தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் நகரின் மிலிட்டரி காலனியில் உள்ள தனது வீட்டில், திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்த சந்தேகத்தின் பேரில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 50 வயதான ராணுவ சுபேதார் பி. குமார் கௌட், ஜூன் 7 அன்று அவரது மனைவி மற்றும் மாமனார், மாமியார் ஆகியோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சுபேதாரின் மனைவி பத்மா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் கடந்த திங்களன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அண்டை வீட்டார் மற்றும் உறவினர்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மேலும் ஏழு பேர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேடக் நகர காவல்துறையின்படி, மதியம் 1.30 மணிக்கு, குமார் கௌடின் மாமனார் ராம கிஸ்டா கௌட், பாதுகாப்புப் படை வீரரின் மூத்த சகோதரரான பி. ரவீந்தர் கௌடைத் தொலைபேசியில் அழைத்து, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவமனைக்கு மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரவீந்தர் மேடக் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, குமார் கௌட் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார். குமாரின் உடலில் பல காயங்கள் இருப்பதைக் கவனித்த ரவீந்தர், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். போலீசார் மருத்துவமனைக்குச் சென்று, பிரேதப் பரிசோதனைக்காக உடலை அப்புறப்படுத்தியுள்ளனர். அவர்கள் குமாரின் மனைவி பத்மா, அவரது பெற்றோர்களான ரமா கிஸ்டா கௌட் மற்றும் யெல்லம்மா, மற்றும் சகோதரர் சந்தோஷ் ஆகியோரை விசாரணைக்காக தற்போது கைது செய்துள்ளனர்.
குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் ஆரம்பத்தில் குமாரின் உறவினர்களைத் தவறாக வழிநடத்த முயன்றதாக மேடக் நகர ஆய்வாளர் டி. மகேஷ் தெரிவித்தார். "ஆனால், குடும்பத்தினர் குமாரின் உடலில் இருந்த காயங்களைக் கவனித்து எங்களை அணுகினர்," என்று ஆய்வாளர் மேலும் கூறினார்.
காவல்துறையிடம் அளித்த புகாரில் ரவிந்தர் கௌட், குமார் சுமார் 30 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியதாகவும், கடைசியாக உத்தரகாண்டில் பணியமர்த்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், குமார் ஒரு மாதத்திற்கு முன்பு விடுப்பில் வீட்டிற்கு வந்திருக்கிறார். "குமாரின் மனைவி பத்மா, அவரது பெற்றோர்களான ரமா கிஸ்டா கௌட் மற்றும் யெல்லம்மா, மற்றும் அவரது சகோதரர் சந்தோஷ் ஆகியோர், குமாருக்கு மற்ற பெண்களுடன் முறையற்ற உறவு இருப்பதாகக் குற்றம் சாட்டி அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர்.
மேலும், "சனிக்கிழமை இரவு என் சகோதரர் வீட்டில் இருந்தபோது, அவர்கள் அவரைத் தாக்கி கொலை செய்துவிட்டனர்," என்று ரவீந்தர் தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணையின் போது, இரவு சுமார் 7 மணியளவில் சிசிடிவி காட்சியில் குமார் இரண்டு பெண்களுடன் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டுள்ளனர். இதனையடுத்து, பத்மா, அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. "குமாரின் வீட்டில் மூன்று சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பத்மாவிற்கும் அதன் காட்சிகளைப் பார்க்கும் வசதி இருந்தது. சனிக்கிழமை இரவு குமாருடன் இரண்டு பெண்கள் வீட்டிற்குள் நுழைவதை அவரது மனைவி பார்த்தார்," என்று ஆய்வாளர் இதுகுறித்து கூறியுள்ளார்.
இரவு 9.30 மணிக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலும் ஏழு பேருடன் இரண்டு கார்களில் குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் குமாரை இரண்டு பெண்களுடன் கையும் களவுமாகப் பிடித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அப்பெண்களைத் தாக்கிய பின்னர், அவர்களை விரட்டி அடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குமாரை தடிகளால் தாக்கியதில், காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, மறுநாள் அவரை மருத்துவமனைக்கு மாற்றினர். மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோதே குமார் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்," என்று ஆய்வாளர் கூறினார்.
"பத்மாவின் குடும்பத்தின் அண்டை வீட்டாரும் உறவினர்களுமான மற்ற ஏழு குற்றவாளிகளும் தலைமறைவாக உள்ளனர்," என ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.