வேண்டும்” என கூறி லட்சுமியுடன் மீண்டும் வாழ முடிவு செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று சசிகுமாரின் பாட்டி சிவகாமி என்பவரிடம் டிராக்டருக்கு லோன் கட்ட வேண்டும் எனக்கூறி காதில் அணிந்திருந்த கம்மலை வாங்கிகொண்டு திருப்பத்தூர் தர்மராஜா கோயில் தெரு பகுதியில் உள்ள சிவக்குமார் நகை அடகு கடையில் சசிகுமார் மற்றும் லட்சுமி ஆகிய இருவரும் கம்மலை அடகு வைத்துள்ளனர். அந்த பணம் வாங்கி கொண்டு ஆந்திர மாநிலம் குப்பம் கங்குந்தி வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து சசிக்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால் மனைவி லட்சுமி கணவன் சசிக்குமாருக்கு மது பாட்டில் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் சசிகுமாருக்கு மது போதை அதிகமான நிலையில் அங்கு இருந்த மனைவி லட்சுமி தன்னுடைய கள்ளக்காதலன் பிரபுதேவாவை வரவழைத்து, இருவரும் சேர்ந்து பீர் பாட்டிலால் சசிக்குமாரை தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் சசிகுமார் உடலை கங்குந்தி வனப்பகுதியில் புதைத்துவிட்டு சசிகுமாரின் மனைவி லட்சுமி மற்றும் கள்ளக்காதலன் பிரபுதேவா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் பெங்களூர் சென்று அங்கிருந்து ஹைதராபாத் மற்றும் சேலம் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்ததும் அதற்கிடையில் 5 சிம் கார்டுகளை பயன்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
விசாரணைக்கு பிறகு, இருவரையும் நேற்று வேலூர் பகுதியில் கைது செய்த குப்பம் போலீசார் அவர்களை ஆந்திர மாநிலம் குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொலை செய்து வனப்பகுதியில் புதைத்துவிட்டு கள்ளக்காதலுடன் இருசக்கர வாகனத்தில் உல்லாசமாக சுற்றி திரிந்த சம்பவம் திருப்பத்தூர் மற்றும் குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.